ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 28, 2018

தீமையை உருவாக்கும் உணர்வுகளின் இயக்கமும்... தீமையை வென்ற ஞானிகளின் உணர்வின் இயக்கமும்...!


எனக்கு இடைஞ்சல் செய்கின்றான் பாவி...!  இப்படிச் செய்தால்   அவனெல்லாம் உருப்படுவானா...? என்று நமக்கு ஆகாதவனைப் பற்றி நாம் பேசுகின்றோம்.

ஆனால் மீண்டும் மீண்டும் அந்த உணர்வின் தன்மையையே எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால் இடைஞ்சல் செய்தவனின் எண்ணமே நமக்குள் தோன்றுகின்றது. அதன் அணுக்களே நமக்குள் பெருகுகின்றது.

பின் அதற்கப்புறம் ஒன்றும் சொல்ல வேண்டாம். உடலில் அது நோயாக மாறி நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி பகைமையை உருவாக்கும் அணுக்களாக விளைய வைத்த பின் உடலை விட்டுச் சென்ற பின் எங்கே போவோம்...?
1.அவர் முன்னாடி இறந்தார் என்றால் அவர் ஆன்மா இங்கே வந்து விடும்.
2.நாம் முதலில் இறந்தால் அவருக்குள் செல்வோம்.
3.இதே உணர்வை அந்த உடலிலும் விளைய வைத்து அந்த உடலையும் வீழ்த்தும்.

அவர்களும் அதேபோல தன் நினைவு கொண்டு மற்றவர்களை எண்ணுவார்கள். அந்த ஆன்மா வேறொரு உடலுக்குள் போகும்.

ஆனால் இந்த உடலை விட்டு வெளி வந்த ஆன்மாவோ நஞ்சு கலந்த உணர்வின் அணுக்கள் எதுவோ இந்த உயிருடன் ஒன்றிய கருவின் ஆன்மாவாக மாறுகின்றது.

அடுத்து உயிராத்மாவில் சேர்ந்த மணம் எதுவோ தேளோ பாம்போ விஷமான ஜெந்துக்களோ அத்தகைய உடலுக்குள் தான் போவோம். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

புழுவிலிருந்து பாம்பாக தேளாக மற்ற எத்தனையோ விஷ ஜந்துகளாகப் படிப்படியாக உருவாகித் தான் இன்று நாம் மனிதனானோம்.
1.மனிதனான பின் மீண்டும் விஷமான உயிரினங்களாகப் பிறக்க வேண்டுமா...?
2.சற்று சிந்தியுங்கள்.

ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமான விஷம் உண்டு. உதாரணமாக ஒரு தேள் மனிதனைக் கொட்டி விட்டால் அந்த விஷம் சிரசில் ஏறி விடுகின்றது.

தேள் செத்த பிற்பாடு வந்த கொடுக்கை எடுத்து வந்து லேசாகக் குத்தினாலும் அது நமக்குள் கடும் விஷமாக மாறும்.

தேளின் கொடுக்கு விஷமாக இருந்தாலும் மற்ற விஷத் தன்மைகளை அது உணவாக உட்கொண்டதனால்தான் விஷத்தை அடக்கும் அந்தத் தேளின் உடலாக அது பெற்றிருக்கின்றது.

விஷம் கொண்ட உயிரினங்களை அது உணவாக உட்கொண்டாலும் அதை எல்லாம் இணைத்துத் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது. ஆனாலும் அந்த விஷமான தேளை ஒரு கோழி கொத்தித் தின்கிறது.

அதே சமயத்தில் கோழி மண்ணுக்குள் இருக்கும் பல பொருள்களை அது கொத்தித் தின்னும் பொழுது
1.அந்த மண்ணைப் பிரித்தெடுக்க முடியவில்லை என்றாலும்
2.உட்கொண்ட பின் உணவுடன் கலந்து செல்லும் அந்த மண்ணைப் பிரித்தெடுக்கும் நிலையாக
3.ஈரல் (உறுப்பு) ஒன்று உருவாகின்றது கோழியின் கல்லீரலில்.

நாளடைவில் இந்த விஷத்தின் தன்மை அதனுடன் கலக்கக் கலக்க அதுவும் சிறுகச் சிறுகக் கரைந்து பல இனங்கள் சேர்த்து இந்த உடலுக்குள் வலு கொண்டதாக மாறுகின்றது.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் உணர்வு பெற்ற மனிதர்கள் இன்று கோழியை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இந்த உணர்வுகள் மனிதனுக்குள் வளர்ச்சி அடைகின்றது.

