ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 26, 2018

நம்முடைய பூர்வ புண்ணியம் எப்படி நம்மை இயக்கும்...?


பல கோடி சரீரங்களைக் கடந்து கடந்து இன்று நாம் மனிதனான பிறகு நம் உயிர் என்ன செய்கிறது...? ஆகாரத்துடன் கலந்து வரக்கூடிய நல்ல வாசனையுள்ள உணவில் கலந்துள்ள நஞ்சை மலமாக மாற்றி விடுகிறது.
1.நல்ல உணர்வை நம் உடலில் சேர்த்து
2.நல்ல உணர்வைப் பெறக்கூடிய அந்த உணர்வின் சத்தை நம் உடலாக மாற்றுகிறது.

அந்த நல்ல உணர்வின் சத்து வெளிப்படும் போது அந்த மணம் இந்த உடலுக்கு எது தேவையோ அந்த உணர்வின் தன்மையைத் தான் அது பெறும்.

இருந்தாலும் மனிதனாகப் பிறந்த நிலையில் குழந்தையிலிருந்து வளர்ச்சி அடையும் போது ஒவ்வொன்றாகப் பார்க்கிறோம். குழந்தைப் பருவத்திலே
1.தாய் மேலே வெறுப்பாக இருக்கிறது.
2.தன் கூடப் பிறந்தவர்களை உதைக்க வருகிறது.
3.விளையாடும் பொழுது எத்தனையோ முறை தடுக்கி விழுகிறது.

இதற்குக் காரணம் என்ன...? குழந்தை தாய் கருவிலே விளையப்படும் போது வந்த உணர்வுகள் தான் இவை.

தாய் கருவுற்றிருக்கும் சமயம் சந்தர்ப்பவசத்தால் வெறுப்பு கொண்டர்களையோ வேதனை கொண்டவர்களையோ மற்றவர்களைத் தாக்கும் உணர்வுகளையோ பார்க்க நேர்ந்தால் அல்லது பேசுவதைக் கேட்க நேர்ந்தால் வேடிக்கையாகப் பார்த்தாலும் அதைத் தாய் நுகருகிறது. அது இரத்தத்தில் கலக்கிறது.

கரு உருவான ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் இத்தகைய சமபவங்களை உற்றுப் பார்த்தால் இரத்தத்தின் வழியாக அது குழந்தையின் கருவிலே இணைந்து விடும். கருவிலேயே இத்தகைய நிலைகள் உருவாகிறது. குழந்தைக்கு அதுவே பூர்வ புண்ணியமாகிறது.

குழந்தை கருவிலே விளையும் போது அடுத்தவர்களைத் கிள்ளுவது.. தள்ளி விடுவது...! போன்றவற்றைக் கருவுற்ற தாய் பார்த்திருப்பார்கள். பிறந்த உடனே அந்தக் குழந்தையைப் பாருங்கள்.

குழந்தையின் பாஷையும் தோரணையும் அதனுடைய சத்தமும் மற்றவரை அடிப்பதும் வெறுப்பதும் அது வளர்ச்சியாகி வரும் போது அந்த வித்தியாசம் தெரியும்.

ஆனால் சில குழந்தைகளைத் தள்ளி விட்டாலும் அது பேசாமல் இருந்து விட்டு ஒதுங்கிப் போகும். அது அதனுடைய உணர்வுகள்.
1.அப்போது அந்த உணர்வுகொப்ப இயக்கம் இந்த உயிர் தான் இயக்குகிறது.
2.வேறு யாரும் இயக்கவில்லை.

நாம் எண்ணி நுகர்ந்த உணர்வை அணுவாக மாற்றி அந்த அணுவின் மலம் தான் நம் உடலாகிறது. நல்ல அணுக்களாக இருந்தால் நம் உடல் அழகாக இருக்கிறது. அமைதியாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது.

ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைத் தள்ளி விடும் போது கருவுற்ற தாய் “பார்... சிறிய குழந்தையை இப்படித் தள்ளி விடுகிறது...! என்று நினைத்தால் கருவிலிருக்கும் குழந்தைக்கு அதே உணர்வுகள் தான் தோன்றுகின்றன.

