ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 18, 2018

பேருண்மைகளைச் சொன்ன அகஸ்தியனின் உணர்வுகள் இன்று யார் கையிலும் இல்லை...! திரிபு செய்து விட்டார்கள்...!

இராமாயணத்தில் படித்திருப்பீர்கள். இரண்டு அரக்கர்கள் மற்றவர்களைக் கொன்று புசிப்பதே அவர்களின் பழக்கம். வாதாபி என்ற அரக்கன் ஆடாக மாறுவான். அவனைக் கொன்று சமைத்து முனிவர்களுக்குப் பரிமாறுவான் அவன் சகோதரன்.

சாப்பிட்டு முடித்தவுடன் “வாதாபி... வெளியே வா...! என்று கூப்பிடுவான். உண்டவரின் வயிற்றைக் கிழித்து கொண்டு வாதாபி வெளியே வருவான். பின் அவரை இருவரும் சேர்ந்து உணவாக உட்கொள்வார்கள். இது அவர்கள் வழக்கம்.

வாதாபி அகஸ்தியனைப் பார்த்த உடனே நீங்கள் எங்கள் விருந்தாளியாக வர வேண்டும். ஆட்டை வெட்டிச் சமைத்துக் கொடுக்கிறோம். நீங்கள் சாப்பிட வேண்டும் என்கிறான்.

நான் மாமிசம் சாப்பிடுவதில்லையப்பா...! என்று சொல்கிறார் அகஸ்தியர்.

அகஸ்தியர் மாமிசம் சாப்பிடுவதில்லை. ஆனால் அரக்கர்கள் நீங்கள் மாமிசம் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள். சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று ஆசையை ஊட்டுவதால் “சரி நீங்கள் மிகவும் கட்டாயப்படுத்துவதால் சாப்பிடுகிறேன்...! என்று அகஸ்தியர் ஒத்துக் கொள்கிறார்.

வாதாபி ஆடாக மாறி விடுகிறான். அதை வெட்டிச் சமைத்துக் கொடுக்கிறான். அகஸ்தியர் உண்டு முடித்ததும் “வாதாபி வெளியே வா...!” என்று சகோதரன் அழைக்கிறான்.

வாதாபி அப்பொழுதே ஜீரணம் ஆகி விட்டான்...! என்று சொல்கிறார் அகஸ்தியர். உடனே உன்னை இப்பொழுதே கொன்று சாப்பிடுகிறேன் என்று சொல்கிறான் அந்த அரக்கன்.

அகஸ்தியன் தன் பார்வையால் அவன் உணர்வின் அலைகளைப் பொசுக்கி விடுகிறார். இது அகஸ்தியனின் சரித்திரம். ஆனால் இராமாயணம் மகாபாரதத்தில் எல்லாம் இதைப் “புலஸ்தியர்...” என்ற ஒரு ரிஷி சொன்னதாகச் சொல்வார்கள்.

புலையர்கள் அதாவது காட்டுவாசிகள் தங்களுடைய புலனறிவால் உண்மையை உணர்ந்தவர்கள் என்று காட்டுவதற்குப் பதில் புலஸ்தியர் என்று பெயரை மாற்றிவிட்டு உண்மையின் இயக்கங்களை மறைத்து உணர்வின் தன்மையை மாற்றி விட்டனர்.

அசுவமேத யாகம் நடத்தும் போது அங்கே என்ன செய்கிறார்கள்...? மாமிசங்களைத்தான் அதிலே  போடுகிறார்கள். இராமன் காட்டுக்குள் போகும் போது என்ன செய்கிறார்...? மாமிசங்களைத் தான் விருந்தாக வைத்துச் சாப்பிடுவார். அப்படித்தான் படித்திருக்கின்றீர்கள் இல்லையா...?

அவர் சாந்தமானவர் மற்ற உயிரினங்களைக் கொல்ல மாட்டார் என்று சொல்கின்றனர். இப்படி அவர் மாமிசம் சாப்பிடுவார் என்று இதை இணைத்துக் கொண்டது யார்...? நன்றாக யோசனை செய்து பாருங்கள்...!

1.நாம் நுகரும் உணர்வுகள் எண்ணங்களாக எப்படி வருகிறது...?
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் எப்படி இயக்குகிறது...?
3.உணர்வால் அந்த உடல்கள் எப்படி மாறுகிறது...? என்று காட்டியது அகஸ்தியன் தான்.

இப்போது சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதா...? நன்றாகத் தெளிந்து பாருங்கள்...! இராமன் மாமிசத்தைச் சாப்பிட்டது என்று இதை இப்படி எடுத்து மாற்றிக் கொண்டது யார்...?
1.இயற்கையின் உண்மையின் மாற்றத்தை அரசியல் ரீதிக்கு மாற்றுகின்றார்கள்.
2.அரசனை வாழ வைப்பதற்காக வேண்டி அரசன் வழியில் மக்களுக்குப் போதித்தார்கள்.

