எதை எண்ணி ஏங்கி நீங்கள் வந்தீர்களோ அந்த ஏக்கத்திற்கொப்ப உயர்ந்த ஞானிகளின் அருள் உங்களுக்குள் படரும். துன்பத்தை விளைவிக்கும் நோயோ துன்பத்தை விளைவிக்கும் சொல்லோ அது எல்லாம் நீங்க வேண்டும் என்று தான் உங்களுக்கு நான் (ஞானகுரு) அருளாசி கொடுக்கின்றேன். அதே உணர்வுடன் நீங்கள் எண்ணி அதைப் பெற்றால் அந்த பலனைப் பெற முடியும்.
மாம்பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அதை வாங்கக் கடைக்கு அந்த உணர்வு உங்களை அழைத்துச் செல்கிறது.
அதே போல்
1.மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடலுக்குள் படர வேண்டும்
2.எங்கள் உடல் நோய் மன நோய் நீங்க வேண்டும்
3.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்
4.எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று ஏங்கினால்
5.நான் கொடுக்கும் அந்த அருள் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.
அதை விட்டுவிட்டு சாமி.....! என் துன்பம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறதே… நீங்கள் தான் கடவுளாக இருக்கிறீர்கள்… என்று என் காலில் விழுந்தீர்கள் (அடிபணிந்தீர்கள்) என்றால்
1.உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்கள்
2.நான் உபதேசித்ததை வீணாக்குகிறீர்கள் என்று தான் அர்த்தம்.
பெரியவர் என்று எண்ணி சாமியை (ஞானகுரு) உயர்த்தி விட்டு உங்களைத் தாழ்த்தி விடாதீர்கள். உங்கள் உணர்வின் உணர்வின் எண்ணத்தை உயர்த்துங்கள்.
1.மகரிஷிகளின் உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் செலுத்துங்கள்.
2.உங்களை அறியாது ஆட்டிப் படைக்கும் அந்தச் சக்தியைத் தாழ் பணியச் செய்யுங்கள்.
3.இது தான் ஆசீர்வாதம்…! எனக்குக் குருநாதர் காட்டிய நிலைகள் அது தான்.
மெய் ஒளியின் தன்மையை நமக்குள் கூட்டி நம் எண்ணம் சொல் செயல் அனைத்தையும் புனிதம் பெறச் செய்ய வேண்டும்.
ஒருவர் தீயதின் நிலைகளினால் துன்பப்படுகின்றார் என்றால் நம் சொல் அந்தத் தீயதிலிருந்து அவரை மீட்டி உயர்வான நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.
இந்த இயற்கையின் தன்மை நாம் எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை அது நிச்சயம் வேலை செய்யும்.
ஆகையினால் இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்கள் பொறுமையும் பொறுப்பு கொண்டு “மற்றவர்களை முந்தி விட்டு நாம் முதலில் ஆசி பெற வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு வராமல் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிறுத்தி வாருங்கள்.
எவ்வளவு நேரம் பொறுமையாக இருந்து…
1.மற்றவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
2.அந்த அத்தனை ஆற்றலையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.நீங்கள் இருந்த இடத்திலிருந்தே அந்தத் தகுதியை நீங்கள் பெறுகின்றீர்கள்.
அவசரப்பட்டோ… வேகமாக வீட்டுக்குப் போகவேண்டும் என்றோ… அந்த வேக உணர்வில் இல்லாதபடி இந்த அருளைப் பெற வேண்டும் என்று இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆகவே வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த அருள் உணர்வைப் பெறும் தகுதியைக் கூட்டி எல்லோரும் உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணுவதே நல்லது.
ஏனென்றால்… பிறர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால்
2.நாம் முதலில் நலமாகின்றோம்
3.அத்தகைய மெய் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து நம் சொல்லின் தன்மை நமக்கு நல்லதாகின்றது.
நம் சொல்லைப் பிறர் கேட்டாலும் அவர்கள் உள்ளங்களிலும் மகிழச் செய்கிறது. அந்த மகிழ்ச்சியின் தொடர் அவர் நம்முடன் இணைந்து செயல்படும் தன்மையும்
1.நாம் போகும் நிலைகளுக்குத் தடையின்றி வழிப்படுத்துவதற்கும்
2.தடையின்றி வியாபாரம் நடத்துவதற்கும்… நம் காரியங்களை நடத்துவதற்கும்
3.தடையற்ற நிலையில் நாம் என்றுமே மகிழ்ச்சியுடன் வாழ உதவியாகிறது.
ஆகையினால் ஆசீர்வாதம் வாங்கும் போது இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்குத் துன்பம் வந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் நலமும் வளமும் பெற வேண்டும் எங்கள் சொல்லுக்குள் இனிமை பெறவேண்டும் எங்கள் செயல் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பழக வேண்டும்.
வியாபாரத்திலேயோ குடும்பத்திலேயோ நல்லதை எண்ணி எங்கே போனாலும் இந்த முறைப்படி செய்யுங்கள்.
1.நான் (ஞானகுரு) கொடுக்கும் இந்த ஆசீர்வாதம் உங்களுக்குள் பின் தொடர்ந்து
2.எப்பொழுதுமே உங்களுக்கு உறுதுணையாக இருந்து உங்களைக் காக்கும்
3.உங்களுக்கு உயர்வினை ஊட்டும்… மெய் ஒளியை எட்டும் அந்தத் தகுதியையும் உருவாக்கிக் கொடுக்கும்.