ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 2, 2020

மனம் விரும்பி உணவாக உட்கொண்டால்தான் உங்கள் வயிறும் உடலும் நலம் பெறும்… இல்லை என்றால் நோய் தான்…!


சில இடங்களில் வற்புறுத்தி சாப்பிட வேண்டும் என்பார்கள். ஆனால் கௌரவத்திற்காக... இல்லை நான் இப்பொழுதுதான் சாப்பிட்டு வந்தேன்…! என்று தலையைச் சொறிவார்கள்.

பசியும் இருக்கும்...! சாப்பிடுங்கள்…! என்று சொன்னால் எப்படி சாப்பிடுவது…? என்று சொல்வார்கள். ஆனால் அந்தச் சலிப்பான நிலைகள் கொண்டு இருப்பார்கள்.

இல்லை இல்லை…! எங்கள் வீட்டில் நீங்கள் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும்…!  என்று சொன்ன பின் சரி உங்களுக்காகச் சாப்பிடுகின்றேன் என்று உட்கார்வோம்.

இந்தச் சலிப்பும் சோர்வும் அடைந்த பின்.. அந்த சலிப்பு என்பது ஒரு புளிப்பின் தன்மையை உண்டாக்கும்.

இந்தப் புளிப்பு கலந்த பின் சாப்பாடு போட்டவுடனே கொஞ்சம் தான் சாப்பிட்டிருப்பார்கள். அதற்கு அப்புறம் உள்ளுக்கே விடாது. ஏனென்றால் அப்போது அந்தப் புளிப்பின் தன்மை வந்த பின் எதிர்க்கும் தன்மை வந்துவிடுகின்றது.

1.கொஞ்ச நேரத்தில் பார்த்தவுடனே நெஞ்சைக் கரிக்க ஆரம்பிக்கும்.
2.அந்த உணர்வில் புளிப்பின் சக்தி வரப்படும்போது… நாம் வேறு எதை விழுங்கினாலும் அந்த புளிப்பு என்ன செய்யும்…?
3.அன்னக் குழாய்களில் அதிலுள்ள அமிலத்தைக் கரைத்துவிடும்.
4.பின் நமக்குள் அது உராயும் போது நெஞ்சு எரியும்.

நம்மை அறியாமலேயே இந்த உணர்வுகள் இந்த அமிலங்களை உருவாக்கிவிடுகின்றது.

இதைப் போன்று நாம் நமது எண்ணங்களில் உருவாகும் உணர்வின் அமிலங்கள் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களை மடியச் செய்கின்றது. நமது உறுப்புகளையும் மாற்றி விடுகின்றது.

நாம் அடுத்து உணவுகள் உட்கொள்ளும்போது நம்மை யார் சாப்பிடச் சொன்னார்களோ... அவர்களை எண்ணி… “நான் வேண்டாம் என்று சொன்னேன் என்னை இப்படியெல்லாம் செய்துவிட்டார்கள்…. என் நெஞ்சைக் கரிக்கின்றது…!” என்று சாப்பாடு போட்டதற்காக அவர் மேலும் வெறுப்படைவார்கள்.

இதைப்போல பெண்களும் பெரும்பகுதியான பேர் இருப்பார்கள்.

வீட்டிற்கு வந்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டுமென்று உடனே முதலில் கொஞ்சம் சாதம் போட்டிருப்பார்கள்.. இரண்டாவது போட்டவுடன் “லபக்….” என்று தள்ளுவார்கள்,

தள்ளியவுடன் பார்த்தால்… பெரிய பாறையையே தூக்கிப் போட்ட மாதிரி இருக்கும். ஐயோ இப்படிப் போட்டு விட்டார்களே…! என்ற உணர்வுகள் பட்டபின் அவர்கள் உடல்கள் எப்படி இருக்கும்…? என்று நினைக்கின்றீர்கள்

இதைச் சாப்பிட முடியாது. உடனே சாப்பாடு போட்டவர்கள் மீது வெறுப்பு வரும். ஆனால் அவர்கள் சிரிப்பார்கள்.

இந்தச் சந்தர்ப்பம் அவர்கள் மேல் வெறுப்பின் அணுக்கள் வளர்ந்த பின் இந்த வெறுப்பின் அணுக்கள் வளர்ந்து அந்த ஆகாரத்தைப் போட்டவர்களை நினைத்தவுடன் அந்த வீட்டிற்குப் போனவுடனே “இப்படித் தான் செய்வார்கள்” என்ற இந்த எண்ணங்கள் வரும்.

