ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 27, 2018

தியானம் செய்து செய்து என்னத்தைக் கண்டேன்...? ஒன்றும் நடக்கவில்லையே... கிடைக்கவில்லையே...! என்றால் அதன் காரணம் என்ன...?


விவசாயப் பண்ணைகளில் பல பல உணர்வினை இணைத்துப் புதுப் புது வித்தினை உருவாக்குகின்றார்கள். அவர்கள் கொடுத்த அந்த வீரிய வித்துக்களை வாங்கி நிலத்தில் ஊன்றுகின்றோம்.

அந்தப் பயிர்களைச் சீராக வளர்க்கும் பக்குவப்படுத்தும் முறைகளையும் உபாயத்தையும் அவர்களே கொடுக்கின்றார்கள். அவர்கள் சொன்ன வழியில் செயல்படுத்தும் போது பயிர் செழிப்பாக வளர்கின்றது. நல்ல மகசூலையும் கொடுக்கின்றது.

ஆனாலும் அந்தப் பயிர் இனங்களைப் பக்குவப்படுத்தி வளர்க்கும் போது இடைமறித்துக் களைகளும் முளைக்கின்றது. களைகளை அகற்றவில்லை என்றால் எவ்வளவு உயர்ந்த தர வித்துகளாக நாம் விதைத்திருப்பினும் அதனுடைய செயலாக்கங்கள் இழக்கப்படுகின்றது. பயிரின் விளைச்சல் குன்றி மீண்டும் தரமான வித்துக்களை உருவாக்க முடியாது.

இதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியுல் மெய் ஞானிகளின் அருள் வித்துக்களை உங்களுக்குள் அடிக்கடி உபதேசத்தின் மூலம் பதிவாக்குகின்றோம். வளர்க்கும்படி செய்கிறோம்.
1.உங்களுக்குள் அருள் ஞான வித்தாக விளைய வைத்ததை
2.ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் பாதுகாத்தல் வேண்டும்.

ஏனென்றால் நம்முடைய இந்த மனித வாழ்க்கையில் பெரும்பகுதி  உடலின் இச்சைகளுக்கே நம் எண்ணத்தைச் செலுத்தி வாழ்ந்து வருகின்றோம்.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் தியானம் இருக்கும் பொழுது எதை எல்லாம் நாம் எதிர்பார்க்கின்றோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நான் செய்யும் இந்தத் தியானத்தின் மூலம்
1.என் உடல் நலம் பெற வேண்டும் என்றும்
2.எனக்குத் தொழில் வளம் பெருக வேண்டும் என்றும்
3.நான் எண்ணியது எல்லாம் இந்த உடலின் வாழ்க்கைக்கு நடக்க வேண்டும்...! என்றும் ஏங்குகின்றோம்.

அது கிடைக்கவில்லை என்றால் “என்னத்த... நான் தியானத்தைச் செய்தேன்...! தியானம் செய்து செய்து எனக்கு என்ன கிடைத்தது...? ஒன்றும் நடக்கவில்லை...! என்று இந்தச் சோர்வான உணர்வினை எடுத்துக் கொள்கிறார்கள்.

அது மட்டுமல்ல. அவர்கள் பெறவில்லை என்றாலும்... தியானம் செய்யும் அடுத்தவர்களிடமும் சென்று “இத்தனை காலமாக நீங்கள் தியானம் செய்கிறீர்கள் அல்லவா...! அதில் என்ன பெற்றீர்கள்...?” என்று இவர்களே கேட்கத் தொடங்குகின்றார்கள்.

தான் எதிர்பார்க்கும் நிலைகளுக்கு...
1.இந்த உடலின் இச்சையை வளர்ப்பதற்குத் தான் தியானம் இருக்கிறோம் என்ற எண்ணங்களில் இருக்கின்றோமே தவிர
2.இந்த மனித உடலை விட்டுக் கடந்தால் எங்கே செல்ல வேண்டும்...?
3.அதற்கு எந்தச் சக்தியைச் சேர்க்க வேண்டும்...? என்ற எண்ணமே இல்லை.

உடல் பெறும் உணர்வுகளை மாற்றி என்றுமே அழியாத ஒளி உடலை நாம் வளர்க்க வேண்டும் என்பதைத் தான் யாம் (ஞானகுரு) சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
1.இதை வளர்க்க வாழ்க்கையில் வரும் அனைத்துத் துன்பங்களும் அகலும்.
2.(சீராகக் கடைப்பிடிப்பவர்கள் இதை நிச்சயம் உணரலாம்)

அதை விடுத்து விட்டு சாமி (ஞானகுரு) சொல்கிறார். தியானத்தையும் செய்தோம். அப்படியானால் ஏன் இது நடக்கவில்லை...? என்பார்கள்.

இது ஏன் என்றால் இரண்டு ஆசை இருக்கும். எப்படி...?

அதாவது பிள்ளைக்கு நல்ல இடத்தில் கல்யாணம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்குண்டான நிலைகளை செய்து கல்யாணம் நடந்து முடிகின்றது.

