பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த நாம் புழுவிலிருந்து
மனிதனாகத் தோன்றும் வரையிலும் எத்தனையோ வேதனைப்பட்டுள்ளோம்.
அத்தகைய வேதனையிலிருந்து மீண்டிடும் உணர்வுகளைச்
சுவாசித்துச் சுவாசித்து அதன் வளர்ச்சியாக இந்த மனித உடலாக உருவாக்கியது நம் உயிர்
தான்.
அப்படி வேதனையிலிருந்து விடுபடும் உணர்வுகள் கார்த்திகேயா…!
அதாவது ஒவ்வொரு உடலிலும் எத்தனை தீமைகளிலிருந்து
விடுபட வேண்டும் என்ற உணர்வின் ஞானம் பெற்று
1.இந்த மனித உடலாகும் போது அதற்குத்தகுந்த உறுப்புகளை
உருவாக்கி
2.தீமையிலிருந்து விடுபடும் வலுவான அந்தச் சக்தியாக
3.ஆறாவது அறிவாக வள்ளி மிகச் சக்தி வாய்ந்த நிலையாக
மாறுகின்றது.
4.அதைத்தான் வள்ளி என்று பெண்பாலைக் காட்டுகின்றார்கள்.
இந்த வலிமைமிக்க சக்தி பெற்ற நிலையைத் தான் நம்மைக்
காட்டிலும் ஞானிகளோ பெரியவர்களோ அவர்கள் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று மிக
மிகச் சக்தி வாய்ந்ததாக அவர்கள் உடலில் வளர்த்துள்ளார்கள்.
அந்த மகான்கள் எல்லாம் தனக்குள் வந்த நோய்களையும்
தீமைகளையும் வராதபடி வலு கொண்டு சமாளித்துக் கொண்டவர்கள்.
அந்தக் குடும்பப் பந்தம் இல்லாதபடி தீமையிலிருந்து
விடுப்ட வேண்டும் என்று
1.அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு வலிமையான
உணர்வுகளைச் சுவாசித்து
2.அவர் உடலிலே எந்தத் தீமையும் சாடாதபடி…
3.அதைத் தாக்கிடும் தாங்கிக் கொள்ளும் அந்த உணர்வினைப்
பெற்றுள்ளார்கள்.
அப்படிப் பெற்றிருக்கும் போது… நம் கண்ணுக்கு முன்னாடி
ஒரு மகானைப் பார்த்தோம் என்றால்
1.அந்த மகானின் அற்புத நிலைகள் நாமும் பெற வேண்டும்
2.அவரின் அருளாற்றல் பெறவேண்டும்
3.நமக்குள் இருள் வராதபடி தடுக்கும் அந்த அருள்
சக்தி வேண்டும் என்று எத்தனை பேர் இப்படி எண்ணுகின்றோம்…?
நம் உடலில் ஒரு நோய் வந்ததென்றால் அந்த மகானை நினைத்து
அழுவோம். நான் எல்லோருக்கும் நன்மை தானே செய்தேன்… என்னை ஏன் இப்படிச் சோதிக்கின்றாய்…?
என்ற நிலையில் கோவிலுக்குச் சென்றாலும் இதைத்தான் நினைக்கின்றோம்.
ஏனென்றால் நன்மை செய்பவர்கள் எல்லாம் எப்படிச் செய்கின்றார்கள்…?
மற்றவர்கள் வேதனைப்படுவதை எல்லாம் கேட்டு அறிந்து
அடப் பாவமே…! என்று சொல்லித் தான் நாம் உதவியே செய்கின்றோம்.
அவர் வேதனையை நாம் அதிகமாக நேசித்த பிற்பாடு அதன்
ரூபமாக பண உதவியோ மற்றதையோ செய்கின்றோம். ஆனாலும் அவர் உடலிலிருந்து வேதனையை நாம் நுகர்கின்றோம்.
இப்படி நம்மை அறியாமலே நன்மை செய்யும் சமயங்கள்
எல்லாம் அடுத்தவர்களின் வேதனைகளையோ அவர்களின் குடும்பக் கஷ்டங்களையோ நோய்வாய்ப்பட்டோரின்
உணர்வுகளையோ எல்லாவற்றையும் நுகர்கின்றோம்.
இந்த உணர்வுகள் வலிமையாகி… நாம் நுகர்ந்த பின் நம்
உடலில் வந்து சேருகிறது “காசு கொடுத்து விலைக்கு வாங்கிய மாதிரி…!”
ஆனாலும் இதைச் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…! அதற்கு
நாம் என்ன வைத்திருக்கின்றோம்…?
ஞானிகளையோ மகான்களையோ நாம் உற்றுப் பார்த்தோ அல்லது
அவர்கள் உபதேசக் கருத்துக்களை நமக்குள் பதிவாக்கியோ வைத்திருந்தால் அதன் துணை கொண்டு
1.அவர்கள் தீமையை வென்ற உணர்வுகளை நாம் எளிதில்
பெறலாம்.
2.நமக்குள் வந்த இருளை அகற்றலாம்… தூய்மைப்படுத்தும்
சக்தியாக வளர்க்கலாம்
3.மன பலமும் மன நலமும் பெற்று மகிழ்ந்து வாழும்
சக்தியும் பெற முடியும்.