ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 12, 2018

துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் நேரடியாகப் பெறச் செய்யும் பயிற்சி...!


நமது தினசரி வாழ்க்கையில் எத்தனை வகையான குணங்களைத் தெரிந்தோ தெரியாமலோ எண்ணி எடுத்திருப்போம். அது அத்தனையும் அதற்குத்தக்க அணுக்களாக நம் உடலுக்குள் விளைந்திருக்கும்.

நாம் நல்ல குணங்கள் கொண்டு இருப்பினும் பிறருடைய தீமைகளை உற்றுப் பார்த்துக் கேள்வியுற்று இருந்தால் அந்த நேரத்தில் இந்த உணர்வுகளை நுகர்ந்திருப்போம். அப்பொழுது நம் நல்ல குணங்களின் முகப்பில் இது அடைபட்டு இருக்கும்.
1.அதனால் நல்ல குணங்கள் செயல்படாத நிலைகளில் தடைபட்டு அது நலிந்து கொண்டு இருக்கும்.
2.நல்ல குணங்கள் வளர்வதற்கு ஈர்ப்பு சக்தி குறைந்து இருக்கும்.
3.அது வளர்ச்சி குன்றும் போது நாம் நல்ல குணங்களால் வளர்க்கப்பட்ட நம் உடலில் சோர்வின் தன்மை உண்டாகும்.

 நாம் நல்லதை எண்ணி நல்லதைச் செய்ய வேண்டும் என்கிற போது பிறருடைய தீமைகளை எல்லாம் கேட்டு உணர்கின்றோம். அப்போது
1.நம் உயிரிலே பட்டுத் தீமை என்ற நிலைகள் உணர்ந்தாலும் 
2.இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் பரவப்படும் போது
3.நாம் எந்த நல்ல குணங்களை வைத்திருந்தோமோ அதன் வழியில் முன்னோட்டமாக அடைபட்டு விடும்.
4.அதாவது தீமை என்று நமக்கு அறிவித்தாலும் நல்லதுக்கு முன்னாடி இது வந்து அடைத்துக் கொள்கின்றது.
5.அதை மாற்ற வேண்டும் அல்லவா...! அது எப்படி...?

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது இதை யாம் (ஞானகுரு) சொல்லும் போது உங்கள் உடலுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது. பதிவு செய்து கொண்ட பின் அடுத்து உங்கள் நினைவினைப் புருவ மத்தியில் எண்ணினால் அந்தச் சக்திகளை எளிதில் பெற ஏதுவாகும்.

உங்கள் நினைவு அனைத்தையும் சப்தரிஷி மண்டலங்களையும் துருவ நட்சத்திரத்தினையும் எண்ணிச் செலுத்துங்கள். இவ்வாறு செலுத்தப்படும் பொழுது அதனின்று வெளிப்படும் உணர்வுகளை நீங்கள் எளிதில் நுகர்ந்தறிய இது உதவும்.
1.ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா...! என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி
2.விண்ணிலே நினைவினைச் செலுத்தி அந்தச் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் நினைவெல்லாம் வான மண்டலங்களில் சென்றிருக்கும். தீபாவளிக் காலங்களில் ஒரு மத்தாப்பு பொருத்திய பின் பொறிகள் எப்படிக் கிளம்புகின்றனவோ அது போல
1.வான மண்டலத்தில் பல கலர்கள் கொண்ட உணர்வலைகள் பரவிக் கொண்டிருப்பது உங்கள் உணர்வுகளில் தோற்றமளித்திருக்கும்.
2.அந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் பரவுகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நீங்கள் நுகரப்படும் பொழுது அது அனைத்தும் வைரத்தைப் போல “இளம் நீல நிறமாக... இருக்கும்...!”

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நீங்கள் நுகரப்படும் பொழுது அது அனைத்தும் பல வித வண்ணங்களில் இருக்கும். ஏனென்றால் பல கோடி மகரிஷிகள் அந்த ஒவ்வொரு மகரிஷியும் அவரவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கலந்த வண்ணம் பல வர்ணங்களில் இருக்கும்.

சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வருவது மத்தாப்பு போல பல வண்ணங்களில் ஒளிக்கற்றைகளாக இந்த உணர்வுகள் தெரிந்து இருக்கும்.

ஆனால் உங்களுக்குள் இது தெரியவில்லை என்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் உடல்களிலே பாய்ந்து
1.உங்கள் உடலில் ஒரு சக்கரம் போன்று சுழன்று கொண்டு வருவதை உணர்ந்திருக்கலாம்.
2.ஏனென்றால் சுவாசித்து உங்கள் உடல் முழுவதற்கும் ஒரு ரவுண்டு வரும்.

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலிலுள்ள அணுக்களில் அவை அனைத்திற்கும் செடிகளுக்கு உரம் போட்ட மாதிரி அந்த அணுக்களின் முகப்புகளில் இது பூராம் போய்ச் சேரும்.

உதாரணமாக நீங்கள் மாவை எடுத்துப் பிசைகின்றீர்கள். அது நல்ல சுவை உள்ளது தான். ஆனால் அதில் வேறொரு பொருளைப் போட்டால் எதன் சுவை வரும்...?
1.அந்த நல்ல மாவுடன் நாம் எதைக் கலக்கின்றமோ அது மேலோட்டமாக இருந்தால்
2.அதனுடைய சுவை தான் முன்னணியில் இருக்கும்.

அதைப் போன்று தான் நம் நல்ல குணங்கள் செயலற்றதாக்கி வரும் போது இதை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை நம் உடலுக்குள் இப்படிச் சுழலச் செய்ய வேண்டும்.

நாம் எப்படிச் செடிகளுக்கு உரம் போடுகின்றோமோ அதைப் போல் மகரிஷிகளின் உணர்வை உடலுக்குள் சுழலச் செய்யும் பொழுது அது வலு கொண்டு ஊடுருவிப் பாயும் தன்மை பெற்றது.

அது ஊடுருவிப் பாய்ந்து நம் நல்ல குணங்களில் கலக்கப்படும் பொழுது அந்த நாம் கேட்டறிந்த தீமையின் நிலைகள் செயலிழந்து விடுகின்றது.

உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளைச் செயலற்றதாக்கி அதனின் வலுவை இழக்கச் செய்வதற்குத்தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.