ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 17, 2018

சூறாவளிக்குள் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி


முந்தி எல்லாம் திருவிழாக் காலங்களில் வாண வேடிக்கை விடும் பொழுது ஒரு குழாய் வைத்திருப்போம். அந்தக் குழாயில் கந்தகத்தை எடுத்து வைத்து... அதற்கு என்று ஒரு கம்பியை வைத்து லேசாகத் தட்டினால் வெடிக்கும்.

ஏனென்றால் கந்தகத்தின் அழுத்தம் உஷ்ணத்தை உண்டாக்கக் கூடிய நிலைகள். கந்தகப் பாறைகள் எங்கிருக்கிறதோ அந்தப் பக்கமெல்லாம் தண்ணீர் மேலே ஓடி வந்தால் நெகட்டிவ் பாசிட்டிவ் (+/-) அது சுடு தண்ணீராக வரும்.

சுடு தண்ணீர் வருவதை முதன் முதலில் பம்பாயில் இருக்கும் கணேசபுரியில் தான் பார்த்தோம். நித்யானந்த சாமிகள் அங்கே ஒரு குகையில் சமாதியாகி உள்ளார். அந்த குகைக்கு நடந்து எல்லாம் போக முடியாது. படுத்துக் கொண்டே தான் போக முடியும்.

புலி போன்ற துஷ்ட மிருகங்கள் வராதபடி படுத்துக் கொண்டே குகைக்குள் சென்று பின் கல்லைக் கொண்டு மூடி மறைத்துக் கொள்வது. அங்கே உட்கார்ந்து தியானம் செய்வது என்ற நிலைகள் இருந்ததை எல்லாம் அங்கே போய்ப் பார்த்து விட்டு வந்தேன் (ஞானகுரு).

அங்கே சுடு தண்ணீர் கிணறு ஒரு பக்கம் உள்ளது. இன்னொரு பக்கத்தில் பாறை மேலிருந்து தண்ணீர் வருகிறது.

எந்த இடங்களில் எல்லாம் கந்தகப் படிவம் உள்ளதோ அங்கே பச்சைத் தண்ணீர் ஓடினால் தண்ணீரின் சூடு அதிகமாக இருக்கிறது. இதையெல்லாம் சுற்றுப் பயணத்தில் குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) என்னை வலுக்கட்டாயமாக போகச் சொன்னார்.

இப்படி அந்தச் சந்தர்ப்பத்தை உண்டு பண்ணுகிறார். வீட்டிலேயும் சரி என்னைப் பார்க்கும் நண்பர்களும் உறவினர்களும் சரி எல்லோரும் என்னை வெறுக்கும் நிலையை உண்டாக்கி என்னை விரட்டி விட்டுக் கொண்டே இருக்கிறார்.

1.போகிற போக்கிலே எல்லாம் ஆசையை ஊட்டி
2.சரி... இதைப் பெருக்கலாம்..! இதைச் செய்து அப்படியே தப்பித்துக் கொள்ளலாம்...! என்ற எண்ணம் வருகிறது.
3.இப்படி ஒவ்வொரு எண்ணங்களை நான் எண்ணினாலும் என்னைத் துரத்தி விட்டு கொண்டிருந்தார்.
4.எல்லாமே தனியாகத் தான் சென்று அனுபங்களைப் பெற்று வந்தோம். யாருடைய உதவியும் இல்லை.

ஒரு சமயம் குருநாதர் என்ன செய்தார். அங்கே மலை மேலே ஒரு ஊற்று வருகிறது... அதை நீ போய்ப் பாருடா..! என்று சொன்னார். அங்கே போனேன்.

பார்த்து விட்டுக் கீழே இறங்கி வரும் பொழுது ஒரு பெரிய சூறாவளி வந்தது. ஏற்கனவே நாராயணசாமி அவர்கள் பம்பாய் செல்வதற்காக ரூபாய் அனுப்பி வைத்திருந்தார். அந்தப் பணத்தில் குடை வாங்கி வைத்திருந்தேன். காட்டிற்குள் செல்லும் பொழுது லேசாக தூறல் வந்தால் பிடித்து கொள்ளலாம் என்று இது “என்னுடைய ஆசை...!”

மலை மேலே ஏறிவிட்டு இங்கே வந்தேன். கீழே வரும் போது காற்றும் புயலுமாக வந்தது. விரித்த குடையைக் காணோம். கம்பி தான் என் கையில் இருக்கிறது. அந்த அளவுக்குக் காற்று.

