காட்டில் வாழும் மிருகங்களோ உயிரினங்களோ பெரும்பகுதி இரவிலே தான் தன் இரையைத்
தேடி நுகர்ந்தறிந்து செல்லும் திறன் பெற்றது.
1.தன் இரைக்காக ஏங்கும் போது
2.குறைந்த பட்சம் ஒரு மைல் தூரமாவது தன் உணர்வைச் செலுத்துகின்றது,
அவ்வாறு செலுத்தி நுகர்ந்த பின் அந்த உணர்வுகள் உயிரில் மோதி உணர்ச்சிகள் இயக்கப்பட்டு
தனக்கு இரை “இன்ன இடத்தில் இருக்கிறது…!” என்று நகர்ந்து சென்று தன் இரையை உட் கொள்கிறது.
அப்படிச் சென்றாலும் எதிரி என்ற உணர்வுகள் கொண்டு தன்னைத் தாக்கிப் புசிக்கும்
வலுவான மிருக இனங்களின் மணத்தை நுகர்ந்து
1.அது அருகிலே வர வர தன் மணத்தால் நுகர்ந்தறிந்து
2.அந்தச் சாந்தமான மிருகங்கள் அனைத்தும் குகைகளிலோ அல்லது மற்ற இடங்களிலோ பதுங்கும்
நிலைகளைப் பெற்று விடுகிறது.
பதுங்கினாலும் தன் உணவுக்காகத் தேடும் அந்த வலுவான மிருக இனங்கள் இது பதுங்கும்
இடங்களை நுகர்ந்து அதைக் கொன்று புசித்து தன் உணவாக உட்கொள்கிறது.
இதனால் புல் போன்றவற்றை உணவாக உட்கொள்ளும் அத்தகைய சாந்த மிருகங்கள்
1.தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து
2.அதனின் உணர்ச்சிகள் அதன் உடலிலே சேர்க்கப்பட்டு
3.அதன் உணர்ச்சிகள் அதனை இயக்கி அதற்குத் தகுந்த எண்ணங்களும்
4.தப்பிக்கும் உணர்வு கொண்டு உடலினை இயக்கும் சக்தியை அது பெறுகிறது.
எந்த வலிமையான உயிரினத்தைக் கண்டு அஞ்சியதோ “அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும்...!”
என்று அது நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் தன் இரத்த நாளங்களில் கலப்பதை அது அறிவதில்லை.
ஆனால் தாக்க வரும் மிருகத்திடமிருந்து தப்பிக்க பெரும் நிலைகள் படுகின்றது.
உதாரணமாக புழுவை ஒரு குளவி கொட்டியபின் விஷம் அதன் உடலிலுள்ள அணுக்களுக்குள்
பாய்கின்றது. பாய்ந்த பின் அந்த உணர்ச்சியின் வேகத் துடிப்பு கொண்டு புழுவை உருவாக்கிய
அணுக்கள் அனைத்தும் விஷத்தின் துடிப்பால் குளவியின் ரூபம் பெற்று அந்தக் குளவியாகவே
மாறுகின்றது.
இதைப் போன்றுதான் சாந்தமான அந்த மிருக இனங்கள் வலிமையான மிருகங்கள் தன்னைத்
தாக்கும் பொழுது அதனின் உணர்வுகளை நுகர்ந்து தன்னைக் கொன்று புசிக்கும் அந்த மிருகத்தின்
ரூபத்தைப் பெறுகின்றது.
நரியோ புலியோ அதைக் கொன்று புசிக்கும் போது அதன் உடல் ஈர்ப்புக்குள் சென்று
விடுகிறது சாந்தமான மிருகத்தின் உயிரான்மா.
ஆனால் அவ்வாறு சேருவதற்கு காரணம் எது இதைத் தாக்கியதோ
1.அந்த உணர்வு - தன் நினைவு அனைத்துமே
2.கொன்று புசிக்கும் அந்த மிருகத்தின் மேல் வருகிறது.
3.புலி என்றால் புலியின் உடலுக்குள் செல்லுகிறது.
எது இதைக் கொல்கின்றதோ அதன் உடலுக்குள் சென்று அதன் உணர்வை நுகர்ந்து இந்த உயிர்
அதன் உணர்வில் கரு முட்டையாக மாறி அதன் வளர்ச்சியில் தன் இனச் சேர்க்கையில் கரு முட்டையில்
இரண்டும் ஒன்றாக இணைந்து வளரும் பருவமும் வளர்த்திடும் பருவமும் பெறுகிறது.