இந்த வெறுப்பின் அணுக்களை நமக்குள் விளையப்படும் போது நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் எத்தனையோ நோய்கள் வந்துவிடும். அந்த வெறுப்பின் நிலை கொண்டு இப்படி செய்துவிட்டார் என்று பார்க்கப்படும் போது சிரித்துக்கொண்டு பார்த்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைகள் விலகும்.

வெறுப்பை உருவாக்கும் அணுக்களே அங்கே உருவாகின்றது…!

ஆகவே இதைப்போல வெறுப்பை உருவாக்கிவிட்டால் அங்கே அவருக்குள் என்ன ஆகிறது…? ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதைப் போன்று ஒரு சொந்தமோ பந்தமோ உங்களுக்கு உணவை அவர்கள் சமைக்கப்படும்போது இந்த வெறுப்பின் உணர்வு அதிகமாகும் போது
1.அந்தக் குழம்புகளில் அவர்களும் ஏதாவது பொருளை அதிகரித்து விடுவார்கள்
2.அந்தக் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டாலே நாம் வெறுக்கும் தன்மையே வரும்
3.உப்பு அதிகமாகி விட்டால் வெறுக்கும் தன்மை வரும்.
4.சீரகத்தை அதிகமாக சேர்த்து விட்டால் ஒமட்டலின் தன்மை வரும்.
5.காரத்தை அதிகமாக்கிவிட்டால் வெறுப்பின் தன்மை வரும்.

இதைப்போன்று அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப இந்த உணர்வுகள் இயக்கி அந்தப் பொருளை அதிகமாகச் சேர்க்கும் தன்மை வரும். இது எல்ல, நம்மை அறியாமலேயே இயக்கும் சில நிலைகள்…!

ஆகவே… எப்போதுமே பிறருக்கு உணவு சமைக்கும் போதும்… பரிமாறும் போதும்…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் உடல் நலம் பெற வேண்டும்
3.அவர் மகிழ்ச்சி பெறும் சக்தி பெற வேண்டுமென்று எண்ணி உணவைச் சமையுங்கள்… போடுங்கள்…!

அதே சமயத்தில் இது போன்ற நிலைகளை எவருக்கும் நாம் அவரை மகிழச் செய்ய அதிகமாக உணவைப் போட்டுவிடாதீர்கள்…! போதும்… என்றால் அதை நிறுத்தி விடுங்கள்.

இரண்டாவது தடவை வந்து போடட்டுமா… போடட்டுமா…? என்று சொன்னால் அவர் சாப்பிட்டதைவிட அந்த வெறுப்பின் தன்மை கூடி நான்கு தடவை சொன்னால் என்ன நடக்கும்…?

இல்லைங்க கொஞ்சம் தான் என்று சொல்ல அவர் வேண்டாம் என்று சொல்ல இல்லை கொஞ்சம் தான் என்று மீண்டும் அழுத்திச் சொல்ல
1.அப்பொழுது இந்த வெறுப்பின் உணர்வை அங்கே வளர்த்து
2.அது உமிழ் நீரில் சேர்த்தால் முதலில் சாப்பிட்ட ஆகாரத்தை அது அஜீரணம் தான் செய்யும்

அப்போது அஜீரணம் ஆகும்போது என்ன ஆகின்றது…? நீங்கள் சாப்பாடு போட்டும் பயனில்லாமல் போகின்றது. இதைப் போன்ற நிலைகளில் இருந்து ஔவொருவரும் மீள்தல் வேண்டும்.

ஏனென்றால் இதெல்லாம் நம்மை அறியாத அன்பால் நடக்கும் செயல்கள்…!

மிகவும் ருசியாக இருக்கின்றது என்று நீங்கள் எதையாவது உணவை அதிகமாக்கி விட்டால் உங்கள் உடல் ஏற்றுக் கொள்கின்றதா….? இல்லையே…! அஜீரண சக்தியாகி அதிக புளிப்பின் தன்மை  அடைந்து நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களும் சோர்வடையச் செய்துவிடுகின்றது அல்லவா….!

அப்படிச் சோர்வடைந்த நிலைகளில் தொழில் செய்ய நேருகின்றது. நம்முடைய எண்ணங்கள் பிறருடன் பேசும் போதும் அதே சோர்வின் தன்மை அடைகின்றது. நம் வாழ்க்கையில் இது போன்ற அணுக்களைப் பெருகத் தொடங்கிவிடுகின்றது.

இதையெல்லாம் நாம் மாற்றி அமைத்தே ஆக வேண்டும்…!