நீ வணங்கும்
1.முருகா என்னும் போகரும்…
2.ஈஸ்வரா என்னும் ஈஸ்வரபட்டரும்…
3.வெங்கடாஜலபதி என்னும் பாலாஜி உருவில் வந்த பல கோடி நாமங்கள் பெற்றிட்ட கொங்கணவரும்…
4.கொங்கண மகாதேவரும்… சித்தர்களும் ஞானிகளும்…
5.உன் அறிவுக்கு எட்டாத இந்த உலகில் எல்லாப் பாகங்களிலும் தோன்றி இந்நிலையில் இருக்கும் சித்தாதி சித்தர்களும் ஞானாதி ஞானியர்களும்
6.ஞான ரிஷிகளும் சப்தரிஷிகளும் அருள் சக்தி பெற்று சூட்சம உலகில் ஒளியாக வாழுபவர்கள் தான்…!
அவர்களின் நல் உபதேசத்தைப் பெற்றவர்கள் மற்றவர்கள் நிலைக்குப் புரிந்திடச் செய்திடாமல் சில உபதேசங்களை மட்டுமே மனிதர்களுக்குப் புகட்டினர்.
1.உண்மையின் உயிர் இரகசியத்தை இந்த உலக மக்களுக்குப் புரிந்திடச் செய்யாமல்
2.ஒருவர் எழுதியதைப் பிறிதொருவர் மாற்றி எழுதி
3.தன் தன் ஜீவ வழிக்குப் பொருள் பெற்றிட
4.உலகத் தன்மையையே மறைத்துவிட்டார்கள்… மாற்றிவிட்டார்கள்.
தியானம் என்றாலே பெரும் கடினமானது… என்றும் எல்லோராலும் அதைப் பெற முடியாது… என்ற ஒரு கடினத் தன்மையை மனிதர்களின் மனதிலே ஊன்றச் செய்து விட்டனர்.
சாதாரண வாழ்க்கை வாழும் மனிதனால் அது சாத்தியமில்லை என்ற அளவுக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.
ஆண்டவன் என்றாலே “யார்…?” என்று புரியாத நிலையில் தெருவின் மூலைக்கும் ஆற்றுப் படுகையின் படிகளில் எல்லாம் அரச மரத்தை நட்டு
1.விநாயகர் என்ற உருவத்தைப் பதித்து
2.அரச மரத்தைச் சுற்றினாலே நீ அருள் பெறுவாய்…! என்ற வேதத்தை ஊன்றிவிட்டார்கள்.
கடவுள் என்றாலே கல் தான்…! கல் என்ன செய்யும்..? என்ற நிலையில் கடவுள் இல்லை…! என்று ஒரு சாரார் நம்பும்படிச் செய்து விட்டார்கள்.
ஆனால்
1.கடவுளைச் சென்று வேண்டுபவர்களும்
2.தன்னுள் தான் கடவுள் உள்ளான்…! என்பதை மறந்து விட்டனர்.
முருகனுக்கு இரண்டு மனைவிகள் மூத்தவள் வெள்ளை இளையவள் கருப்பு. முருகனுக்கே இரண்டு மனைவிகள் உள்ள பொழுது எனக்கு மட்டும் ஏன் தடை…! என்ற வாதங்களைப் பல ரூபத்தில் எழுப்பிக் கொண்டுதான் அந்தக் கடவுளையே வேண்டுகிறார்கள்.
தன்னுள் இருக்கும் கடவுளையே மறந்து அவன் முன்னோர்கள் கதை கட்டிய கடவுளைத் தான் வணங்குகிறார்கள்… தன் வழிக்கு உகந்தபடி…!
புரிகிறதா…?
முருகனின் மூவுலக அருளையே மறந்து.. அவன் உருவில் உள்ள ஆறு குணங்களையும் மறந்து… முருகனுக்குப் போகரின் வழியில் அளித்திட்ட உருவ அமைப்பையே எந்நிலைக்கு அந்த உருவை அப்போகர் நிறுவினார்…? என்ற நிலையையே மறந்து… தன் வழிக்குப் பல கதைகளைச் சொல்லித் தெருத் தெருவாக முருகன் கதையைப் பெரும் கூத்தாக்கிவிட்டார்கள்.
இக்கலியில் வந்த இக்கலியின் மனிதர்கள்… “இவர்கள் நிலையே இவர்களுக்குப் புரியவில்லை…!” அழியும் உடல்… அழியும் உடல்… என்கிறார்கள். அழியும் உடலல்ல இவ்வாண்டவன் அருளிட்ட இந்த உடல் எல்லாம்.
உலகத் தன்மை அழிவதில்லை. பல நிலைகளைத் தான் இந்த உலகம் பெறுகிறது. உலக நிலையில் மாறுபட்டு மாறுபட்டுச் சுற்றிக் கொண்டே வருகிறது உலகம்.
1.உலகம் என்றென்றும் அழிவதில்லை…
2.காலங்கள் தான் அழிகின்றன... கால நிலைகள் அழிகின்றன.
அழியாத இந்த உலகம் பல அவதாரங்களை மாற்றிக் கொண்டே முதலில் ஆரம்பித்த நிலைக்கே வருகிறது. பிறகும் பல அவதாரங்களை எடுத்துக் கொண்டே சுற்றிக் கொண்டு வருகிறது.
அச்சூரியன் நிலை என்று அஸ்தமிக்கின்றதோ அன்று தான் இந்த உலகம் அழியும்… உயிரணுக்களும் அழியும்… மனிதனும் அழிவான்...!
ஒவ்வொரு மனிதனும் சுவாச நிலை என்ன…? என்று புரிந்து கொண்டால்
1.இவ்வுயிருடனே என்றுமே அழியாத நிலையில் வாழலாம்.
2.அதற்குத்தான் இந்தப் பாட நிலைகள் எல்லாமே…!