ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 30, 2020

சந்தர்ப்பத்தால் நம்மை இயக்கும் தீமைகளை… நம் எண்ணத்தால் எண்ணி அதை நல்லதாக மாற்ற முடியும்


யாம் உபதேச வாயிலாகச் சொல்லும் ஞானிகளின் உணர்வுகள் உங்கள் உயிரிலே பட்டு… விஷ்ணு சங்கு சக்கரதாரி…! அந்த ஒலியை எழுப்புகின்றது…. ஞானத்தின் உணர்ச்சிகள் உடலிலே படருகின்றது. எந்த உணர்வோ அதன் வழி வழி நடத்துகின்றது உயிர்.

ஆகவே உயிர் வழி நடத்தும் உணர்வின் தன்மை கொண்டு எவர் இதை நுகர்கின்றனரோ அவர் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி ஒளி என்ற உணர்வாக மாற்றும் தன்மை வருகின்றது.

ஏனென்றால் இருண்ட உலகமாக (உடலுக்குள்) விஷத்தின் தன்மை கலந்த… விஷத்தில் கலந்தது தான் மற்ற உணர்வுகள்.

ஆதியிலே… ஆங்காங்கு விஷத்தின் உணர்வுகள் ஒன்றோடு ஒன்று உராயும் வலுக்கள் வரப்படும்போது தான் வெப்பம் என்ற உணர்வாகி அங்கே ஆவி என்ற நிலைகள் உருவாகிறது.

ஆவி என்ற நிலைகள் வரப்படும் பொழுது இந்த வெப்பத்தால் தாக்கப்பட்டு உணர்வின் வேகத் துடிப்பாகி நெருப்பாகும் போது நகர்ந்து செல்லும்…! நகரும் போது காந்தமாகிறது. அந்தக் காந்தத்தால் கவர்ந்து ஒன்றை உருவாக்குகிறது.

1.விஷம் இயக்கச் சக்தியாகவும்
2.வெப்பம் உருவாக்கும் சக்தியாகவும்
3.காந்தம் அரவணைக்கும் சக்தியாகவும் பெற்று
4.காந்தம் அரவணைத்து உணர்வைத் தன்னுடன் மோதப்படும் உணர்வின் சக்தி எதுவோ
5.அதன் வழி பிரம்மம் உருவாக்கும் சக்தி பெறுகின்றது.

பிரம்மாவின் மனைவி சரஸ்வதி…! எதன் உணர்வு பட்டதோ அதன் உணர்ச்சிகளுக்கொப்ப அது உருவாக்கும் அதனின் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது என்ற நிலையை நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

ஆகவே மனிதனானபின் இந்த இருளை அகற்றி எதனையுமே எண்ணத்தால் உருவாக்கும் நிலை பெற்றது தான்…! மற்றது அனைத்தும் சந்தர்ப்பத்தால் மோதும் தன்மை வருகின்றது.

1.சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகள் வாழ்க்கையை அமைக்கின்றது.
2.ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை மாற்றி அருளுணர்வு என்ற நிலையை அகஸ்தியன் உருவாக்கி
3.அழியாத நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்

அவன் மாற்றிய உணர்வு கொண்டு… நாமும் சந்தர்ப்பத்தில் தீமை என்ற உணர்வை நுகரும் போது… அதன் வழியில் அழைத்துச் செல்லாதபடி தீமைகளை அடக்கி ஒளியாக மாற்றும் உணர்வைப் பெற முடியும்.

ஆறாவது அறிவு கொண்ட மனிதர்கள் நாம் உணவாக உட்கொள்வதில் மறைந்துள்ள நஞ்சை உடல் மலமாக மாற்றுகிறது. நஞ்சை நீக்கிடும் வலிமைமிக்க உணர்வு கொண்டு கார்த்திகேயா… தெரிந்த உணர்வு கொண்டு வலிமை கொண்டு நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம்முள் செல்த்தி அதை நாம் அடக்கிப் பழகுதல் வேண்டும்.

நம் வாழ்க்கையில் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக்குதல் வேண்டும் என்பதற்குத்தான் இப்பொழுது உங்களுக்குள் இதைத் தெளிவாக்கியது

ஆகவே அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்வோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் உடலிலுள்ள அணுக்களை எல்லாம் ஒளியாக மாற்றுவோம்.