ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 16, 2018

அகஸ்தியன் "27 நட்சத்திரத்தின் சக்தியை" ஏன் தனக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டான்…?


இயற்கையின் இயக்கத்தின் பல உண்மைகளை அறிந்த அகஸ்தியன் தாவர இனங்களின் உணர்வையும் முழுமையாக அறிகின்றான். பச்சிலைகளைச் சாப்பிடும் போது உடலிலிருந்து அந்தப் “பச்சிலைகளின் மணம் தான்…!” வருகின்றது என்று அறிகின்றான்.

எந்தெந்தப் பச்சிலைகளை வெள்ளாடு சாப்பிடுகிறதோ அதே போல் மான் சாப்பிடுகிறதோ அதற்குத்தக்கவாறு அதனதன் உடல்களிலிருந்து மணங்கள் வருகிறது.

அந்த மணம் வரப்படும் பொழுது அந்த மானையோ ஆட்டையோ கொன்று பிற மிருகங்கள் அதைச் சாப்பிடும் போது அந்த உணர்வின் தன்மை தான் அதன் உடலுக்குள்ளும் சேருகிறது.

அதாவது எதை அதிகமாக நேசித்துச் சாப்பிட்டதோ அதையே தான் தேடும். உதாரணமாக ஒரு புலி மான்களை அடித்துச் சாப்பிட்டது என்றால் அந்த மானைத் தான் அதிகமாகச் சாப்பிடும்.

ஒன்றை ரசித்துப் புசித்தால் அந்த உணர்வின் தன்மை கொண்டபின் அந்த அணுக்கள் தான் அங்கு அதிகமாக வளரும். ஆகவே தான் புலி மானை அதிகமாக அடித்துச் சாப்பிடுகிறது. புலி மற்றொன்றைக் குறி வைத்த நிலைகள் இருந்தாலும் அந்த உணவைத் (மானைத்) தேடியே போகும்.

உதாரணமாக கேரளாவில் மொக்கை அரிசி இருக்கிறது. அந்த மொக்கை அரிசியைத் தான் அவர்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.
1.அந்த மொக்கை அரிசியை நம்மைச் (தமிழ் நாட்டில்) சாப்பிடச் சொன்னால்
2.இந்த மொக்கை அரிசியை யார் சாப்பிடுவது என்கிறோம்…?
3.நாம் இங்கே சாப்பிடக்கூடிய நைஸ் (சன்னமான) அரிசியை அவர்களைச் சாப்பிடச் சொன்னால்
4.இதை யார் சாப்பிடுவார்கள்…? என்று அவர்கள் (கேரளா) கூறுகிறார்கள். 

இவையெல்லாம் அந்தந்த உணர்வுகொப்ப வலிமை கொண்ட உயிரினங்கள் மற்ற சாந்தமான உயிரினங்களைக் கொன்று புசித்தாலும் எல்லாவற்றையும் அது தாராளமாகச் சாப்பிடுவதில்லை. தன் உணர்வுகொப்ப தான் உணவை எடுக்கும்.
1.மற்ற உணவுகள் இருந்தாலும் அவற்றை முகர்ந்து பார்த்துவிட்டுப் போய் விடும்.
2.அதற்குப் பிடிக்கவில்லை என்றால் மற்றொன்றை - அது எதைக் குறி வைத்து தாக்கியதோ அதைச் சாப்பிடும்.
1.இதைப்போல இயற்கையின் நியதிகளை அதனதன் உணர்வுகொப்பத் தான் இந்த இயக்கத்தின் நிலைகளே மாறுகிறது என்பதை அகஸ்தியன் அறிந்தான்.

வெள்ளாடுகளைப் போல நாமும் பச்சையாகக் காய்கறிகளைச் சாப்பிட ஆரம்பித்தோமானால் இப்போது மனிதனாக இருக்கும் நமக்குள் வெள்ளாட்டின் உணர்வுகளின் அணுக்கள் தான் சேரும். வெள்ளாட்டின் ஈர்ப்புக்குள் நாம் போய்ச் சேருவோம்.

மான் அது எதை எதையெல்லாம் சாப்பிடுகிறதோ அதன் உணர்வு கொண்டு அந்தப் பச்சிலைகளை நாம் சாப்பிட ஆரம்பித்தால் (வேக வைக்காமல்)  சாப்பிட்டால் அதன் நிலைக்கே போவோம்.

குரங்கினங்களை எடுத்துக் கொண்டால் அது மனித இனமாக இருக்கும். எந்தெந்தப் பச்சிலைகளை அது உணவாக உட்கொள்கிறதோ அதன் மணம் வந்தால் அதன் ஈர்ப்புக்குள் சென்றுவிடும். 

இன்று மனிதனாக உருவாக்கிய பின் “நமது மாற்றங்கள் இப்படித் தான் இருக்கும்…!” என்ற நிலைகளை தெளிவாக அறிந்து உணர்ந்தவன் அகஸ்தியன். அதனால் உணவை வேக வைத்து அது மீண்டும் முளைக்காத நிலையிலே செய்து சாப்பிட்டான் அந்த அகஸ்தியன். “அவனுடைய வளர்ச்சி இது…!”

1.அகஸ்தியன் தன் வாழ்நாளில் உணவை வேக வைத்துச் தான் சாப்பிடுகிறான்.
2.உணவை வேக வைத்துச் சாப்பிட்ட பின் இறந்தால்
3.மறு பிறவிக்கு - அதாவது மற்ற உயிரினங்களின் ஈர்ப்புக்குள் போக முடியாது.

