ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 20, 2018

புதுப் புது தாவர இனங்கள் எப்படி உருவாகின்றது...? புதுப் புது எண்ணங்கள் நமக்கு எப்படி வருகிறது...?

கேள்வி:- உயிரணுக்கள் தாவர இனங்களின் சத்தை எடுத்துப் புழுவிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வருகிறது. தாவரங்கள் எல்லாம் எப்படி உற்பத்தி ஆகின்றது...? அது எந்த அணுவின் மூலமாக உற்பத்தி ஆகிறது?

பதில்:- ஒரு வேப்ப மரத்தின் மீது சூரியனிலிருந்து வரக்கூடிய ஒளிக்கற்றைகள் தாக்குகிறது. பூமியின் ஈர்ப்புத் தன்மையில் இருக்கும் பொழுது சூரியனின் காந்தப் புலனறிவு தாக்கப்படும் போது இதற்கு முன்னாடி விளைந்த வேப்ப மரத்தின் கசப்பின் உணர்வுகளை அது எடுத்து வைத்திருக்கிறது.
1.அந்த அலைகளை எடுத்துத்தான் அடுத்த வேப்ப மரமும் விளைகிறது.
2.அதாவது தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து அது விளைகிறது.
3.ஒரு வேப்ப மரம் பலவிதமான உணர்வுகள் சேர்த்துத் தான் வேம்பாக விளைகின்றது.
4.விளைந்தாலும் தன் இனமான கசப்பின் சத்தை மட்டும் தான் இழுத்து வளரும்.

இதே மாதிரித் தான் ஒரு ரோஜா செடியும் தன் இனமான  நறுமணங்களை எடுத்து அது விளைகின்றது.
1.அதற்குப் பக்கத்தில் வேப்ப மரத்தின் கசப்பான உணர்வுகளை விடுவதில்லை.
2.தன்னுடைய நறுமணத்தைக் கொண்டு தள்ளி விட்டு விடுகின்றது.

அதே போல் ஒரு விஷமான செடியாக இருந்தாலும் அந்த விஷத்தின் தன்மையை மட்டும் அது எடுத்துக் கொண்டு வளர்கிறது. மற்ற எந்த மணங்களையும் அருகில் விடுவதில்லை. விலக்கித் (REMOTE) தள்ளி விடுகிறது.

சந்தர்ப்பவசத்தால் ஒரு திகட்டலான (வெறுப்பாக) புத்தியுடன் நாம் இருக்கப்படும் போது பாக்கி யாராவது சொன்னால் அதை எடுத்துக் கொள்வோமா...? என்றால் இல்லை...! அதைத் தள்ளி விட்டு விடுகிறோம். வெறுப்பான உணர்வு தான் முன்னணியில் இருக்கும்.

அப்படிக் கசப்பான சூழ்நிலையில் இருக்கப்படும் போது யார் எவ்வளவு உயர்ந்ததைச் சொன்னாலும் நீங்கள் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். வெறுப்பு முன்னணியில் இருந்து எல்லாவற்றையும் தள்ளி விட்டுவிடும்.

1.ஆனாலும் அந்த நேரத்தில் யாராவது வந்து
2.கசப்பான வார்த்தைகளைச் சொன்னால் நீங்கள் ரசித்துக் கேட்பீர்கள்.
3.நல்ல வார்த்தைகளைச் சொன்னால் கேட்கவே மாட்டீர்கள்.
4.இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

வெறுப்பும் வேதனையும் கொண்ட நிலையில் நீங்கள் இருக்கும் போது மற்றவர்களும் அதே போல வெறுப்பாகவும் வேதனையாகவும் பேசினால் தான் அதைக் காது கொடுத்துக் கேட்பீர்கள். ஏனென்றால் அந்தச் சக்தி உங்களுக்கு முன்னாடி இருக்கிறது.

இதைப் போலத் தான் எந்த மரமாக இருந்தாலும் தன் இனமான சத்தை எடுத்து அதனதன் நிலைகளைப் பாதுகாத்துக் கொள்கிறது. அதற்கு வேறு வழி இல்லை.

வேப்ப மரத்திலிருந்து வரும் வேம்பின் உணர்வு உந்து விசை கொண்டது. ரோஜாப்பூ மணமோ திகட்டச் செய்யும் சக்தியாக துவர்ப்பு  கொண்டது. ரோஜாப்பூவைச் சாப்பிட்டால் உள்ளுக்குள் போகும் பொழுது திகட்டலாகப் போகும்.