சூறாவளிக் காற்றில் மரங்கள் எல்லாம் சட...சட...! என்று தாவுகள் எல்லாம் முறிந்து ஓடுகிறது. அப்போது மரத்தின் பக்கம் நான் போனால் ஆபத்து இருக்கிறது.

காற்று எப்படி அடிக்கிறது...? என்று அந்த நேரத்தில் ஒரு சிந்தனை வருகிறது. கூந்தப் பனை என்ற மரம் ஒன்று இருந்தது. அது பெரும்பாலும் கீழே அறுந்து விழாது. பறந்து கொண்டே தான் இருக்குமே தவிர ஒடியாது. ஏனென்றால் அதில் நார் பிடிப்பு அதிகமாக இருக்கும்.

காற்று என்னையவே அப்படியே தூக்குகிறது. அவ்வளவு புயல். ஓடிப் போய் என்ன செய்தேன்...? கூந்த பனையில் காற்றடிப்பதற்கு நேராக நின்று கொண்டேன். சாய்ந்தால் நம்மை அமுக்கி விடும்.

காற்றடிப்பதற்கு நேராக ஒரு வேளை அது சாய்ந்தாலும் கூட நாம் அப்படியே இருந்து கொள்ளலாம். “நம் மேலே விழாது...!” என்று இத்தனை சிந்தனையோடு அதைச் செய்தேன்.
1.அந்த இடத்தில் உணர்ச்சியை ஊட்டுகிறார்
2.நான் அல்ல...! குருநாதர் அந்தக் குரு வழியில் இதைக் கொடுக்கிறார்.

பார்த்தோம் என்றால் மற்ற மரத்தின் தாவுகள் எல்லாம் ஒடிந்து வந்து நான் நிற்கிற கூந்த பனையில் அடித்து அங்கே மேலே வரிசையில் அடுக்குகிறது.

ஆனால் கூந்தப் பனையில் மேலே உள்ள ஓலைகள் விழவில்லை. அது அப்படியே இருக்கிறது. மற்ற மரங்களின் தாவுகள் இதன் மீது ஒரு இரண்டு மூன்று அடித்து அடித்து சொத்சொத்...! என்று கீழே விழுகிறது.

நான் இந்தப் பக்கம் இருக்கிறேன். என் மேல் விழுகவில்லை. அடி  மரம் நன்றாகப் பருத்து வலுவாக இருக்கிறது மேலே ஒல்லியாக இருக்கிறது.

அந்த அடி மரத்தில் பேசாமல் உட்கார்ந்து விட்டேன். உட்கார்ந்து கொண்டு “ஈஸ்வரா... குருதேவா...! “ஈஸ்வரா... குருதேவா...!” என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு ஒன்றும் ஆகவில்லை.

இவ்வாறு அனுபவரீதியில் கடுமையான புயலைச் சந்தித்தாலும் மரங்கள் எல்லாம் ஒடிந்து போனாலும்....
1.ஆனால் குரு என்ன செய்கிறார்..?
2.இந்த இடத்தில் சிந்திக்க வைக்கிறார்.

இது எதற்காகச் சொல்கிறோம் என்றால் நமது குருநாதர் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனக்குள் எடுத்திருக்கிறார். அந்த ஆற்றல்களைத் தனக்குள் பேரொளியாக உருவாக்கினார்.

அவர் வழியில் நாம் என்ன செய்கிறோம்...? அந்தத் துருவ நட்சத்திரத்தோடு குரு வழியில் இணைகிறோம். அதற்காக வேண்டித்தான் என்னை இப்படியெல்லாம் அனுபவம் பெறச் செய்தார்.
1.கண்ட அனுபவத்தை இங்கே விளைய வைத்துக் கொண்டிருக்கிறேன்.
2.இதை வித்தாக எடுத்து உங்களுக்குள் முளைக்க வைக்கின்றேன்.

இதை எடுத்து நீங்கள் வளரக்கூடிய பக்குவத்தில் ஒவ்வொரு நேரத்திலும் உங்களுக்குள் விளைய வேண்டும் என்ற ஆசையில் பல வகையிலும் சொல்கிறேன்.
1.இதையெல்லாம் புத்தகங்களில் எழுதி வைத்துக் கொடுக்க முடியாது
2.வாக்காகத் தான் (சொல்) கொடுக்க வேண்டும்.

