ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 3, 2018

சாந்த குணத்தின் வலிமையப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – “PEACE...!”


பிரிட்டனிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் நம் நாட்டுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் அவர்களுக்கு வந்ததற்குக் காரணம்
1.காந்திஜியின் நினைவாற்றல் தானே தவிர
போர் முறை செய்து அல்ல...!

ஆனால் இவருடைய நினைவாற்றலுக்கு எப்படி அந்த வலிமை வந்தது...?

இரு பட்சிகள் மகிழ்ந்து இருக்கும் வேளையில் ஒன்றை வீழ்த்தினான் அன்று வான்மீகி. அது துடிதுடித்துக் கீழே விழுகின்றது. அடுத்து அதனுடன் வந்த இன்னொரு பட்சியையும் அவன் வீழ்த்த அம்பை எய்கின்றான்.

ஆனால் அவன் குறிகள் அனைத்தும் தவறுகின்றது. அந்த இன்னொரு பட்சியை அவனால் வீழ்த்த முடியவில்லை.

ஏனென்றால் அந்த பட்சியின் உணர்வுகளோ தன்னை இவன் வீழ்த்துவான் என்று எண்ணவில்லை. தன் கூட வந்த பட்சி துடித்துக் கீழே விழுந்ததன் மேல் பாசம் கொண்டு அதை அணுகிச் செல்ல வேண்டும் என்றே விரும்புகின்றது.

பாசத்தின் எல்லை கடந்த உணர்வுகளை அந்தப் பட்சி வெளிப்படுத்தும் பொழுது வான்மீகி சுவாசிக்கும் உணர்வுக்குள் இது தாக்கப்பட்டு அவனுடைய குறிகள் அனைத்தும் தவறுகிறது.

இப்படி ஒரு மணி நேரம் ஆன பின் அவன் உடல் கைகள் எல்லாம் சோர்வடைகின்றது. அதன் பின் தான் வான்மீகி அந்தப் பட்சியை உற்றுப் பார்க்கின்றான்.

1.அந்தப் பட்சியின் கண்களிலிருந்து வெளிப்படும் பாச அலைகளை அவன் சுவாசித்த பின்
2.தான் செய்த தவறை உணர்கின்றான்.
3.வில்லையும் அம்பையும் கீழே போட்டுவிட்டு வானை நோக்கி ஏகுகின்றான்.

பட்சிக்கு இருக்கும் அந்தப் பாசம் தன்னிடம் இல்லையே என்ற அந்த ஏக்கத்தில் விண்ணிலே நினைவைச் செலுத்தும் பொழுது துருவ நட்சத்திரத்தின் அலைகள் அவன் ஈர்ப்புக்குள் சிக்கப்பட்டுத் தன்னை அறிகின்றான். மெய்யை உணர்கின்றான்.

ஒரு கொலைகாரனாக இருந்த வான்மீகியின் செயலாக்கங்களை அந்தப் பட்சியின் பாச உணர்வு எப்படி ஒடுக்கியதோ அதைப் போலத்தான் காந்திஜிக்கும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழில் செய்யும் பொழுது ஆங்கிலேயர்கள் அவருக்குப் பல தொல்லைகள் கொடுக்கும் பொழுதும் அங்கிருக்கும் கருப்பின மக்களை ஆங்கிலேயர்கள் துன்புறுத்தும் பொழுதும் அதிலிருந்து விடுபட வான்மீகியின் இராமாயணக் காவியத்தைப் படித்தார்.  

அதன் வாயிலாக வான்மீகி பெற்ற மெய் உணர்வைக் காந்திஜி நுகரப்படும் போதுதான் தன்னுடைய இளமைப் பருவத்தில் தான் செய்த தவறுகளையும் அதனால் மற்றவருக்கு ஏற்பட்ட துன்பங்களையும் உணர்ந்தார்.

உணர்ந்தபின் தீமையிலிருந்து “மக்களை மீட்ட வேண்டும்...!” என்ற எண்ணம் வலுப் பெற்று சாந்தம் கொண்ட உணர்வுகள் கொண்டு தன் எண்ணத்தை மக்களுக்கு பதியச் செய்து மன வலிமை ஊட்டியை ஞானத்தின் அன்பு கொண்டு ஒருக்கிணைந்த நிலையில் ஒன்று சேர்த்தார்.

