“நாம் எண்ணியது
எதுவோ அதைத் தான் நம் உயிர் இயக்கும்...!” என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டிருந்தாலும்
அதை மறந்து நம்முடைய எண்ணத்தை யாருக்கோ அடமானம் வைத்து விட்டு... யாரோ செய்வார்...
எவரோ செய்வார்...! என்ற நிலையிலேயே தான் வாழ்கிறோம்.
இந்த வாழ்க்கையில்
வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டுமென்றால் அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியை நாம்
பின்பற்றினால் தான் அது முடியும்.
அந்த மகரிஷிகளின்
அருள் சக்தி பெற வேண்டுமென்றால்
1.அவர்கள் உணர்வுகளை
உங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்
2.அந்த உணர்வின்
தன்மையை வலுப் பெறச் செய்ய வேண்டும்
3.வலு பெற்ற
பின் யாம் சொல்லும் தியானத்தைச் செய்ய வேண்டும்.
4.தியானத்தின்
மூலமாக அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவரும் திறன் பெற வேண்டும்.
இப்பொழுது இத்தனை
சிரமம் இருக்கின்றது. முன்பு எளிதில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறும் தகுதியை
ஏற்படுத்தினார்கள். அது எல்லாம் காலத்தால் மறைந்து விட்டது. அதனைப் பெறும் தகுதி நம்மிடத்தில்
இல்லாது போய்விட்டது.
மகரிஷிகளின்
அருள்சக்தி நாம் பெற வேண்டுமென்றால் எண்ணத்திற்கு வலுவிழந்து விட்டது. வலுவிழந்த நிலைகளில்
நாம் எதைச் செய்யப் போகின்றோம்.
அந்தச் சக்திகளைப்
பெறும் வழியை குருநாதர் எமக்குக் காட்டினார். அதைப் பெற்று வளர்த்தேன். வளர்த்த நிலை
கொண்டு எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கிடைக்கச் செய்... என்றார்.
குருநாதர் எம்மிடம்
சொன்னது:-
1.ஒவ்வொரு உயிரையும்
கடவுளாக எண்ணு
2.கடவுளால்
அமைக்கப்பட்ட கோட்டை என்று அந்த உடல்களை எண்ணு
3.நற்குணங்களால்
உருவாக்கப்பட்ட மனிதனை அந்த மனித உடலை ஆலயம் என்று எண்ணு.
இதை ஓதி அந்த
மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டுமென்ற ஏக்கத்துடன் நீ தியானி. அதனின் உணர்வின் தன்மை
கொண்டு நான் கொடுத்த அருள் உணர்வை எல்லோருக்குள்ளும் பதிவு செய்.
பதிவு செய்யும்
நிலையில்...
1.எவர்கள் எண்ணத்தால்
இதை ஏங்கி எடுக்கின்றனரோ அவர்கள் நற்பயனைப் பெறட்டும்
2.அவர்கள் உடலான
ஆலயத்திற்குள் இருக்கும் ஈசனை மதிக்கட்டும்.
3.மனிதனாக உருவாக்கிய
நல் உணர்வை மதிக்கட்டும்.
இதனின் உணர்வின்
தன்மை பெறும் அந்த உணர்வின் தன்மையை நீ ஆழமாகப் பதிவு செய். அவர்கள் நினைவு கொள்ளட்டும்...
பெறட்டும்...!
அவர்கள் இதைச்
சொல்லியும் “எடுக்கவில்லை...” என்றால் அதைக் கண்டு நீ வேதனைப்படாதே...! அவர்கள் பெற
வேண்டுமென்று மீண்டும் உன்னுடைய வலுவை ஏற்றிக் கொள்.
அவர்களுக்குச்
சொன்னோம்... கேட்கவில்லையே...! என்று வேதனை உணர்வை உனக்குள் எடுக்காதே. இது உன்னைத்
தாழ்வின் நிலைக்கு அழைத்துச் செல்லும்.
1.எப்படியும்
அவர்கள் பெற வேண்டுமென்ற அந்த உணர்வின் வலுவைச் செருகேற்று.
2.அவர்கள் மகரிஷிகளின்
அருள் சக்தி பெற வேண்டுமென்று இந்த தியானத்தை நீ உனக்குள் கூட்டு
3.அந்த உணர்வின்
அலைகளை உலகிலே பரப்பு
4.அந்த உணர்வின்
துணை கொண்டு அவர்கள் பெறட்டும்
5.அவர்களது
வாழ்க்கையில் அறியாது வந்த இருள் நீங்கட்டும்.
6.மெய்ப்பொருள்
காணும் உணர்வுகள் அவர்களுள் விளையட்டும்.
7.மெய்ப்பொருள்
கண்டுணரும் சக்தி அவர்கள் பெறட்டும் என்ற நிலையில் உன்னுடைய தியானத்தை நீ கூட்டிக்
கொள்.
எவரைக் கண்டும்
அவர்கள் பெறவில்லை என்றால் நீ சோர்ந்து விடாதே... எல்லோரும் பெற வேண்டுமென்ற வலுவை
நீ கூட்டி விடு...! என்று குருநாதர் சொன்னார். அதைத் தான் நான் (ஞானகுரு) செய்கின்றேன்.
ஆனால் பிறர்
போற்றுவதற்காக நான் இதைச் செய்யவில்லை... பேசவில்லை.
அருள் உணர்வுகளைப்
பெற்று அவர்களுக்குள் மகிழ்ந்திடும் நிலை வரப்படும் போதெல்லாம்...
1.என் உணர்வுகளுக்குள்
இருக்கும் நல்ல உணர்வுகள்
2.என் எண்ணமே
என்னைப் போற்றும்
3.எனக்குள்
மகிழ்ந்திடும் நிலைகள் ஊட்டும்.
பிறர் எந்த
அளவுக்கு மகிழ்கின்றாரோ அவரிடமிருந்து வெளிப்படும் உணர்வுகள் உனக்குள் மகிழ்ச்சியூட்டும்
உணர்வுகளாக விளைந்து உயர்ந்த உணர்வின் சத்தாக உனக்குள் ஊட்டும். அவர்களுக்குள் மெய்ப்பொருள்
பெருகுவதைக் கண்டு “நீ மகிழ்த்திட வேண்டும்...” என்றார் குருநாதர்.
குருநாதர் காட்டிய
அந்த அருள் வழியில் அவர் எமக்குள் ஊட்டிய உணர்வின் தன்மையை நீங்கள் அனைவரும் எளிதில்
பெற முடியும் என்ற அந்த நம்பிக்கை எனக்கு உண்டு.
ஏனென்றால் நாம்
எண்ணியது எதுவோ... “அதை நமது உயிர் இயக்குகின்றது...” என்பதைத் தெளிவாகத் தெரிந்து
கொள்ளுங்கள்.