1. நாங்கள் பெறக்கூடிய “அத்தனை உயர்ந்த சக்திகளும்” எங்கள் தாய் தந்தையருக்கு முதலில் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா
2. உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் முன்னோர்களின் உயிராத்மாக்கள் அனைத்தையும் நாங்கள் விண்ணிலே செலுத்தி... அவர்கள் அனைவரையும் பிறவி இல்லை என்ற நிலை அடையச் செய்து... “சப்தரிஷிகளாக” ஆக்கிப் பேரானந்த நிலை பெறச் செய்ய வேண்டும் ஈஸ்வரா
3. தாய் தந்தை அருளால் முன்னோர்களின் அருளால் ஞானகுருவின் அருள் சக்திகளை நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா
4. ஞானகுரு பதிவு செய்யும் உபதேசக் கருத்துக்களை ஒவ்வொரு நாளும் “திரும்பத் திரும்ப... திரும்பத் திரும்பக் கேட்டு” ஆழமாக எங்களுக்குள் பதிவு செய்து... உபதேசத்தில் சொன்னபடி நாங்கள் நடந்து... அதை வாழ்க்கையில் கடைப்பிடித்து... ஞானகுரு காட்டியபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை “காற்றிலிருந்து...” சுவாசிக்க வேண்டும் ஈஸ்வரா
5. ஞானகுரு காட்டிய அருள் வழியில் கணவன் மனைவி நாங்கள் ஒன்றி வாழ்ந்து “கணவனை உயர்த்தும் சக்தியாகவும்... மனைவியை உயர்த்தும் சக்தியாகவும்...” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
6. எங்கள் குழந்தைகள் அனைவரையும் “அகஸ்தியரைப் போன்ற மெய் ஞானியாக வளர்க்கும் அருள் சக்தி” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
7. நாங்கள் பார்க்கும் ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக வணங்கி... உடலைக் கோவிலாக மதித்து... உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களையும் தெய்வமாக எண்ணி... அவர்கள் அனைவரையும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையச் செய்து... மகிழ்ந்து வாழச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
8. ஞானகுரு சொல்லும் முறைப்படி எங்கள் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி... ஒவ்வொரு நொடியிலும் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து... “ஈஸ்வரா...!” என்று புருவ மத்தியில் அடிக்கடி அடிக்கடி எண்ணி... உயிர் வழிச் சுவாசமாக விண்ணிலிருக்கும் “மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு” அவர்கள் துணையால் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் எங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களின் முகப்பிலும் இணைத்து... பேரருள் பேரொளியாகப் பெருக்கி... எங்களிடமிருந்து வெளிப்படும் மூச்சு பார்வை சொல் அனைத்துமே பேரருள் பேரொளியாக இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்ந்து... விஞ்ஞானத்தால் உருவான நச்சுத் தன்மைகளைக் கனியச் செய்து “நன்மை பயக்கும் சக்தியாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்...” ஈஸ்வரா
9. குறை காணும் எண்ணத்தை விடுத்துக் குறைகளை எங்கே கண்டாலும் அந்தக் “குறைகளை நிவர்த்திக்கும் சக்தியாக” எங்களுக்குள் வளர்ந்து அனைவரையும் அருள் ஞானம் பெறச் செய்யும் அருள் சக்தியாக நாங்கள் வளர்ந்திட வேண்டும் ஈஸ்வரா