1.விஷத்தைக் கோழி அடக்கியது போல்... .அதே உணர்ச்சியின் வீரிய உணர்வுகளை மனிதனுக்கும் ஊட்டுகின்றது.
2.ஆனால் அதில் உள்ள விஷத்தின் தன்மை எதுவோ அதனுடன் கலந்த உணர்வை விஷத்தை நுகரும் சக்தியும் மனிதனுக்குள் அதிகமாகக் கூடுகின்றது.
3.கோழியை அதிகமாகச் சாப்பிட்டுப் பழகினால் கோழியின் நினைவே வரும்.

கோழி தன் உடலை வளர்க்க விஷமான பூச்சிகளையோ உயிரினங்களையோ உணவாக எடுத்துச் சாப்பிடுகின்றது. ஆனால் நஞ்சை வென்று வந்த மனிதனோ கோழியை ருசித்து உணவாக உட்கொள்ளும் போது தான் நுகர்ந்த உணர்வுகள் அந்தக் கோழியின் ஞாபகமே வரும்.

அப்புறம் கோழியாகத் தான் பிறக்க நேரும். இன்று மனிதனாக இருந்தாலும் அப்புறம் கோழியாகத்தான் ஆக வேண்டும்.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் இந்தத் தியான வழியிலே வரப்படும் போதே இதைப்போன்ற உடல் இச்சைகளுக்கு எண்ணி “இது தான் நடக்க வேண்டும்...!” என்ற குறிக்கோளுடன் வந்தால் மீண்டும் சாதாரண வாழ்க்கையில் இருப்பது போன்று அந்த உணர்வுகளை வளர்த்துக் கீழே தான் போவோம்.

1.பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் மக்கள் மத்தியில் வந்து
2.தோல்வியைக் கண்டு வெறுப்படைந்துதான்
3.இத்தகைய (மனித) ஆன்மாக்களின் மீது பற்று இருந்தால் நம்மையும் இது இழுத்துக் கொண்டு போய்விடும் என்று
4.அவ்வாறு விலகிச் சென்ற ஞானிகள் ஏராளம்.

தீமையை அகற்றிடும் உணர்வை விளையச் செய்து அனைவரையும் ஞானியாக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் அந்த ஞானிகளுக்கு வரப்படும் போது தான் தகுந்த உபாயத்தைக் கொடுக்கின்றனர்.

அவருக்குள் உருபெற்ற இந்த நிலையை அவர் வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்வை நுகர்வோருக்கெல்லாம் அது கிடைக்கின்றது. ஆனாலும் உடல் இச்சையுடன் இந்த உணர்வின் தன்மைகளை நுகர்ந்தால் அது எங்கே கொண்டு செல்கின்றது...?

1.உடல் மீது பற்றின் தன்மை வரப்படும் போது விண்ணின் ஆற்றலை மறக்கச் செய்கின்றது.
2.பின் நாம் எங்கே போகின்றோம்...? கீழே தான் போகின்றோம்...!
3.அப்பறம் தியானத்திற்கு வந்தால் என்ன ஆகும்....?

இதில் சிலர் நீங்கள் தியானத்தில் என்ன பார்த்தீர்கள்...? என்ன பார்த்தீர்கள்...! என்று இப்படித் தான் கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.

சாமி (ஞானகுரு) சொன்ன வழியில் தான் இவர் நடக்கிறார். அப்படி இருந்தும் இப்படித்தான் நடக்கின்றது... ஒன்றும் நல்லதாகவில்லை...! என்று இலேசாகத் தூண்டி விட்டால் போதும்...!

ஆமாம்...! என்று தலையாட்டி விட்டுத் தான் பெற்றுக் கொண்டிருக்கும் நல்லதைக் கெடுக்கத்தான் உதவும். ஆக அவரும் பெற முடியாது... இவரும் பெற முடியாது...!

ஏனென்றால் நான் (ஞானகுரு) இவர்களிடமிருந்து ஏதோ சக்தி பெறுவதாகத் தான் அர்த்தமாகின்றது.

எல்லோரும் மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மெய் ஞானிகளாக வளர வேண்டும் என்ற என்ற அந்த உயர்ந்த எண்ணம் தான் எனக்குள் அது உருபெருகின்றது. அந்த ஆசையைத் தான் நான் பெறுகின்றேன்.

நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த அருள் ஒளி பெற வேண்டும். நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும் அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்ற உபதேசத்தைத் தான் கொடுக்க முடியும்.

ஞானத்தின் தன்மை விளைந்த அந்த வித்தின் உணர்வுகள் சொல்லாக வரப்படும் போது சீதா. சூரியன் எடுத்து கொண்டால் உணர்வின் அலைகளாகப் படர்கின்றது.

அதை நினைவுக்குக் கொண்டு வந்து நீங்கள் எடுக்க எடுக்க அந்த உணர்வலைகள் உங்களுக்குள் சென்று உங்களுக்குள்ளும் அருள் ஞானம் பெருகும். மெய் வழியில் செல்ல முடியும். பேரானந்த நிலை பெற முடியும்.