எதிரி என்ற நிலையில் வேடுவன் (வான்மீகி) அம்பு கொண்டு எய்யப்படும் போது அவன் தாக்கி விடுவான் என்ற நிலை இருப்பினும் பட்சி எவ்வாறு தன் பாசத்தைக் குறிக்கோளாக வைதது அதிலிருந்து காக்கப்பட வேண்டும் என்ற உணர்வுகள் கொண்டு வந்ததோ அதைப் போல்
1.காந்திஜியும் ஆங்கிலேயர்களிடம் அடிபட்டு மடிந்து விடுவேன் என்ற எண்ணவில்லை.
2.மக்களைக் காக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டு வந்தார்.
3.இதைத் தான் வலிமை என்று சொல்வது.

சாந்தத்திற்கு எத்தகைய வலிமை உள்ளது என்று செயல்படுத்திக் காட்டியர் காந்திஜி. இராமயாணக் காவியத்தின் தொடர் வரிசையில் தான் படித்துணர்ந்த தன்மையின் உணர்வு கொண்டுதான் அந்த மகான் செயல்பட்டார்.  

நம்முடைய வாழ்க்கையில் ஆவேசமும் ஆத்திரமும் இருப்பினும் தன் குடும்பத்தில் சில சிலை குறைகள் இருந்தாலும் அதை எல்லாம் மாற்றிட காந்திஜி செயல்பட்ட வழியில் சாந்த உணர்வின் வலிமை கொண்டு எதனையும் சாதிக்கும் வல்லமையாக மற்றவர்களுக்கு நல் உணர்வுகளை எடுத்துரைக்கும் நிலைகளுக்கு நாம் வர வேண்டும்.

1.மெய் ஞானிகளின் உணர்வை எடுத்து வளர்த்து
2.அந்த ஞானத்தால் சாந்தத்தைக் கடைப்பிடித்து
3.அதன் வழியில் குறைகளை எடுத்து எடுத்துச் சொல்வதும்
4.அந்த வலிமை கொண்டு குறைகளால் வரும் வினைகளை எப்படி நீக்குவது என்றும்
5.இந்த உணர்வின் வேகத்தைப் பதிவு செய்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் நிச்சயம் ஒற்றுமை வரும்.
6.ஏனென்றால் நாம் எடுத்து கொண்ட அந்த உணர்வின் எண்ணங்களே நம்மை இயக்குகின்றது.

சாந்த உணர்வின் வலிமை கொண்டு மற்றவர்களை எல்லாம் தன்னுடன் அரவணைத்து இருந்தால்தான் பகைமை உணர்வுகளே மாறுகின்றது என்ற நிலையைத் தெளிவாக எடுத்து அந்த வலுவின் நிலைகள் கொண்டே செயல்பட்டவர் காந்திஜி.

ஒவ்வொரு நிலையிலும் அப்படிச் செயல்பட்டதால் தான் உலக நாடுகள் எல்லாம் அவரைப் பற்றிச் சிந்திக்கின்றது. அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டு காந்திஜியின் உயர்ந்த பண்பு கொண்ட உணர்வுகள் அனைவருக்கும் தேவை என்று (இன்றும்) உணர்த்துகின்றனர்.

1.பகைமை உணர்வு கொண்டு மற்றவர்களை அழித்து நம்மை நாம் காத்துக் கொள்வதைக் காட்டிலும்
2.மனிதன் உடலிலும் சரி நாட்டிலும் சரி அந்தத் தீமையை விளைவிக்கும் எண்ணங்களை மாற்றி
3.நமக்குள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் அந்த பகைமையின் நிலைகள் மாறும்.
4.மனிதன் மகிழ்ச்சி நிலை பெறுவான் என்ற உணர்வை உலகுக்கே ஊட்டினார் காந்திஜி.
5.இதன் துணை கொண்டு தான் உலகம் அனைத்துக்கும் சுதந்திரம் கிடைத்தது இந்தியாவிற்கு மட்டுமல்ல...!

நாம் ஒவ்வொருவரும் சாந்த குணத்தின் வலிமையை அவசியம் பெற வேண்டும்.