ஏனென்றால் அன்று அகஸ்தியன் வாழ்ந்த இடங்களில் உணவுக்காக மற்ற உயிரினங்களைக் கொன்று சாப்பிடுவது அந்த மலைவாசிகளுக்குச் சர்வ சாதாரணம்.

ஆகவே மற்ற உயிரினங்களைக் கொன்று சாப்பிட்டு வந்தால் இந்த உணர்வின் தன்மை கொண்டு சென்றால் மீண்டும் பிறவிக்குச் செல்வோம்…! என்று தெளிவாக உணர்ந்து கொண்டான்.

ஆகவே இதை வெல்வதற்காக அன்று அகஸ்தியன் என்ன செய்தான்…?

 27 நட்சத்திரங்களின் உணர்வுகளும் மோதும் போது ஒளிக் கற்றையாக மாறி உணர்வின் அணுக்கள் மின் அணுக்களாக மாறும். அதை எடுத்தோம் என்றால் இதை எல்லாம் வேக வைக்கலாம்…! என்று அறிகின்றான்.

இப்போது சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதா…?

நட்சத்திரங்களின் ஆற்றல்கள் மோதி மின்னல்களாக வரும் பொழுது அந்த ஒளிகளை வெள்ளிக் கோள் எடுக்கிறது. “பளீ….ர்ர்ர்…! என்று மின்னல் வருவதை எல்லாம் அந்த வெள்ளிக் கொள் உணவாக எடுக்கிறது. அதே சமயத்தில் மோதியவுடனே விஷம் பிரிந்தே தீரும்.

வீட்டில் விஷமான காய்கறிகளை வேக வைத்துப் பாருங்கள். இந்த விஷம் பிரியும். விஷம் பிரிந்த உடனே என்ன செய்கிறது…?
1.காற்றிலுள்ள எந்த விஷத்தின் தன்மை தாக்கியதோ
2.இதைப் பிரித்துத் தன்னோடு சேர்த்து அது வளர்த்துக் கொள்ளும்.
3.சூரியன் இந்த விஷத்தின் நிலைகளை எடுத்திருந்தால் அதனின்  சத்தைப் பிரித்து அதனுடன் இணைக்கும்.

இதையெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னைக் காட்டுக்குள் கொண்டு போய்க் காட்டுகிறார். பெற்ற அனுபவத்தை எல்லாம் நீங்களு பெற வேண்டும் என்பதற்காகத்தான் (ஞானகுரு) இதைச் சொல்கிறேன்.

இவற்றைக் கண்டுணர்ந்த அகஸ்தியன் அதனால் தான் உணவை வேக வைத்துச் சாப்பிட வேண்டும் என்று எண்ணுகிறான்.

மாமிசங்களை வேக வைத்தாலும் என்ன நடக்கிறது…? அதை வேக வைத்து வெளிப்பட்ட அந்த உணர்வின் சாறுகளை சூரியன் கவரும். சூரியன் எவ்வழியில் கவர்கிறது…?

எந்தெந்த செடியின் சத்தைக் கவர்ந்து இந்த உடலானதோ அதேபோல இது வெளிப்படும் போது சூரியன் எந்தெந்தச் செடியின் சத்தை எடுத்ததோ அதை இது கவர நேர்கின்றது.
பலவிதமான செடியின் தன்மை வரப்படும் போது
1.இந்த வெள்ளாட்டின் குணங்கள் எப்படி இருக்கின்றதோ
2.இதையும் சேர்த்து ஒரு புது விதமான செடி வரும்.

அதே போல புலிகள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையும் இது உடலிலிருந்து வரக்கூடிய உணர்வின் தன்மையையும் சூரியன் எடுத்துக் கொள்ளும்.
1.இந்தப் புலி இது எதையெல்லாம் கொன்றதோ
2.இதைப் போல மற்ற உயிரினங்களின் சத்தை இது கவர்ந்து வைத்திருந்தால்
3.இதைச் சேர்த்து ஒரு புது விதமான உணர்வை எடுக்கும்.

அதாவது அப்போது தாவர இனங்களின் சத்தும் மிருகங்கள் கொன்று பூசித்த உணர்வும் ஒன்றாகப்படும் போது இந்த உணர்வுகள் ஒன்றோடு ஒன்று மோதி மீண்டும் தாவர இனங்களாக மாறும்.

அப்படி உருவாகும் பொழுது…
1.இரத்தம் உறியக்கூடிய தாவரமு…ம் ஒன்றுகொன்று கொன்று புசிக்க கூடிய நிலைகளும்
2.சாப்பிட்டதும் கொல்லக்கூடிய விஷமான தாவரங்களும்
3.இப்படிப் பல விதமான தாவர இனங்கள் உருவாகின்றன என்பதை அகஸ்தியன் தெளிவாக உணர்கிறான்.

ஆகவே இத்தகைய விஷத் தன்மையை எல்லாம் வெல்வது எது…? என்ற நிலையில் தான் அந்த 27 நட்சத்திரத்தின் ஆற்றல்களைத் தனக்குள் எடுத்து உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டான்.

27 நட்சத்திரத்தின் சக்தியை அப்படி எடுத்த அந்த அகஸ்தியன் தான் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான். அந்த ஆற்றலை நாம் பெற்றால்
1.நாமும் ஒரு ஒளியான நட்சத்திரமாக
2.துருவ நட்சத்திரமாக நிச்சயம் ஆக முடியும்.