ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 7, 2020

தியானத்தில் நம் உயிரிடம் முதன்மையாகக் கேட்க வேண்டிய எண்ணம் எது...?


தியானிக்கும் போதும் சரி... ஆத்ம சுத்தி செய்யும் போதும் சரி... இப்படி நோயாக இருக்கிறதே...! என்று எண்ணிக் கேட்காதீர்கள். நோய் நீங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தியானியுங்கள்.

அதே போல் என் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்... என் குழந்தைக்குத் திருமணம் ஆக வேண்டும்.. அந்த அருள் வேண்டும். எங்கள் தொழிலில் வளம் பெற வேண்டும்... எனக்கு வர வேண்டிய பாக்கி வர வேண்டும்... அதற்கு அருள் சக்தி வேண்டும்...! என்று இப்படிக் கேட்டு பழகுங்கள்.

அதை விட்டு விட்டுக் கடன் வாங்கியவன் கொடுக்கவே மாட்டேன் என்கிறான்... எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான்...! என்று எண்ணாதீர்கள்.

ஆனால் யாம் சொன்ன முறைப்படி...
1.அவர்களுக்கு வருமானம் வர வேண்டும்
2.வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்கும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று
3.மீண்டும் மீண்டும் நீங்கள் எண்ண எண்ண...
4.நமக்குள் இந்த உயர்ந்த நிலைகள் வர வர...
5.அவன் தன்னாலே வந்து பணத்தைக் கொடுக்கும் நிலையும் வரும்... பார்க்கலாம்.

உங்கள் எண்ணம் அவர்களை உயர்த்தும். அவர்களுக்கு வருவாய் வர வைக்கும். நமக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணம் வரும். கொஞ்சம் கால தாமதம் ஆகும்.

ஆனால் அவசரப்பட்டு... “ஆத்திரப்பட்டு விட்டோம்...” என்றால் கொடுக்க வேண்டும் என்று வருபவனையும் தடுத்து அவர்களும் வராதபடி ஆக்கி அந்தப் பாக்கியும் திரும்ப வராது.

கொடுக்க முடியவில்லையே...! என்று அவர்கள் மீண்டும் சங்கடப்பட்டால் அந்தச் சங்கடத்தால் அவர்களுக்கு வருமானம் வராது... நமக்கும் பணம் வராது... நாமும் சங்கடப்படுவோம்...!

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட்டு அவர்களுக்கு வரவு வரும்... அவர்கள் கொடுப்பார்கள்...! என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்குள் இது ஒவ்வொரு நொடியிலும் உயர்ந்ததாக வரும்.

ஆகவே நாம் பிறருடைய நிலைகளில் குறைகளை எண்ணாது அவர்கள் நிறைவு பெறுவர். நமக்கும் அது வரும் என்றும் நிறைவான உணர்வை எடுத்தால் நிறைவான உணர்வுகள் வெளிப்படுகின்றது. நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும் நிறைவான மனங்கள் வருகின்றது.

அவர்கள் வாழ்க்கையில் மகிழும் உணர்வுகளை அது இயக்கத் தொடங்குகின்றது.

1.ஆகவே நாம் அருள் வாழ்க்கை வாழ்வோம்
2.பேரானந்த நிலை பெற்று நமக்குள் ஏகாந்த நிலையாக
3.என்றும் ஏகாதசி என்ற பத்தாவது நிலைகள் அடைவோம்
4.அனைவரும் அருள் வாழ்க்கை வாழச் செய்யும் அந்தச் சக்தி உங்களிடம் பெருகும்.

உங்கள் பார்வையில் அனைவரும் நலம் பெறுவர். அனைவரும் ஆனந்தப்படும் அந்த நிலையை நீங்களும் கண்டு நீங்கள் உங்கள் உடலில் ஆனந்தம் என்ற பேரானந்த நிலையைப் பெறுங்கள்.

ஏனென்றால் பலர் என்ற நிலைகளில் நாம் ஆனந்தப்படும்போது பேரானந்தம் வருகின்றது. ஒருவர் என்ற நிலையில் ஆனந்தம் என்ற நிலை வருகின்றது. அவர் சொன்னார் இவர் சொன்னார் என்றால் பேரானந்தம் ஆகின்றது.

1.ஆகவே எல்லாம் பேரானந்தம் என்ற நிலைகளில் உங்கள் பார்வையில் அனைவரும் நலம் பெற வேண்டும்
2.அதைக் கண்டு நீங்கள் பேரானந்தப்படும் நிலை பெற வேண்டும் என்று பிரார்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).