ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2020

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


நம்மை நாம் பக்குவப்படுத்தி அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிக்கும் போது பல ஞானிகளும்… முன்னோர்களும்… நம் ஜெபத்துடன் வந்து அருள் தருகின்றார்கள்.

முன்னோர்கள் என்பது நம் குடும்பத்தில் நாம் பிறவி எடுத்த இப்பிறவியில் உதிரத் தொடர்புடைய பெரியோர்களின் ஆசியும் நமக்குக் கிட்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் அக்குடும்பத்தின் மூதாதையர் அவர்கள் இறந்த பிறகு உடனே மறு பிறப்பிற்கு வராமல் தனது உதிரத் தொடர்புடைய வம்ச வழிக்கு ஆவி உலகில் இருந்து கொண்டே பல நற்செயல்களைச் செய்து அக்குடும்பத்தைக் காக்கும் தெய்வமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

வாழ்ந்த நாளில் அக்குடும்பத்திற்காகச் செய்த நன்மையைக் காட்டிலும் ஆவி உலகில் இருந்து கொண்டே பல நற்செயல்களைச் செய்கின்றனர்.
1.தன் உதிரத் தொடர்பு உடையவர்கள் நிலையெல்லாம் மறைந்த பிறகுதான்
2.அவர்கள் மறு பிறப்பிற்கு வருகிறார்கள்.
3.இப்படி பிறப்பு இறப்பு என்னும் நிலைகளில் பல நிலைகள் உள்ளன.

நம் முன்னோரை வணங்கி நாம் ஆகாரம் படைத்து அவற்றைப் பட்சிகளுக்கு வைக்கின்றோம். அப்பட்சிகள் வந்து உண்ணும் நிலையில் நாம் நம் முன்னோரே அதை வந்து உண்டதாக மகிழ்கின்றோம்.

நம் முன்னோர் அப்பட்சியின் நிலைக்கு எப்படி வருகிறார்கள்…? அவர்களின் ஆத்மா அப்பட்சியின் உடலில் ஏறுவதல்ல.

ஞானிகளும் ரிஷிகளும் செயல்படுவதைப் போல் இந்நல்நிலை பெற்ற குடும்ப முன்னோர்களும் அப்பட்சியின் எண்ணமுடன் கலந்து அப்பட்சியையே தான் வருவதாக இயங்கச் செய்து அப்பட்சி உணவு எடுக்குங்கால் நாம் படைக்கும் அவ்வுணவில் உள்ள மணத்தை அவர்கள் ஈர்த்து எடுத்துச் செல்கிறார்கள்.

நாம் அவர்கள் எடுத்தார்கள் என்பதனை அறிய அப்பட்சியை ஒரு கருவியாக்கி அவர்களே அப்பட்சியுடன் வந்து எடுத்துச் செல்வதுதான் நாம் படைக்கும் நிலையெல்லாம்.

பறக்கும் நிலைகொண்ட அப்பட்சியின் உடலில் செயல்படுவது எளிது. அதன் நிலை கொண்டு தான் நம் முன்னோர்கள் நிலையும் இங்கு நடக்கின்றது.

எவ்வுடலையும் தன் செயலுக்குக் கட்டுப்படுத்திட எவ்வாவிகளுக்கும் முடியும். அவ்வாவிகளின் குண நிலைக்கு ஏற்பச் செயல்படுத்திடும் நிலை கொண்டவரின் நிலைக்கெல்லாம் அவ்வாவிகள் வருகின்றன.

குறிப்பிட்ட காலங்களில் இன்னும் பல இடங்களில் பட்சிகளுக்கு உணவு வைத்தால் அவ்வுணவை அதே நேரத்தில் வந்து அப்பட்சிகள் எடுத்துச் செல்வதைக் கண்டிருப்பீர்கள்.

இன்றும் அருணகிரிநாதர் தன் செயலை பட்சியின் மேல் வந்து அவருக்குப் படைக்கும் உணவை எடுத்துச் செல்கின்றார்.