10. ஞானகுரு காட்டிய அருள் வழியில் நாங்கள் வழி நடந்து... மற்றவர்களுக்கும் குரு காட்டும் அருள் வழியினைப் போதிக்கும் சக்தி பெற்றவர்களாக நாங்கள் வளர வேண்டும் ஈஸ்வரா
11. ஞானகுரு ஒலி நாடாவின் மூலம் கொடுத்த உபதேசங்களைப் பதிவாக்கி... அந்த அருள் வழியை நாங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து... “ஈஸ்வரபட்டரின் பரிபாஷைகளை உணர்ந்து...” ஞானகுரு அனுபவபூர்வமாக பெற்ற அத்தனை உண்மைகளையும் உணர்ந்து... “ஞானகுரு கொடுக்கும் நுண்ணிய உணர்வுகள் அனைத்தையும் அறியும் ஆற்றலும் பெற்று...” மற்றவர்களுக்கும் அதைக் கிடைக்கச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
12. உலகில் நடக்கும் அசம்பாவிதங்களோ அதிர்ச்சியான நிகழ்ச்சிகளோ எங்களுக்குள் பதிவாகக் கூடாது ஈஸ்வரா... அறியாது அதை நாங்கள் கேட்கவோ பார்க்கவோ நேர்ந்தாலும் உடனடியாக நாங்கள் ஆத்ம சுத்தி செய்து... “அதை இயக்கவிடாது தடுக்கும் அருள் சக்தி” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
13. எங்கள் பார்வையால் சொல்லால் செயலால் மூச்சால் பிறருடைய தீமைகள் அகன்று... நோய்கள் அகன்று... உலகில் படர்ந்து கொண்டிருக்கும் சர்வ நச்சுத் தன்மைகளையும் அகற்றச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
14. ஞானகுரு காட்டும் நெறியில் உத்தமஞானியாக நாங்கள் வளர்ந்து ஊரையும் உலகையும் காக்கக்கூடிய சக்தியாக... உலகுக்கு எடுத்துக் காட்டாக வளர்ந்திட வேண்டும் ஈஸ்வரா
15. “ஞானகுருவின் அருள் எங்களுக்குள் வந்து...” உலக மக்கள் அனைவரையும் காக்கும் சக்தியாக நாங்கள் வளர வேண்டும் ஈஸ்வரா
16. கருவுற்ற தாயின் வயிற்றில் வளரும் சிசுக்களை எல்லாம் “உலக இருளை அகற்றும் ஞான சக்தி பெற்றவர்களாக... அகஸ்தியராக உருவாக்ககூடிய சக்தி...” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
17. எந்த நேரம் எந்த நிமிடம் எங்கள் உடலை விட்டு உயிர் பிரிய நேர்ந்தாலும்... “யாருடைய ஈர்ப்பிலும் நாங்கள் சிக்காது...” ஏகாந்தமாக சப்தரிஷி மண்டல எல்லையை நாங்கள் அடைய வேண்டும் ஈஸ்வரா
18. மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசிப்போம்... எங்கள் மூச்சலைகளை “அருள் மணங்களாக” வெளிப்படுத்துவோம்... மகரிஷிகளின் அருள் சக்திகளைக் “கூட்டமைப்பாக” இந்தக் காற்று மண்டலம் முழுவதும் பரவச் செய்வோம். மகரிஷிகள் வேறல்ல... நாம் வேறல்ல... என்ற நிலையில் “அவர்களுடன் இணைந்து தியானிப்போம்... தவமிருப்போம்...”
19. இந்தப் பரமாத்மாவைத் தூய்மைப்படுத்தி... நம் ஆன்மாவைப் புனிதப்படுத்தி... உடலில் உள்ள அனைத்து ஜீவான்மாக்களையும் ஒளியாக்கி... நம் உயிராத்மாவைப் பேரருள் பேரொளியாக ஆக்குவோம். உலகில் உள்ள ஒவ்வொரு உயிராத்மாவையும் புனிதம் பெறச் செய்வோம்
20. உடலை விட்டுப் பிரிந்து சென்று... இந்தக் காற்று மண்டலத்தில் சுழன்று கொண்டுள்ள அத்தனை உயிரான்மாக்களையும்... “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் துணை கொண்டு உந்தித் தள்ளி...” சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்
21. ஒளியான பிரபஞ்சத்தை உருவாக்குவோம்... மெய் உலகைப் படைப்போம்...!