அதற்குத் தள்ளி விடும் உணர்வுகள் வருகிறது. அது பிறந்தபின் குழந்தை பருவத்தில் அடுத்த குழந்தையைத் தள்ளி விடும்போது விழுந்த குழந்தையின் பெற்றோருக்குக் கோபம் வருகிறது.
1.கோபம் வந்தால் குழந்தைகளுக்குத் தெரிகிறதா என்றால் இல்லை.
2.ஆனாலும் தன் செயலைத் தான் அது செய்கிறது.

தன் குழந்தை தவறு செய்கிறதே...! என்று தாய் சப்தம் போட்டுக் கூப்பிட்டால் அந்தச் சப்தம் கேட்டு எதிர்த்துக் குழந்தை அழ ஆரம்பித்து விடும். ஆனால் தெரிவதில்லை,

எந்த உணர்வின் அணுவாக உருப்பெற்றதோ அந்த உணர்வின் உணர்ச்சிகள் அது இயங்கி அதையே உணவாக உட்கொண்டு அந்த அணுக்கள் பெருகும்.

நாம் குழந்தை என்று எண்ணுகிறோம். ஆனால் அதன் வளர்ச்சியில் நாளடைவில் தன் உடலுக்குள் பகைமை உணர்வு கொண்ட அணுக்களாக மாறி விடும். அதே சமயத்தில் அந்த உணர்வுகளைக் குழந்தை நுகர நுகர இரத்த நாளங்களில் அந்த உணர்ச்சியின் தன்மைகள் தான் வளரும்.

சூரியன் செடி கொடிகளின் சத்துக்களை எடுத்து இந்தக் காற்று மண்டலத்தில் வைத்துக் கொள்கிறது. செடியில் விளைந்த வித்தைப் பூமியில் விதைத்தால் அந்த பூமியின் ஈர்ப்பின் துணை கொண்டு தன் தாய் செடியின் சத்தை நுகர்ந்து அதன் உணர்வுகொப்ப அதன் மணமும் குணங்களும் அதன் உணர்ச்சிக்குத்தக்க அந்தச் செடியின் ரூபமும் வருகிறது.

இந்தப் பூமியைப் போலத் தான் நம் உடல். சூரியன் எப்படி மற்ற தாவர இனங்களை வளர்க்கச் செயல்படுகின்றதோ அதுபோல நம் உயிரால் உருவாக்கும் நிலைகள் உடலிலே ஜீவ அணுக்களை உருவாக்குகின்றது.

எந்த உடலில் விளைந்த கோபமோ வெறுப்போ வேதனையோ அதனதன் எண்ணங்களாக வெளி வரும் போது இது பல பல வித்துக்களாக மாறும்.

கண் கொண்டு கூர்ந்து பார்க்கும் நமக்குள் போது பதிவாகிறது. பதிவான நிலைகளை ஈர்க்கும் சக்தி பெறுகிறது நம் கண்ணின் காந்தப் புலனறிவு. நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த உணர்வின் தன்மை தன் உடலிலே அணுவாகப் பெருகத் தொடங்குகிறது.

உருவான அணு தன் இனமான உணர்வை ஈர்க்கும் சக்தி பெற்று அதைக் கவரத் தொடங்குகிறது. அந்த அணுவுக்குத் தேவையான உணர்வை எடுத்துக் கொடுத்து வளர்ப்பது நம் உயிர் தான்.

நுகர்ந்த உணர்வின் அந்தச் சத்துகள் நம் உடலிலே பெருகப் பெருகப் பெருக நம் உடலிலுள்ள மற்ற நல்ல குணங்கள் கொண்ட அணுக்களுக்கு இது இடைஞ்சலாக வரும்.