அதே சமயத்தில் அலைகளாக வரப்போகும் போது வேம்பின் உணர்வைக் கண்ட ரோஜாப்பூவின் உணர்வுகள் தள்ளிப் போகும். ஏனென்றால் இதற்கும் அதற்கும் ஒத்துப் போகாது.

தள்ளிப் போனாலும் மீண்டும் இந்த ஈர்ப்பு என்ற நிலை கூடவே வரும். அதற்குப் பின்னாடியே இது போகும். அடுத்தது ஒரு விஷச் செடியின் மணம் சந்தர்ப்பத்தால் அங்கே வருகிறது.

விஷச் செடியின் மணத்துடன் மோதியவுடனே தேளோ பாம்போ கடித்தால் நமக்குள் துடிப்பு எப்படி அதிகமாகுமோ அதைப் போல் வேகத் துடிப்பு ஏற்படுகின்றது.

வேப்ப மரத்தின் மணமும் ரோஜாப்பூவின் மணமும் விஷச் செடியில் மோதியவுடனே கிறு...கிறு... என்று சுற்ற ஆரம்பிக்கிறது. நீங்கள் சுழிக் காற்றுகளைப் பார்த்திருப்பீர்கள். அதைப் போன்று ஆகின்றது. இவைகள் எல்லாம் இந்த மாதிரித் தாவர இனத்தின் மணங்களின் மோதல்களில வருவது தான்.

1.மோதலாகும் பொழுது சுற்றும்.
2.ஏனென்றால் வேப்ப மரத்தினுடைய உணர்வுகள் அதை இழுக்கும்.
3.மோதியவுடன் சுழலும் சக்தியாகி இழுக்கும் தன்மை பெற்று மூன்றும் இரண்டறக் கலக்கின்றது.
4.ஆக சுழலும் போது தான் அதற்கு ஈர்க்கும் சக்தி வருகிறது.

(இது எல்லாம் நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் மற்றவர்களுடைய உணர்வும் நாம் சுவாசிக்கும் உணர்வும் நம் உடலுக்குள் உள்ள உணர்வும் இப்படித்தான் ஒன்றாகக் கலந்து அந்தந்தக் கலவைக்கொப்ப எண்ணங்களும் குணங்களும் இயக்கங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றது)

உதாரணமாக சூரியனில் இருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் மூன்றும் அந்த வேப்ப மரத்தின் சக்தியை இழுத்தது என்றால் அதன் மணம் ஞானம். அதன் வழியில் அந்த அணுவினுடைய வலுவாக இயக்கும். அதற்குப் பெயர் காயத்ரி - புலன் அறிவு ஐந்து.

இதே மாதிரித்தான் ரோஜாப்பூவின் சத்தை சூரியனின் காந்த சக்தி கவரும் பொழுது அதனுடைய வலுவாக இயக்கும். அதே போல் விஷச் செடியின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவரும் பொழுது அதனுடைய வலுவாக இயக்கும்.

ஆனால் தனித் தனியாக இருக்கும் இந்த மூன்றும் சந்தர்ப்பத்தால் ஒன்றுக்கொன்று மோதியவுடனே விஷத்தின் தன்மை தாக்குதல் தாங்காது சுற்றும்.

சுற்றும் போது பத்து சதவிகிதம் வேம்பின் உணர்வுகளும் மூன்று சதவிகிதம் ரோஜாப்பூ உணர்வுகளும் ஒரு சதவிகிதம் விஷச் செடியின் உணர்வும் கலந்து விட்டால் மூன்றும் கலந்து ஒன்றாகிவிடுகிறது.
1.எடை கூடிய நிலையில் புவியின் ஈர்ப்புக்குள் சிக்கிப்
2.புது வித்தாக ஒரு கருவேப்பிலைச் செடியாக உருவாகின்றது.

இதைத் தான் வேதங்களில் சுட்டிக் காட்டுகின்றார்கள். வேப்ப மரம் ரிக். ரோஜாப்பூ செடியும் ரிக். விஷச் செடியும் ரிக். ரிக் என்றால் உருவாக்கப்பட்ட பொருள் - திடப்பொருள்.

அதிலிருந்து வெளி வரக்கூடிய வாசனை மணம். அதனுடைய குணம் என்ற நிலையில் அந்த வாசனைக்குப் பெயர் சாம.

