ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 23, 2020

நல்லதைச் செய்தாலும் அதைக் காக்கும் சக்தி மிகவும் அவசியம்...!


ஒருவர் ரொம்பப் பிரியப்படுவார் நல்லது பெற வேண்டுமென்று...! மிகவும் கஷ்டப்பட்டவருக்கு ஒரு வேதனைப்பட்டுக் கொண்டிருப்போருக்கு இவர் ரொம்ப உதவி செய்கின்றார்.

உதவி செய்யும் இவரோ தெய்வ பக்தி கொண்ட ஆன்மாவாக இருப்பார்...! இருப்பினும் உதவி பெற்றவரோ...
1.நான் தெய்வத்தை எல்லாம் வேண்டினேன்
2.எல்லாத் தெய்வமும் என்னைக் கைவிட்டுவிட்டது என்று
3.தெய்வத்தின் மேல்... நல்லொழுக்கத்தின் மேல்... வெறுப்புணர்வு இருக்கும்.

ஆனால் இவருக்கு உதவி செய்த நல்லவர் எல்லாருக்கும் உதவி செய்திருப்பார். அந்த உதவியின் தன்மை கொண்டு பிறரிடம் நல்ல பெயரும் புகழும் வாங்கியிருப்பார்.

கோயில்களுக்கு ஓடி ஓடியும் பல நல்லவைகளைச் செய்திருப்பார். கோயிலில் காட்டிய பக்தி கொண்டு கஷ்டப்பட்ட அந்த மனிதனுக்கு ஓடிப் போய் அடடா முருகா...! அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும்...! என்ற எண்ணத்திலே உதவி செய்திருப்பார்.

இருந்தாலும் உதவி பெற்றவரோ... இவர் உதவியை மட்டும் தான் எண்ணுவார். முருகன் என்று சொல்லப்படும்போது எல்லாம் வெறுப்பார்.
1.அந்த முருகன் என்னைக் கைவிட்டார்...
2.நீதானப்பா என்னைக் காப்பாற்றுகிறாய்...! என்று சொல்வார்.

அப்பொழுது இந்த உணர்வுகள் அதிகமாக விளைந்து எல்லா உதவியும் வாங்கிக் கொண்டவரின் உயிரான்மா இவர் மேல் எண்ணமாகி இறந்த பின் செய்த நன்றிக்கு இவரை எண்ணி அந்த ஆன்மா இவர் உடலில் வந்து சேர்ந்துவிடும்.

அது வரை எல்லாக் கோவில்களுக்கும் பக்தியாகப் போய் செய்து கொண்டிருந்தவர் அதற்கு அப்புறம் என்ன செய்வார் தெரியுமோ...?

கோயிலைக் கண்டாலே வெறுப்பு வரும்.

ஏனென்றால் அந்த நோய்வாய்ப்பட்டு இறந்த ஆன்மா இவர் உடலுக்குள்ளே வந்து விட்டதல்லவா. அதனால் அது அவருக்குள் இருந்து வெறுக்கச் செய்யும்.

நல்லது என்று சொல்லி இங்கே உட்கார வைத்தாலும் எழுப்பி வெளியே இழுத்துக் கொண்டு போய் விட்டுவிடும்.

பக்தி மார்க்கங்களில் இப்படித்தான் நாம் உதவி செய்த நன்றியை நாம் பெற முடியாத நிலையில் அதிலே அந்த எண்ண வலு எது பெற்றதோ அது உணர்வின் துணை கொண்டு நமக்குள் வந்து விட்டால் சந்தர்ப்பம் இப்படி ஆகின்றது.

நாம் ஒருவருக்கு நன்மை செய்தோம். ஆனால் அவருக்கு யார் மேலேயோ வெறுப்புப்பட்டது. அந்த வெறுப்பின் உணர்வு நமக்குள் வரும் போது நம் நல்லொழுக்கத்தை இதுவே தடைப்படுத்தும்.

கடைசியில் என்ன சொல்வோம்...?

என்ன நல்லது செய்து என்ன ஆனது...? எனக்கு இப்படி நோய் வந்துவிட்டது...! என்ற வேதனை தான் வரும்.

 ஏனென்றால் அந்த உணர்வு கொண்ட ஆன்மா உடலுக்குள் வந்து விட்டால் இந்த வேலையைத்தான் செய்யும்.

சொல்வார்கள்...! நேற்றெல்லாம் இவர் கோயில்களுக்கு ஓடி ஓடிப் போய் என்னென்னமோ நல்லது செய்தார். இன்று நல்லது என்று சொன்னாலே நிற்க மாட்டேன் என்கின்றார். இப்பொழுது சதா வேதனையே சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்று சொல்வார்கள்.

காரணம்... அவர் நல்லவர்தான்...!
1.அவரை அறியாது வந்த தீமைகளிலிருந்து தான் துடைக்கும் மார்க்கத்தைத் தவறியதனால்
2.அதன் உணர்வுகள் தனக்குள் வந்து அந்த ஆன்மா குடி கொள்கின்றது.

புலியிடம் சிக்கும் மான் என்ன ஆகிறது...?

புலி தன்னை இம்சிக்கும் உணர்வு கொண்டு அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்ற எண்ணத்திலே புலியையேக் கண்டு கண்டு அது நிலைகள் கொண்டு மானின் ஆன்மா வெளியே சென்றபின் புலியின் உணர்வை நுகர்ந்து புலியின் ஈர்ப்பிற்குள் சென்று புலியின் உணர்வைக் கொண்டு “அந்த மான் புலியாகவே மாறுகின்றது...!”

இதைப் போன்றுதான் இவர்கள் நல்ல உணர்வு கொண்டாலும்... இந்த நஞ்சு கொண்ட உணர்வுகள் உடலுக்குள் வந்தபின் பாலுக்குள் நஞ்சைப் போட்டால்... பாதாமிற்குள் நஞ்சைப் போட்டால்... குடிப்போரைக் கொன்று விடுவதைப்போல இவர் பட்ட வேதனை இவர் உடலுக்குள் சென்று அந்த நல்லதைச் செயலற்றதாக மாற்றிவிடும்.

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் போன்ற தீமைகளை எல்லாம் வென்றவன் மகரிஷி. அந்த அருள் சக்தியின் வலுக் கொண்டு தீமைகளை அடக்க வேண்டும். ஏனென்றால். அவர்கள் தீமையைப் பொசுக்கியவர்கள்.

அந்த உணர்வின் தன்மையை நாம் எண்ணி எடுக்கும்போது நமக்குள்ளும் தீமைகளைப் பொசுக்கும். அருள் உணர்வுகளை வளர்த்து நாம் வெளி சென்ற பின்
1.அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று இந்த உடல் பெறும் உணர்வைக் கருக்கும்.
2.கருக்கிய உணர்வு கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் நாம் நிலைத்திருப்போம்.