ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 25, 2020

நாம் தெய்வமாக வேண்டும்


இன்று கம்ப்யூட்டரில் விஞ்ஞான அறிவு கொண்டு எல்லாவற்றையுமே ரெக்கார்ட் (RECORD) செய்து கொள்கின்றார்கள். பதிவானதை மீண்டும்  தட்டி விட்டவுடனே அதன் இயல்பைத் தெரிந்து கொள்கின்றார்கள்.

அதே போல் தான் மனிதர்கள் நாம் என்ன செய்கிறோம்...?

இரண்டு பேர் சண்டை போட்டால் அதை உற்றுப் பார்த்துப் பதிவு செய்து கொள்கிறோம். மீண்டும் அவனை எண்ணியவுடன் உடனே நமக்கும் கோபம் வருகிறது. நம் நல்ல காரியத்தைக் கெடுத்து விடுகிறது.

கோயிலுக்குச் சென்று வணங்குகின்றோம். நாம் எண்ணியபடி காரியங்கள் நடக்கவில்லை என்றால் அதையும் ரெக்கார்டு செய்கின்றோம்.

எப்படி...?

1.என்னத்தைச் சாமி கும்பிட்டு என்ன செய்ய..?
2.இந்த ரெக்கார்டைத் தட்டியதும் சோர்வடைந்து அடுத்து நல்லதை எடுக்க முடியாமல் போய்விடும்.

ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வுகளை எல்லாம் உடலில் உள்ள எலும்பிலே ரெக்கார்ட் செய்து வைத்து விடுகிறது. எண்ணிலடங்காத நிலைகள் நமக்குள் இருக்கிறது. இப்பொழுது விஞ்ஞானி எலெக்ட்ரானிக் என்ற நிலையில் அதை நிரூபிக்கின்றான்.

உதாரணமாக சண்டை போடுவதையும் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள்... குடும்பத்தில் வரும் கஷ்டப்படுவதையும் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள்.

வேறு ஒன்றும் தேவையில்லை... துணி எடுக்க நீங்கள் ஜவுளிக் கடைக்குப் போகின்றீர்கள். போகும்போது குழந்தைகளைச் சும்மாவது அடம்பிடிக்கச் சொல்லுங்கள்.

அப்போது ஏண்டா இப்படிப் போகும்போது..? என்று மனது சங்கடமாகும்.... அந்த  வெறுப்புணர்வு வரும். அந்த உணர்வு வந்த பின் அவர்களை நல்ல புடவை எடுத்து வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்...!

கடைக்குப் போனவுடனே அதே சங்கடமாக இருக்கும்...
1.இந்த வெறுப்பு உணர்வு தான் கண்ணில் வரும்
2.நல்ல புடவையாக எடுத்துப் போடப் போட இது வேண்டாம்... இது வேண்டாம்...! என்பார்கள்.
3.கடைசியில் வெறுப்புணர்வு கொண்டு சடைச்சுப் போய்... “சரி இதையாவது கொடுங்கள்...” என்று எடுத்து வருவார்கள்.

எடுத்து அப்புறம் வீட்டுக்கு வந்தபின் அடுத்தவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். துணியைப் பார்த்து “என்னங்க... போயும் போய் இந்தப் புடவையைத் தானா எடுத்தீர்கள்...!” என்று கேட்பார்கள்.

இல்லைங்க இது தான் நல்லது...! என்பார்கள்.

நன்றாகப் பாருங்கள்...! என்று மீண்டும் அடுத்தவர்கள் சொன்னாலும் அன்றைக்குத் தெரியாது. மறு நாள் காலையில் பாருங்கள்.

சனியன்...! போகும் போதே குறுக்கே வந்து பையன் நமக்கு இத்தனை தொல்லை கொடுத்து விட்டான். மீண்டும் “சனியன்: என்றுதான் சொல்வோம். யாரை..?

இந்த உணர்வுகள் அவனைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வெறுப்பு வரும். இப்படி அவனை எண்ணிவிட்டு அன்று காய்கறிகளை எடுத்து சமைக்க வேண்டும் என்றாலும் “காயை அறுக்கப் போனால்..” அந்த உணர்வின் தன்மை என்ன செய்யும்...?

காயை இப்படிப் பிடித்து இப்படிக் கொண்டு போவார்கள். இது தெரியாதபடி சாய்த்துவிடும். கையில் அறுத்துவிடும்...! அடக் கிரகமே...! இதைப் பார்க்கலாம்.

