ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 1, 2018

மற்றவர்கள் யாரையும் குறை கூறாது தன்னைத் தானே உணர்ந்தால் ஒழிய... பிறருக்குப் போதிக்கவும் முடியாது... மற்றவர்களைத் திருத்தவும் முடியாது...!


உலக நிலைகளில் எடுத்துக் கொண்டால் அரசியலில் யார் முன்னணியில் இருக்கின்றார் என்று பத்திரிக்கைகளில் பார்த்தே இன்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

சட்ட விரோதமான செயல்களைச் செய்பவனும் நூறு பேரை அடக்கக் கூடியவனாகவும் அவனைக் கண்டாலே மக்கள் அஞ்சக்கூடிய நிலைக்குத் தான் இன்றைய நிலைகளில் அரசியல் பண்புகள் வளர்ந்து விட்டது. நீதியும் நேர்மையும் நல்ல ஒழுக்கங்களும் சீர்படும் பண்புகளும் மறைந்து விட்டது.

அன்றைய காலத்தில் பிரிட்டன் மற்ற உலக நாடுகளை அடிமைப்படுத்திக் கொண்டிருந்த பொழுது இதைப் போன்ற நிலைகளைக் கண்டவர் தான்  காந்திஜி. இதிலிருந்து விடுபட வேண்டும் என்று தான் அன்று அவர் செயல்பட்டார்.

1.தன்னைத் தானே உணர்ந்தால் ஒழிய...
2.பிறருக்குப் போதித்து தன் நிலையைச் செயல்படுத்த முடியாது.
3.மற்றவர்களைத் திருத்த முடியாது என்ற நிலையை முதலிலே தான் தனக்குள் எடுத்துக் கொண்டு
4.அந்த உண்மைகளை அறிந்து அதன் வழியில் தான் செயலாக்கினார்.

பல கடுமையான தொல்லைகளை காந்திஜி அனுபவித்தாலும் அவர் யாரையும் குறை கூறாது உணர்வின் நிலையைத் தெளிவாக்கிக் கொண்டு
1.மனிதன் நாம் எப்படி வாழ வேண்டும்...?
2.பகைமையை எப்படி அகற்ற வேண்டும்...?
3.பகையற்ற வாழ்க்கையை நாம் எப்படி வாழ முடியும்...?
4.அரசியலில் இருந்தாலும் அதில் தவறும் போது அதை வழிபடுத்தி நடத்தும் முறைகள் என்ன...?
5.மக்களாட்சி என்ற நிலைகள் வரப்படும் போது மக்கள் நாம் எப்படி வாழ வேண்டும்...?
6.அரசியல் என்றால் என்ன...? என்ற நிலையில் மக்களை காக்கத் தான் அரசு...! என்று உணர்த்தினார்.

அரசில் தலைமை தாங்கும் ஒவ்வொருவரும் நாட்டு மக்களைப் பேணிக் காத்து அறநெறிகள் கொண்டு அரவணைத்து எவ்வாறு செயல்பட வேண்டும்...? என்ற நிலையை அவர் செயல் வடிவில் செய்து காட்டினார்.

மக்கள் எல்லோரும் தன்னைத் தான் உணர வேண்டும் என்ற அந்த உண்மையைத்தான் அவர் தெளிவாக உணர்த்தினார். நாடு சுதந்திரம் அடைந்த பின்னும் அதைத்தான் சொன்னார்.

மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பவர்களே தேர்தலில் நின்று தேர்ந்தெடுக்கப்பட்டு அரசாட்சி செய்ய வேண்டும். பல கட்சிகள் வேண்டாம்...! என்று அன்றே சொன்னார்.

ஏனென்றால்
1.தன் உடலுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
2.இந்த உடலில் சேர்க்க வேண்டியது எது...? என்பதை உணர்ந்து
3.தான் கற்றுணர்ந்த உணர்வை அந்த வான்மீகி மாமகரிஷி பெற்ற அருள் சக்தியை தனக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டார்
4.அதனையே பெற வேண்டும் என்று ஏங்கி... அதனையே தான் நுகர்ந்து.. அதன் வழிகளிலேயே நடந்தார்.
5.தீமையில் இருந்து விடுபட வேண்டும் என்ற உயர்ந்த குணங்களைத் தனக்குள் எடுத்தார்... அதையே வளர்த்தார்...!

அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் ஒவ்வொருவரும் தன்னைத் தான் உணர்ந்து இந்த வாழ்க்கையை வழி நடத்தினோம் என்றால்
1.நம் நல்ல குணங்களைக் காக்க முடியும். நல்ல பண்புகளை வளர்க்க முடியும்.
2.இந்தப் பிறவியில் நாம் பிறவியில்லா நிலை என்ற அழியாத நிலை பெற முடியும்...!