அரசனின் கீழ் அடிமைப்படுத்தி அவனுக்குக் கீழ் மக்கள் வருவதற்கும் அசுவமேத யாகம் என்ற நிலைகளில் மந்திரங்களைச் சொல்லி ஒன்றோடு ஒன்றைக் கலக்கச் செய்து சோமபானம் என்ற மதுவைக் கொடுத்து மக்களைத் தன் வசப்படுத்திக் கொண்டார்கள் அன்றைய அரசர்கள்.

சோமபானத்தை ஊற்றி யாகத் தீயில் புகையை மூட்டி எந்த மந்திர ஒலியில் எதைப் பதித்தானோ எந்த இசைக் கருவிகளில் எதை இசைத்தானோ அந்த இசையின் தன்மை வரப்படும் போது எந்த உடலில் பதிந்ததோ அந்த உடலில் விளைந்த உணர்வுகளை எல்லாம் கவர்ந்து கொள்கிறார்கள்.

கவர்ந்த உணர்வுகளையும் ஆன்மாக்களையும் பில்லி சூனியம் ஏவல் என்று பயன்படுத்தி
1.அடுத்த நாட்டைப் பழி வாங்குவதற்கும்
2.ஒவ்வொரு குணங்களுக்கும் கடவுள் என்று பெயர் வைப்பதும் தெய்வம் என்ற நிலைகளை உருவாக்குவதும்
3.தெய்வத்தின் நிலை என்று சொல்லி இன்ன இன்னது செய்யும் என்று அதற்குண்டான பதார்த்தங்களைக் கொடுப்பதும்
4.யாகத்தீயில் போட்டு காளி மாரி சாமுண்டீஸ்வரி என்ற நிலையும்
5.மந்திர ஒலிகளை மாற்றி இசையின் தன்மையைக் கூட்டி இதன்வழி தான் அரச நியதிகளாகக் காட்டிவிட்டார்கள்.
6.இன்று நாம் அந்த வழியில் தான் வளர்ந்து வந்துள்ளோம்.

நம் நாடு மட்டும் அல்ல. உலகம் முழுவதற்குமே இந்த உடலின் இச்சைக்குத் தான் மாற்றிக் கொண்டோமே தவிர “உயிரின் இச்சை யாருக்கும் வரவே இல்லை...!”

உயிர் தான் நம்மை வளர்த்தது என்ற பேருண்மையை உணர்த்தி அந்த உயிருடன் ஒன்றிய ஒளியாக முழுமை அடைய வேண்டும் என்ற
1.உண்மையின் இயக்கத்தைச் சொன்ன அகஸ்தியன் உணர்வுகள்
2.இன்று யார் கையிலும் இல்லை.

பிறருடைய வேதனை உணர்வை நுகர்ந்தால் தீய வினையாகின்றது. வேதனையான அந்த உணர்வை நமக்குள் சதுர்த்தி - நிறுத்துதல் வேண்டும். நிறுத்த வேண்டும் என்றால் இந்த விஷத்தை நீக்குதல் வேண்டும். எப்படி...?

ஒருவர் திட்டியதைப் பதிவு செய்து கொண்டபின் மீண்டும் அவரை எண்ணும் போது இந்தக் காற்றிலுள்ள அந்தத் திட்டியவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வினை நுகர்ந்து அதே உணர்ச்சி நம்மை இயக்குகின்றது.

அதைப் போல அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரத்திரமாகி அதிலிருந்து வருவதை சூரியனின் காந்தப் புலனறிவு கவருகிறது. காற்று மண்டலத்திலே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அலைகளாகப் பரவச் செய்துள்ளது.

அதை நாம் நினைவுக்குக் கொண்டு வந்து எடுக்க வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் எளிதில் பெற முடியும்.

ஆகவே நமது ஆயுள் எதிலே இருக்க வேண்டும்...? முழுமை அடைந்த அந்தத் துருவ நட்சத்திரத்தில் ஆயுள் கால மெம்பராகச் சேர வேண்டும்.

ஆனால் ஆயுள் கால மெம்பராக இருந்து கொண்டு என்னைத் திட்டினார்கள். என்னைக் கேவலமாகப் பேசினார்கள்...! என்று சொல்லிக் கொண்டிருந்தால் ஆயுள் கால மெம்பராக இருந்து என்ன செய்வது...?

நான் நல்லதைத்தான் செய்கிறேன். ஆனால் எனக்கு எல்லோரும் தொல்லைகள் கொடுக்கிறார்கள் என்ற இந்த உணர்வை எடுத்தால் இந்த ஆயுள் கால மெம்பர் அப்படியே தான் இருக்கும்.

தேவை இல்லாததை எண்ணும் போது நாம் மீண்டும் இந்தப் பூமிக்குள் இன்னொரு உடலுக்குள் போய் வேதனையைத்தான் அனுபவிக்க நேரும்.  

ஆகவே அதை மாற்ற வேண்டும் என்றால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரம் ஆன அந்த அகஸ்தியனின் வழியைப் பின்பற்ற வேண்டும். தீமையை அகற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெற இதுவே சரியான மார்க்கம்...!