திருமணம் முடிந்தாலும் யாம் உபதேசத்தின் வாயிலாகச் சொல்லி வந்த ஞானிகளின் அருள் உணர்வுகளை வாழ்க்கையில் நடக்க வேண்டிய அந்தப் பக்குவத்தை குழந்தைகளுக்கும் கண்டிப்பாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதைச் செய்வதில்லை. பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருந்து கொண்டு மருமகன் தன் பிள்ளையை ஏசி விட்டால் போதும்...!
1.நல்வழியில் நடக்கும் உணர்வுகளை ஊட்டுவதற்குப் பதில்
2.எதிர்ப்பு உணர்வு கொண்டு வெறுக்கும் உணர்வுகளையே வளர்க்க நேர்கின்றது.

அப்படி வளர்த்துக் கொண்ட பின் சாமி சொன்ன வழியில் நாம் தியானம் இருந்தோமே... இப்பொழுது என்ன ஆனது...? சாமி ஆசீர்வாதம் செய்து தானே திருமணம் நடத்தினார்...!

அப்படியானால் மகளுக்கும் மருமகனுக்கும் ஏன் ஒருவருக்கொருவர் சண்டை வருகிறது...? என்ற வினாக்களை எழுப்பி புவியின் ஈர்ப்பின் பற்றுதலுக்கே நாம் வந்து விடுகின்றோம்.

வெறுக்கும் உணர்வையும் தியானத்தின் உணர்வையும் இது இரண்டையும் இணைத்து “நல்லது நடக்கவில்லையே...!” என்ற இந்த உணர்வினை நாம் நுகரப்படும் போது ஓ...ம் நமச்சிவாய...! அதைத்தான் நமக்குள் உருவாக்கிக் கொள்கிறோம்.
1.எந்த வெறுப்பையும் கோபத்தையும் எண்ணி இந்த உணர்வை நுகர்ந்தோமோ
2.அந்த அணுவாக உருவாக்கிவிடுகின்றோம்.

இந்த உணர்வின் சத்தை வளர்த்து அதை உணவாக நம் உடலிலுள்ள அணுக்களுக்குக் கொடுக்கும் பொழுது அது அந்த இனத்தைத் தான் பெருக்கும்.

அப்புறம் நீங்கள் எங்கேதான் போனாலும் கூட உயர்ந்த சக்தியைப் பெறுவதற்கு மாறாக தன்னையே இழி நிலைச் சரீரம் பெறும் நிலைக்கே இழுத்துக் கொண்டு போகும். எண்ணியது நடக்கவில்லை எனறால் வேதனை என்ற உணர்வை நுகர்ந்து விஷத்தின் தன்மையைத் தான் வளர்க்க முடியும்.

முதலில் சாதாரணமாக இருக்கும் போது அந்த விஷம் வேறு. ஆனால் தியானமும் செய்துவிட்டு தான் எண்ணியபடி நல்லதைப் பெற முடியவில்லை என்ற ஆசையின்  நிலைகளில் செல்லும் பொழுது கடும் வேதனையாகின்றது.

இத்தகைய உணர்வுகளை உருவாக்கப்படும் போது முதலில் இருந்ததைக் காட்டிலும் விஷத்தின் தன்மையை அதிகமாக வளர்த்து விஷப் பூச்சியாக நம்மை மாற்றும் தன்மையைத்தான் பெறுகின்றோம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

ஆகவே இந்த உடலின் இச்சைக்குள் தான் இந்தத் தியானத்தைக் கொண்டு வருகின்றோமே தவிர
1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல.
2.எத்தனை காலம் இந்த உடலில் நாம் வாழ்கின்றோம்...! வளர்கின்றோம்...? என்ற தெளிவான எண்ணங்கள் இல்லை.

உடலை விட்டுப் பிரிந்தால் இனிப் பிறவி இல்லா நிலைகள் அடைய வேண்டும் என்பதற்குத்தான் நாம் இதைச் செயல்படுத்துகின்றோம்.
1.இந்த உடலில் நீங்கள் கோடி சுகத்தைப் பெறுங்கள்
2.(முதலில்) டாக்டரை வைத்தாவது இந்த உடலில் உள்ள எல்லா நோயையும் நீக்கிக் கொள்ளுங்கள்...!
3.அப்புறம் எத்தனை காலம் இந்த உடல் வாழுகின்றது...? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
4.ஒரு சில காலத்திற்கே வாழுகின்றது. பின் இந்த உணர்வின் தன்மை முதிர்வாகி இறந்து விடுகின்றது.
5.இதை இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா...?

மகரிஷிகளும் ஞானிகளும் இந்த உடலை விட்டுப் பிரிந்தனர். பிரிந்தாலும் அவர்கள் அனைவரும் ஒளியின் சரீரமாக இன்றும் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றனர்.

நாம் அவர்கள் சென்ற வழியில் அதைப் பற்றுடன் பற்றிடல் வேண்டும்.
1.அதைப் பற்றினால் அந்த எல்லையை அடைய
2.இந்த உடல் வாழ்க்கைக்கு எது தேவையோ அது தானாக வரும்.
3.எது நடந்தாலும் நன்மை பயக்கும் செயலாகவே அது முடியும்.
4.நமக்கு எந்த வேதனையும் வராது. வெறுப்பும் வராது. ஏகாந்தமாக வாழ முடியும்...!
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டியது இதைத்தான்...!