இது மூன்றும் சேர்த்து ஒன்றாகக் கலந்த பிற்பாடு என்ன செய்கிறது...? வேம்பின் சத்தும் இழந்து விடுகிறது ரோஜாப்பூவின் துவர்ப்பு சத்தும் அந்த நறுமணமும் இழந்து விடுகின்றது. அந்த விஷத்தின் ஆற்றலும் இழந்து விடுகிறது.

எல்லாமே தன் தன் தனித் தன்மையை இழக்கின்றது, இழந்து விட்டது என்றால் தன் தன் சக்தியை இழக்கிறது “அதர்வண...!” என்று அர்த்தம். ஒன்றாகச் சேர்ந்து ஒரு வித்தாக மாறி கறிவேப்பிலையாகும் போது யஜூர்.

யஜூர் என்பது வித்து. வித்தான பிற்பாடு என்ன செய்கிறது....? பத்து சதவீதம் வேம்பின் சத்தையும் மூன்று சதவீதம் ரோஜாப்பூவின் சத்தையும் ஒரு சதவீதம் விஷச் செடியின் மணத்தையும் நுகர்ந்து அது மரமாக விளைகின்றது. அது மீண்டும் ரிக்.

இது தான் வேதங்களில் தெளிவாக்கப்பட்ட உண்மை.

“ரிக்...கிலிருந்து வந்த உணர்வுகள் தான் சாம. அது ஒன்றோடு ஒன்று மோதும் போது அதர்வண. பின் யஜுராக ஒரு வித்தாக அதில் எந்த உணர்வுகள் கலந்து வந்ததோ மீண்டும் ஒரு புதுச் செடியாக உருவாகிறது.
1.நம் சாஸ்திரம் இதைத் தெளிவாக்குகிறது.
2.நான்கு மறைக்குள் இது எல்லாமே அடக்கம்.

ஒன்றுடன் ஒன்று மோதி அது ஒரு புது நிலைகள் உருவாக்கப்படும் பொழுது அதற்குப் பெயர் பரப்பிரம்மம் - உருவாகிறது என்றால் பிரம்மா. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி. இந்த வித்தில் ரூபம் மாறிவிடுகிறது. உருவானதிலிருந்து அதனுடைய சக்தியாக அதனுடன் சேர்த்து இயக்கம்.

இப்போது சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகின்றதல்லவா...!

இந்த வித்து பூமியில் படுகிறது. அடுத்து மழைக் காலங்களில் மின்னல் தாக்குகிறது. மின் ஒளிகள் தாக்கும் போது துடித்து எழுந்து கறிவேப்பிலைச் செடியாக வெளியில் வருகிறது.

இதனுடைய ருசி மாறுகின்றது. கறிவேப்பிலையில் பார்த்தால் அந்தக் கசப்பும் இருக்கும். அந்தத் துவர்ப்பும் இருக்கும். நறுமணமும் இருக்கும். அரிப்பும் இருக்கும்.

இப்படித் தான் இந்தச் செடிகள் ஒன்றோடு ஒன்று மோதி புதுவிதமான வித்துகள் உருவாகின்றது. சுழிக்காற்று அடிக்கும் போது பார்த்தோம் என்றால் புதுப்புது வித்துகளாக உருவாகும்.

இப்படி மரங்கள் செடிகள் எல்லாம் பல மரங்களானாலும் இது ஒன்றோடு ஒன்று சேர்த்து எதன் நிலையில் இருக்கிறதோ அதற்குத் தக்கவாறு இணைக்கிறது.

இதற்கு எல்லாம் மூலம் காளான். காளான் கடலில் இருந்து துகள்களாக வெளி வருகிறது. அது மற்ற பகுதிகளில் படப்படும் போது நம் பூமிக்கு வருகிறது.

கடலில் இருக்கும் பொழுது பாசான். பாசான் பூமிக்குள் வந்த பின் அது காளானாக விளைகின்றது.

கடல்களில் இந்த பாசான் வரும் போது அது கொடியாக வளர்ந்து பின் மாறுபட்டு வரப்படும் போது அதில் செடிகள் வளருகிறது. கடலுக்குள் மரங்களும் வளர்கிறது.

அந்த வித்துக்கள் நிலத்திற்கு வரும். நிலத்தில் வந்த பிற்பாடு இது அதனதன் நிலைகொப்ப புதுப் புதுச் செடிகள் உருவாகும். அகஸ்தியன் உணர்த்திய பேருண்மைகள் இவை.