ஏற்கனவே என்னிடம் வாக்கு வாங்கியவர்கள் எத்தனை பேர் வளர்கிறார்கள்...? எல்லோரும் இங்கே ஓடி வருவார்கள். அவர்கள் எதிர்பார்த்த நிலையில் என்னிடமிருந்து (ஞானகுரு) வரவில்லை என்றால் என்னத்தைச் செய்வது..? இன்னொரு சாமியாரைப் பார்க்கலாம் என்று போய்க் கொண்டிருப்பார்கள்.

அல்லது இங்கே இந்த மந்திரத்தைக் கொடுக்கின்றார்கள். மிகவும் எளிதாகக் (CHEAP) கொடுப்பார்கள் என்று அங்கே சென்று விடுவார்கள். ஜோசியக்காரரையும் தந்திரக்காரர்களையும் போய்ப் பார்க்கலாம் என்று அந்தப் பக்கம் போவார்கள்.

1.ஆகவே என்னிடம் கேட்ட வாக்கின் நிலைகள் என்ன செய்கிறது...?
2.உறுதிப்படுத்தும் உணர்வுகள் இங்கே இல்லாமல் போய் விடுகிறது.

இதுவரைக்கும் ஏன் இதைச் செய்யவில்லை என்று கூட நீங்கள் கேட்கலாம்.

1.உறுதியில் இது தேர்ந்தெடுத்து
2.சல்லடை போட்டுச் சலித்து எடுக்க வேண்டும்.
3.உறுதி கொண்ட நிலையில் எப்படி நம் வாழ்க்கையை நடத்த வேண்டும்...?
4.இந்த வாழ்க்கைக்குப் பின் நாம் பிறவியில்லா நிலையை அடைவது எப்படி...? என்ற
5.இந்தச் சிந்தனையைத் தூண்டும் உணர்வு உள்ளவர்கள் தான் இங்கே வரவேண்டும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா...?

அந்த உறுதி பெறச் செய்யும் நிலைக்காகத்தான் தான் அனுபவ வாயிலாகப் பெற்றதை உங்களிடம் அந்த ஒவ்வொன்றையும் சொல்லி அந்த ஒவ்வொரு உணர்வாகக் கொண்டு வருவது.

காரணம் நாம் கோடிக்கரையில் இருக்கின்றோம். தனுஷ் கோடியில் என்ன செய்கிறார்கள்...? உலகம் முழுவதும் சுற்றி விட்டு இங்கே இராமேஸ்வரத்திற்கு வருகிறார்கள். ஏன்...?

இராமன் என்ன செய்கிறான்...? நேரம் ஆகி விட்டது...! என்று மணலை எல்லாம் கூட்டுகிறான். சிவலிங்கத்தை உண்டாக்கிப் பூஜையை ஆரம்பித்து விடுகிறான். அப்படி என்றால் என்ன அர்த்தம்...?

இந்த உடலில் ஒவ்வொரு நிமிடத்திலும் தீமை என்ற உணர்வு வரும் போது அந்தத் தீமை என்ற உணர்வை மாற்றிட அருள் உணர்வை எடுத்து ஒவ்வொன்றையும் நல்லதாக மாற்றி நல்ல உணர்வின் தன்மையைச் சேர்த்து கொண்டே வருகிறோம். இது தான் தனுசு கோடி.

1.கோடிக்கரையில் இருந்து கொண்டு கடைசி நிமிடத்தில்
2.அன்றைக்கு... ஒரே நாளில் எல்லாத் தீமைகளையும் நீக்க முடியாது.

வாழ்க்கையில் சங்கடப்படுகிறார்கள் சலிப்புப் படுகிறார்கள் என்றால் அப்பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நமக்குள் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும். மற்றவர்களுக்குள்ளும் இதைப் பதிவாக்க வேண்டும்.

ஏனென்றால் இதைப் போன்ற நஞ்சை எல்லாம் வேக வைத்தவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்த உணர்வை ஒவ்வொருவரும் எடுத்து நம் மனதைக் குவித்து எண்ணங்களை ஒன்றாக்கி இராமலிங்கமாக அழியாத வாழ்க்கையாக வாழ வேண்டும் என்று அங்கே தெளிவாகக் காட்டுகின்றார்கள்.