கீதையில் சொன்னது போல்... நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்...! இந்த உணர்வின் இயக்கமாக நம்மை எப்படி இயக்குகின்றது என்று பார்க்கலாம். இது எல்லாம் இந்த மனித வாழ்க்கையில் இயக்கப்படும் நிலைகள்.

பையனின் நிலைகள் இப்படித் தான் என்று ரெக்கார்ட் செய்கின்றீர்கள்... எப்பொழுது பார்த்தாலும் குறும்புத்தனம் தான் செய்கின்றான். யாரிடம் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான் என்று சொல்கிறீர்கள்.

மனைவி மேல் கணவனுக்குக் கொஞ்சம் வெறுப்பு வந்துவிட்டால் அதை ரெக்காட் செய்து கொள்கின்றார்கள். கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா...! என்பார்கள்.

அவர்கள் அடுப்பில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். சரியாகக் காதில் விழுந்திருக்காது.

பார்... எப்பொழுது பார்த்தாலும் நான் எதாவது சொன்னால் சரியாகவே கவனிக்க மாட்டேன் என்கின்றாய்...! என்று சொல்லிக் கோபமாகப் பேசுவார்கள்.

பேசியதும் அவரைப் பார்த்தவுடன் மனைவி என்ன செய்கின்றார்கள்...?

எதாவது ஒன்று.. என்றால் கொஞ்சம் பொறுத்துச் சொல்லாதபடி “எப்பொழுது பார்த்தாலும் என்னைக் குற்றவாளி ஆக்குவது தான் உங்களுக்கு வேலை...” என்பார்கள்

இந்த உணர்வுகள் தான் குடும்பத்தில் வளரும். இதை எது செய்கின்றது...? இந்தச் சந்தர்ப்பங்கள் செய்கின்றது.

ஏனென்றால் இந்த உடலில் எத்தனை காலம் வாழுகின்றோம்...? எதை எடுத்தாலும் இன்றைய செயல் தான் நாளைய சரீரம்.

1.நம்மை அறியாமல் நமக்குள் வரும் இத்தகைய தீமைகளை எல்லாம் நீக்க வேண்டும் என்றால்
2.அந்த அருள் ஞானிகள் உணர்வை எடுக்க வேண்டும்
3.அந்த அருள் ஞானிகள் காட்டிய உணர்வினை நீங்கள் பெறுவதற்குதான் இப்பொழுது ரெக்காட் செய்கின்றேன் (ஞானகுரு).
4.நீங்கள் எந்த அளவுக்கு பதிவு செய்கின்றீர்களோ... அந்த அளவுக்குத் திருப்பி எண்ணும் போது...
5.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

சாமி... சக்தி வாய்ந்தவர் எனக்குச் செய்வார் என்று சொன்னால் அந்த உணர்வின் வழியைப் பெற்றேன்.... வளர்த்தேன்... அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். பதிவின் நினைவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்தப் பதிவு நிலையை மீண்டும் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டுமென்ற உணர்வை எடுத்தால் அருள் பெருகுகின்றது... சிந்திக்கும் ஆற்றல் கொடுக்கின்றது... நம் சிரமங்களை மீட்டுத் தருகின்றது... ஞான சக்தியாக உருவாகின்றோம்.

இதைத் தான் மனிதனின் ஆறாவது அறிவை ஞானிகள் எப்படிக் காட்டியுள்ளார்கள்...?

இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி. எதன் மேல் இச்சைப்படுகின்றோமோ அது கிரியை ஆகி அதன் ஞானமாகத்தான் நம் உடலுக்குள் விளையும்.

தெய்வீக பண்புகளை நாம் பெறுவதற்குத்தான் ஆலயங்களைக் கட்டினார்கள் ஞானிகள். ஆலயத்தில் காட்டப்பட்ட அந்த அருள் உணர்வை நுகர்ந்தால் அது நம் உடலுக்குள் விளைந்து நாம் தெய்வமாகின்றோம்.

1.நம்மை எல்லாம் தெய்வமாக்கத்தான் அங்கே சிலையை உருவாக்கி
2.அந்தச் சிலை வடிவில் அருள் ஞானத்தை ஊட்டினார்கள் ஞானிகள்.