ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 15, 2020

உயிர் உடலில் இருக்கும் வரை தான் மதிப்பும் மரியாதையும்…!


நாம் எத்தகைய உயர்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும்…
1.இந்தச் சரீரத்தை விட்டு உயிரான்மா சென்று விட்டால்
2.நம் அழகையும்… நாம் போற்றித் துதித்த தருமத்தையும்…
3.யாராவது சிந்தித்துப் பார்க்கின்றார்களா…? இல்லை…!

நேரமாகிவிட்டது… சடலம் அழுகிவிடும்… சீக்கிரம் கொண்டு போங்கள் என்று தான் சொல்கின்றார்கள்.

அத்தகைய நிலைகள் கொண்டு சென்றாலும் அங்கே எரிக்கும் இடத்தில் பார்த்தாலோ அதிலே நெருப்பிலே இட்டு எரிக்கப்படும்போது நம்முடைய நிலைகள் என்னவாக இருக்கின்றது…? என்று பார்க்கலாம்.

அதே சமயம் புதை குழியில் போடும்போது அதனை எவ்வளவு தூரம் அசுத்தப்படுத்துகின்றோம்…? சொந்தகாரர்கள் நாமாவது சடலத்தைத் தூக்கி போடுகின்றோமா…! என்றால் இல்லை.

யாரையோ வைத்துத் தூக்கிப் போடுங்கள் என்று தான் சொல்கின்றோம்… இல்லையா…? இதைத்தான் அது அதற்கென்று இனங்களைப் பிரிக்கப்பட்டு அவர்களை அதற்குத்தான் (குடியானான் என்றும் வெட்டியான் என்றும்) என்று வைத்திருக்கின்றோம்.

ஏனென்றால் இவர்களை அது சாடி விடுமாம்…!

ஆனால் இவருடைய சொத்து… செல்வம்… எல்லாம் தேவை. இப்படித்தான் நம்முடைய உணர்வுகள் வருகின்றது.

ஆகவே… இந்த உடல் நமக்குச் சொந்தம் என்று ஆக்க வேண்டாம். இந்த உடலின் சொந்தம் கொண்டாடி அதில் வளர்த்துக் கொண்ட சாபங்களை நீக்கி இந்த உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றி என்றுமே மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் நிலை கொள்ள வேண்டும்.

நமக்கு அந்த நிலையான சரீரம் வேண்டுமென்றால் பற்று எதில் வேண்டும்…?

அந்த மகரிஷிகளின் அருளுணர்வோடு பற்று வேண்டும். அந்தப் பற்றை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அதன் கணக்கின் பிரகாரம் இந்த வாழ்க்கையில் எந்த மகரிஷிகளின் உணர்வை அதிகமாகக் கூட்டுகின்றோமோ அங்கே செல்கின்றோம்.

இல்லையென்றால் இந்தச் சாப அலைகள் சிக்கியவர்கள் நஞ்சு கொண்டு ஒருவரை ஒருவர் அழித்திட வேண்டும் என்ற நிலை ஆகிறது. பின் தாவர இனங்களைப் புசித்து வரும் நிலை மாறி மற்ற உயிரினங்களைக் கொன்று புசிக்கும் நிலைகள் வரும்.  

1.அப்படிக் கொன்று மற்றொரு உடலுக்குள் புகுந்து
2.இப்படிப் பல நிலைகள் மாறி மாறி நரக லோகத்தைச் சந்தித்த பின் தான்
3.அதாவது சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் இந்தத் தண்டனைகளை எல்லாம் நாம் அனுபவித்த பின் தான்
4.மீண்டும் மனிதனாக வர முடியும் (உடனடியாக வருவது மிகவும் கடினம்)

ஏனென்றால் சாதாரணமாக மனிதனின் கையில் சிக்கி அந்த உயிரினங்கள் சாகாது. அதனுடைய நிலைகள் தன் பசிக்காக ஏங்கி எடுக்கும் அதன் வாயிலே சிக்கித் தான் அங்கே அழியும்.

ஒரு புலி அடித்துக் கொல்கிறது என்றால் அவன் புலியாகப் பிறக்கும் நிலை வருகின்றது. ஒரு பாம்பிடம் சிக்கித் தவித்தது என்றால் அடுத்த பிறவியில் அவன் பிறப்பு பாம்பாகத்தான் பிறக்கும்.

இது போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்பதற்குத்தான்
1.விண்ணுலக ஆற்றலும் மண்ணுலக நிலையையும்
2.உணர்வின் பெருக்கமும் உணர்வின் மாற்றங்களும்
3.உணர்வுக்கொப்ப உடலின் மாற்றங்களும் உணர்வுக்கொப்ப ரூபங்களும்
4.அதனுடைய குணங்களும் அதனுடைய நிறங்களும் எதுவாக மாறுகின்றது…? என்ற
5.அந்தப் பேருண்மைகளை எல்லாம் எமக்குத் (ஞானகுரு) தெளிவாக எடுத்து காட்டினார் நமது குருநாதர்.

உங்கள் வாழ்க்கையில் வந்த நிலைகளும்… உலக அரசியலின் நிலைகளும்… மதத்தின் அடிப்படையில் நமக்குள் பட்ட குணங்களும்… நாம் வளர்ந்து வந்த நிலைகளும்… அவைகளுடன் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் காட்டிய அருள் வழியினை இணைத்தே…
1.அண்டத்தில் இருக்கும் நிலைகள் பிண்டத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உணர்வுடன் இணைத்து
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு மெய் வழி காணும் மெய் ஒளி பெறும் நிலைகளை
2.உங்களுக்குள் உருவாக்குவதற்குத் தான் இந்த உபதேசம்.

குருநாதர் என்னை எப்படி உருவாக்கினாரோ அதைப் போன்று உங்களையும் ஞானியாக உருவாக்க வேண்டுமென்பதற்குத் தான் அந்த மகரிஷிகளின் உணர்வின் நிலைகளை இன்று எண்ணத்தால் உங்களிலே பெருக்கச் செய்கின்றோம்.

ஒவ்வொருவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.