தாய் கருவிலே இருக்கும் போது வெறுப்புணர்வு கொண்ட உணர்வுகளைத் தாய் கவர்ந்திருந்தால் சந்தோஷமாக அதை உணவாக உட்கொள்ளும். அந்த அணுக்கள் பெருகும்.

அதே சமயத்தில் இந்த உணர்வுகள் இரத்தத்தில் அதிகமான பின் மற்ற நல்ல அணுக்களுக்கு நல்ல உணர்வுகள் இரத்தத்தில் வரவில்லை என்றால் என்ன ஆகும்...? போர் முறை தான்...!
1.ஆக தாய் கருவில் பெற்ற நிலைகளே நமக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து
2.அதன் வழியிலேயே நாம் செயல்படுகின்றோம்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் தியானம் இருந்தோம் என்று சொல்லிவிட்டு எதிர்த்த வீட்டில் சண்டை போட்டார்களென்றால் அந்தச் சண்டையைக் கொஞ்ச நேரம் நம்மை அறியாமல் நுகர்ந்தால் போதும்.

சண்டை போடுவதை உற்று பார்த்த உடனே
1.நம்மை அறியாமலேயே நமக்கு அந்த உணர்ச்சியின் வேகங்கள் வரும்.
2.உணர்ச்சிகளைத் தூண்டி அதே எண்ணங்கள் வரும். அந்தச் செயல்களும் வரும்.
3.நம் உடலிலுள்ள நல்ல அணுக்கள் இயங்க மறுக்கும்.
4.மறுக்கும் போது நம்மை அறியாமலே ஒரு விதமான இனம் புரியாத எரிச்சல் வரும்.

குழம்பில் காரம் அதிகமாகப் போட்டால் எப்படி இருக்கும்...? அதே போல இந்த உணர்ச்சிகள் நம் உடலில் வந்த உடனே அதே உணர்ச்சியின் எண்ணங்களால் நம் சிந்திக்கும் ஆற்றல் குறையும்.

பதிலுக்கு எப்படியும் எதையாவது சொல்ல வேண்டும் என்ற உணர்வைத் தூண்டும்.
1.அந்த உணர்வைத் தூண்டிய உடனே அவர்களோடு நாம் சண்டைக்குப் போனால்
2.சண்டையிட்டால் “இவருக்கு என்ன வந்தது...?” என்று நம்மிடம் கேட்பார்கள்.

அவர்கள் சண்டை போடும் போது நாம் பார்த்தோம். அதற்கு முன் அவர்கள் எதற்காகச் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்று நமக்குத் தெரியவில்லை.
1.ஆனாலும் சண்டையைப் பார்த்த உடனே அந்த உணர்வுகள் நம்மை இயக்குகிறது.
2.இயக்கினாலும் பொது வாழ்க்கையில் நாம் யார் யாரோ எப்படி எப்படியோ நாம் பழகத் தான் செய்கிறோம்.
3.ஆனால் நல்லதை நாம் பெறுகின்றோமா... வளர்க்கின்றோமா...?

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? “ஈஸ்வரா...!புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு பிரேக் (BRAKE) போட்ட மாதிரி சண்டை போடும் உணர்வை நமக்குள் புகாதபடி நிறுத்த வேண்டும்.

நிறுத்திய உடனே நம் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் கொண்டு வந்து விட வேண்டும். இது கூடிவிட்டால் சண்டை போட்டவர்களின் உணர்வு நம்மை இயக்காது.

பின் மகரிஷிகளின் அருள் சக்தி சண்டையிட்டவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர்கள் பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும். பகைமைகள் அகன்று ஒற்றுமை உணர்வுடன் வாழ வேண்டும் என்று இத்தகைய உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

இதனால் பிறரின் தீமைகள் நமக்குள் வராது தடுக்கின்றோம். மற்றவர்களுக்கும் நாம் நல்ல உணர்வைப் பெறச் செய்கின்றோம்.

ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் அவ்வப்பொழுது வரும் தீமைகளிலிருந்து நீங்கள் எப்படி விடுபட வேண்டும் என்ற உபாயத்தைத்தான் யாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.