அந்த உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டி அந்த உணர்வுகொப்ப உடலை மாற்றுகின்றது. இது
இயற்கையின் சில நியதிகள். அவ்வாறு வளர்ச்சி பெற்ற அந்த உயிரினங்கள் தான் பரிணாம வளர்ச்சியில்
இன்று நம்மை மனிதனாக உருவாக்கி இருக்கிறது.
மனிதனாக உருவான பின் நம்மை ஒரு நரியோ நாயோ கொன்று புசித்தால் அதன் நினைவே வரும்.
ஒரு வெறி பிடித்த நாய் ஒரு மனிதனைக் கடித்து விட்டால் நாயின் விஷத் தன்மை மனித உடலுக்குள்
புகுந்த பின் வெறி பிடித்த நாய்க்கு எப்படி எச்சில் ஒழுகியதோ அதே போல அந்த மனிதனும்
அதே நிலை ஆகி இந்த மனிதன் அந்த நாயின் ஈர்ப்புக்குள் சென்று நாயாகப் பிறக்க நேரும்.
எந்த வைத்தியங்களாலும் அது சரி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
இதே போல ஒரு விஷம் கொண்ட பாம்பினால் தாக்கப்படும் போது பாம்பின் நினைவாற்றல்
வந்து மற்றது எதுவும் நினைவில் வராது ஒருமித்த உணர்வுகள் அந்த விஷத்தின் தன்மை பெற்ற
பின் எத்தனையோ கோடி சரீரங்களைக் கடந்து வந்த மனிதன் பாம்பின் ஈர்ப்புக்குள் செல்கிறான்,
பாம்பாகத் தான் அடுத்து பிறக்கின்றான்.
தேன் கூட்டிலிருந்து தேனை எடுக்கச் செல்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். விஷம்
அதிகமாக இருக்கும் நூறு தேனீக்கள் அந்த மனிதனைக் கொட்டினால் மரணமே ஏற்பட்டு விடுகிறது.
தேனீ தன்னைக் கொட்டியது என்ற உணர்வு வரப்படும் போது இத்தனை பெரிய மனித உடலை
உருவாக்கிய அணுக்கள் அந்தத் தேனீயின் ஈர்ப்புக்குள் சென்று அதன் உணர்வின் வழிப்படி
இயக்கும் சக்தியைப் பெற்றுத் தேனீயின் உடலைப் பெறுகிறது மனிதனின் உயிரான்மா.
இதையெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு)
காடு மேடெல்லாம் சுற்றி அலைந்து அறிந்து கொண்டோம்.
ஆகவே மனிதனாக இருக்கும் நாம்
1.நம் சந்தர்ப்பத்தில் எதை வலுவாக நுகர்கின்றோமோ
2.அதனின் உணர்வாகத்தான் அடுத்த உடல் பெறுகின்றோம் என்பதை
3.தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
இதைப் போன்ற மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் வென்றவன் அகஸ்தியன். இந்தப்
புவியில் உடல் பெறும் உணர்வுகளை மாற்றி ஒளி உடல் பெற்றவன் அகஸ்தியன்.
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி இந்தப் பூவுலகில் நஞ்சினை வென்ற உணர்வின்
தன்மை பெற்று நஞ்சினை ஒளியாக மாற்றிடும் சக்தியாக இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்தும்
வளர்ந்து கொண்டும் உள்ளார்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றால் அகஸ்தியனைப் போன்றே இந்த
உடலுக்குப் பின் அழியாத நிலைகள் பெறலாம். ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும்
பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் புருவ மத்தியில் எண்ணி ஏங்குங்கள்.
உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ
மகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
என்று ஏங்குங்கள்.
இவ்வாறு ஏங்கி இருப்பதன் நோக்கமே
1.நாம் எதைப் பெற வேண்டும் என்று ஏங்குகிறோமோ அவை அனைத்தையும்
2.நமது உயிர் “ஓ...” என்று ஜீவ அணுவாக மாற்றும் அந்தச் சக்தியைப் பெறச் செய்கிறது.
3.ஒளியான அணுக்களாக நம் உடலுக்குள் விளைகிறது. நம் உயிராத்மா ஒளியாகின்றது.
4.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழத் தொடங்குகின்றோம்.
5.நம்முடைய கடைசி எல்லை அது தான்..!