ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 29, 2018

வெறுப்புடன் இருந்தால் பொறுமை இருக்காது... பொறுமை இல்லை என்றால் ஏற்கும் நிலை வராது... ஏற்கும் நிலை இல்லை என்றால் நல்லதைப் பதிவாக்கி வளர்க்க முடியாது...! – நடந்த நிகழ்ச்சி...!

ஒரு அம்மா தேனியிலிருந்து எம்மைப் (ஞானகுரு) பார்க்க வந்திருந்தார்கள். வெளி ஊருக்குச் சென்று விட்டு அப்பொழுது தான் தபோவனத்திற்குள் வந்தேன்.

சற்று உள்ளே சுற்றிப் பார்த்து விட்டு அதன் பின் என்னுடைய ரூமிற்குப் போகலாம் என்று இருந்தேன். அந்த அம்மாவோ அழுது கொண்டே இருக்கிறது.

அம்மா... “நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்...!” சிறிது நேரத்திற்குள் நான் வந்துவிடுகின்றேன். ரூமிற்கு வந்ததும் வாருங்கள் என்று உள்ளே சென்றுவிட்டேன். எல்லாம் பார்த்து விட்டு ரூமிற்கு வந்து விட்டேன். அந்த அம்மாவைக் காணோம்.

எங்கே அவர்...? என்று விசாரித்துக் கேட்டால் அந்த அம்மா ஊருக்கே திரும்பப் போய்விட்டார் என்று சொன்னார்கள். தியான வழியில் உள்ள அன்பர் ஒருவர் மூலம் கேள்விப்பட்டு “அவர் சொல்லி அனுப்பினார்...” என்று சொல்லி அந்த அம்மா இங்கே என்னைத் தேடி வந்திருக்கின்றது.
1.ஆனால் அவர்களின் சங்கடமோ
2.அந்த உணர்வின் இயக்கத்திலேயே தான் இருக்கிறது.
3.சங்கட உணர்வு இயக்கி தேடி வந்த நல்லதைப் பெறவிடாதபடி தடுத்து விட்டது...!

கொஞ்சம் பொறுத்து இரம்மா... அமைதியாக இரம்மா...! இப்பொழுது வந்து சொல்கிறேன் என்று தான் முதலில் சொன்னேன். என்னைச் சந்திக்க வருகிறவர்கள் ரோட்டில் வைத்து விபரம் கேட்டால் என்ன பதில் சொல்வது...?
1.வாக்குக் கொடுப்பது...
2.வாக்குச் சொல்வது...
3.மற்ற விபரங்களை எல்லாம் ரோட்டில் இருந்து சொல்ல முடியுமா...?

என்னைச் சந்திக்க வாங்க...! என்று தான் சொன்னேன். ஆனால் தன் கஷ்டத்தைச் சொல்லி அழுது கொண்டே போகிறது. இதற்கு என்ன செய்வது...?

ஏனென்றால்
1.ஏற்கும் உணர்வு அங்கே இல்லை...!
2.வெறுப்பு வரும் போது நல்லதைப் பெறுவதற்குண்டான பொறுமை இல்லை.
3.பொறுமை இருந்தால் ஏற்கும் தன்மை அங்கே வரும்.
4.ஏற்கும் தன்மை வந்தால் உணர்வுகள் பதிவாகும்.
5.அப்பொழுது தான் இருளை நீக்க அது உதவும்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் நம்மை இயக்குவது எது...? நம்மைப் பேசச் செய்வது எது...? நம்மைக் கோபப்படச் செய்வது எது...? நம்மை வெறுப்படையச் செய்வது எது...? நம்மை வேதனைப்படச் செய்வது எது...? என்று இதைப் போன்ற நிலைகளை எல்லாம் தெளிவாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் சுவாசிக்கும் உணர்வே நம்மை இயக்குகின்றது...! அப்பொழுது பிறிதொரு தீமையான உணர்வு நம்மை இயக்காதபடி தடுத்தே ஆக வேண்டும்.

அப்படித் தடுக்க வேண்டும் என்றால் ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை ஒவ்வொரு நொடிப் பொழுதும் உயிர் வழியாகச் சுவாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதனின் இயக்கமாகவே நாம் இருத்தல் வேண்டும்.

தெய்வீக குணங்களை வளர்த்துத் தெய்வீகப் பண்புகளை வளர்த்து தெய்வீக ஞானம் பெற்று என்றுமே நாம் அந்த  மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒவ்வொருவரும் இணைந்து மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்.

அதற்குத்தான் இதை எல்லாம் சொல்கிறோம்.