இவ்வாவி உலக வாழ்க்கை ஒன்று உள்ளது.

மனித வாழ்க்கையில் உண்டு உறங்கி உழைத்து வாழ்கின்றோம். இவ்வாழ்க்கைக்கே ஆவி உலகில் உள்ளவரின் வாழ்க்கையும் கலந்துதான் செயல்படுகின்றது. அவ்வாவி உலகில் உள்ளவரும் நம்முடனே சுற்றிக் கொண்டுதான் உள்ளார்கள்.

இன்று மனிதனையும் இப்பிம்பப் பொருள்களையும் நிழல் படம் எடுப்பதைப் போல் ஆவி உலகில் உள்ளவர்களையும் எடுத்திடலாம்.

1.ஆவி உலகில் உள்ளவர்களும் எண்ணமும் செயலும் கொண்டுதான் வாழ்கின்றார்கள்
2.தன் ஆத்மாவிற்கு அவர்களும் நுகரும் தன்மை கொண்டு
3.பல சக்தி ஆகாரத்தை ஈர்த்துத்தான் ஆவி உலக ஆத்மாவும் வாழ்கிறது.

ஜீவ உடலில் உள்ள நாம் திடப்பொருளை உணவாக்கி உண்ணுகின்றோம்.
1.இவ்வுடலில்லாத ஆவி உலக ஆத்மாக்கள் தன் ஆத்மாவுக்கு வேண்டிய உணவை
2.ஆவியாகவே ஈர்த்துத் தன் ஆத்மாவுக்கு உணவாக்கிச் சுற்றிக் கொண்டுள்ளன.

நாம் படைக்கும் உணவையும் சில இல்லங்களில் அவ்வில்லங்களில் உணவைச் சமைத்து வைத்த நிலையிலும் அவ் இல்லத்தில் இறந்தோர்கள் தனக்கு வேண்டிய உணவை இன்றும் வந்து அதன் சுவையை ஈர்த்தெடுத்துச் செல்கின்றார்கள்.

சில இல்லங்களில் கேட்டிருப்பீர்…! உறக்கத்தில் உள்ள பொழுதே எழுந்து நடமாடி வீட்டு வேலைகள் செய்து உணவு சமைத்து உண்பதாக எல்லாம்.

உறக்கத்திலேயே அனைத்தையும் செய்துவிட்டு விழித்த பிறகு கேட்டால் மறந்துவிட்டதாகச் சொல்லுவார்கள்.

உறக்கத்துடன் பல நிலைகளை இன்றும் பலர் செய்கிறார்கள். இவையெல்லாம் தன் ஆசை அடங்காத நிலைகொண்ட ஆவிகளின் நிலைகள் தான்.

தன் நிலையைச் செயல்படுத்திட…
1.தன் ஆசைக்கு இவ் உடல்களைத் தன் எண்ணத்துடன் கலக்கச் செய்து
2.அவர்கள் நிலையை மறக்கச் செய்து தன் செயலை தன் ஆசையை இவ்வாவிகள் பூர்த்தி செய்து கொள்கின்றன.

இவ்வாவிகளுக்கு மனிதர்கள் விழித்துள்ள நிலையில் அவர்கள் எண்ணத்தை அடங்கச் செய்து தன் செயலைச் செயல்படுத்திட முடியாத நிலையில் தன் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளத்தான் பலர் இரவில் தன்னை அறியாமல் உறக்கத்தில் நடந்திடும் நிலையெல்லாம்.

இவ்வாவிகள் தன் ஆசையைச் செயல்படுத்திடும் எண்ணத்துடனேதான் இவ்வுலகினில் சுற்றிக்  கொண்டே உள்ளன. ஆகவே
1.நாம் பெறும் ஜெபம் முதலில் பிற ஆவியின் அணுக்களின் உந்தலில் இருந்து தப்பி
2.நம் சக்தியை நாம் உணர்ந்து நல் சக்தியை ஓங்கச் செய்து நாம் வாழ வேண்டும்.