ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 25, 2018

மலேசியாவில் அசைவம் சாப்பிடும் இடத்தில் சைவம் சாப்பிடும் பொழுது பெற்ற அனுபவம் – நடந்த நிகழ்ச்சி


நான் (ஞானகுரு) மலேசியா போய் இருந்தேன். சாப்பிடுவதற்காகச் சென்றால் எந்தக் கடையில் பார்த்தாலும் மட்டன் (மாமிசம்) தான் இருக்கிறது. மட்டன் இல்லாத கடையைப் பார்க்க முடியவில்லை.

அப்பொழுது யாம் சைவ உணவு சாப்பிடுவதற்கே பெரிய கஷ்டமாக இருக்கிறது. அந்த மாமிச உணர்வின் மணம் பட்ட உடனே எப்படிச் சாப்பிடுவது...! என்ற நிலை வருகிறது.

 அப்பொழுது அதற்கு நாம் என்ன செய்வது...? என்று அதை நினைக்காதபடி நாம் வேறு எதையாவது சாப்பிடுவோம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு சீனர் கடையில் புத்த பிட்சுகள் வந்து சாப்பிடுவார்கள். அதனால் கொஞ்சம் சுத்தமாக இருக்கும் என்று சொன்னார்கள். சைவம் அசைவம் இரண்டு உணவுகளும் இருக்கும் இடத்தில் அசைவத்திற்குப் போடும் கரண்டியை சைவத்திற்குப் போட மாட்டார்கள்.

ஆனால் சில இடங்களில் இரண்டிற்கும் ஒரே கரண்டியைப் பயன்படுத்துவார்கள் என்று அவர்கள் சொன்னார்கள். சரி பரவாயில்லை என்று போனோம்.

இந்தப் பக்கம் நான் வரிசையில் உட்கார்ந்திருக்கிறேன். அடுத்த பக்கம் சீனாவைச் சேர்ந்த புத்த மதத்தைச் சேராதவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.

அவர்களிடம் ஒரு அடுப்பைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.

ஒரு மீனைச் சுரண்டிக் கொண்டு வந்து கொடுத்தவுடன் தண்ணீரில்  வேக வைக்கிறார். கொடுத்த சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு நாம் டீ சாப்பிடுவது போல வேக வைத்த மீன் தண்ணீரை அப்படியே குடிக்கிறார்.

அதை என் கண் பார்க்கிறது. ஆனால் அந்த வாசனையை நுகர நேர்கிறது. தப்பு செய்யவில்லை.
1.அந்த உணர்வின் வாசனைகள் அவர்களுக்குத் தெரியவில்லை
2.வாசனை தெரியாததால் அந்த உணவை ரசித்து சாப்பிடுகிறார்கள்.
3.ஆனால் எனக்கு இந்த நிலை வருகிறது.

அப்போது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்னபடி அவர்களும் நல்ல வழியிலே இதை மாற்றிச் சாப்பிடக் கூடிய உணர்வுகள் பெற வேண்டும் என்று கொஞ்ச நேரம் பிரார்த்தனை செய்த உடனே “அந்த வாசனையை இழுக்கக் கூடிய சக்தி... என்னிடம் குறைகிறது...!” நடந்த நிகழ்ச்சி இது.

அவர்கள் அசைவத்தைச் சாப்பிடுகிறார்கள். நம்மை ஒன்றும் சொல்லவில்லை. ஆனாலும் அருவருக்கத்தக்க நிலைகளில் அவர்கள் சாப்பிடும் போது அந்த உணர்ச்சிகளை நாம் நுகர நேர்கின்றது.
1.அதைப் பார்க்காத வரையிலும் வாசனை வரவில்லை.
2.ஆனால் அவர்கள் செயலை உற்றுப் பார்த்ததும் வாசனை வருகிறது.

அப்பொழுது அந்த உணர்வு வரும் போது குருநாதர் சொன்னபடி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து நான் மாற்றிக் கொண்டேன்.

நான் மாற்றிக் கொண்டே வருகின்றேன். எப்படி மாற்ற வேண்டும் என்று உங்களுக்கும் சொல்ல வேண்டும் இல்லையா...? அதற்காகத்தான் அனுபவத்தில் நீங்கள் பெறுவதற்கு இதைச் சொல்கிறேன்.

அவர்கள் சாப்பிடுவது அருவருப்பாக உள்ளது. அப்போது என்ன செய்தேன்...? அவர்களும் இந்த உண்மையை உணர்ந்து அதனால் வரக்கூடிய தீமைகளையும் உணர்ந்து அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சினேன்.

ஏனென்றால் மனிதனான பின் மற்ற மாமிசங்களை உணவாக உட் கொண்டால் அது மனித உடல் உறுப்புகளை மாற்றும் சக்தியாகி மனிதன் மீண்டும் மனிதனாகப் பிறக்க முடியாது.

1.உதாரணமாக குளவி புழுவைக் கொட்டி புழு மீண்டும் குளவி ஆவது போல
2.பாம்பு மனிதனைத் தீண்டினால் மனிதன் மீண்டும் பாம்பாவது போல
3.எது எதைத் தீண்டுகிறதோ அதுபோல அந்த உணர்வின் வலுவை எது எடுக்கிறதோ அதைப் போல
4.எந்த உயிரினத்தை உட்கொள்கின்றோமோ அது நமக்குள் வலுவாகி அந்த உயிரினமாக அடுத்துப் பிறக்கும் நிலையில்
5.இந்த மாற்றங்களிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று கொஞ்ச நேரம் பிரார்த்தனை செய்து அதன் பிறகு நான் சாப்பிட்டேன்.

இந்த வாழ்க்கையில் இதைப் போன்ற நிலையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்கே இத்தகைய உபாயங்களை அனுபவரீதியில் பெற்றதை உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

அதன் வழி நீங்கள் செல்லும் பொழுது உங்கள் உயிராத்மாவில் அறியாது சேரும் உடல் பெறும் மணத்தை மாற்றிப் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.