ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 18, 2020

கோவில்களிலே சொர்க்கவாசல் திறப்பு என்று வடக்கு வாசலைக் காட்டுகிறார்கள்... ஏன்...?


வருடம் முழுவதும் நேராகக் கோவிலுக்குள் போவோம். ஆனால் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசலைத் திறப்பார்கள். அதாவது வடக்கு வாசலைத் திறப்பார்கள்.

அன்றைய தினம் எல்லாக் கோவிலிலும் வடக்கு வாசல் வழியாகப் போகும் படி அந்தச் சொர்க்க வாசலைத் திறந்து வைத்திருப்பார்கள்.

நாம் வழக்கமாகத் தெற்கு வாசலில் இருந்தும் போகலாம். கிழக்கு வாசலில் இருந்தும் போகலாம். வடக்கு வாசலை மட்டும் என்றைக்கும் அடைத்து வைத்திருப்பார்கள். “அது தான் துருவ நட்சத்திரம் என்பது...!” (நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே இருப்பது துருவ நட்சத்திரம்)

ஆனால் இன்று சாங்கிய சாஸ்திரப்படி என்ன செய்கிறார்கள்...? வடக்கு வாசல் வழியாகக் கோவிலுக்குள் போய் சாமியைத் தரிசனம் செய்தோமென்றால் அன்றைக்கு “நமக்கு மோட்சம் பெறும் நாள்” என்று செய்து வைத்திருக்கின்றார்கள்.

அதே சமயத்தில் சொர்க்கத்தை அடைவதற்காக வேண்டி இராத்திரி எல்லாம் பட்டினியாக இருந்து விடிய விடிய முழித்துக் கொண்டு இருப்பதைக் காட்டி “நமக்கு நினைவும் படுத்துகின்றார்கள்...”

பரமபதம் என்று ஒரு அட்டையை வைத்திருப்பார்கள் அதிலே கீழே இருக்கும் கட்டங்களில் பல விதமான உயிரினங்களைப் போட்டிருப்பார்கள். முதலில் தாயம் போட்டவுடனே நகற்றிக் கொண்டே இருப்போம்.

ஒன்று இரண்டு மூன்று போட்டவுடன் ஒரு ஏணி இருக்கும் மேலே டக்... என்று மேலே போய்விடும்

மனிதனாக இருக்கின்றோம்...! பாம்பு வருகிறது என்று அந்தப் பாம்பை நாம் அடித்து விட்டால் அந்தப் பாம்பு மனிதனாகப் பிறக்கின்றது. அதே மாதிரி இந்த வால்பாகம் இந்த உணர்வின் தன்மை வந்தபின் டக்... என்று வந்தால் நேராக மேலே போகின்றது (பெரிய ஏணி).

பெரிய ஏணியை வைத்து மேலே போனாலும் பின்பு அதைக் கடந்து வந்தபின் பரமபதம் போவதற்கு முன் அங்கே விஷம் கொண்ட பெரிய பாம்பு இருக்கிறது.

தாயக் கட்டையை வைத்து உருட்டும்போது பாம்புத் தலை இருக்கும் அந்தக் கட்டத்தில் போனால் ஜர்.. என்று கீழே போய்விடும் எங்கே...? பாம்பிடம் பட்ட பிற்பாடு அந்த விஷத்தைக் கொண்டு நேராக பன்றியிடம் கொண்டு வந்து விட்டுவிடும்.

பன்றியிடம் வந்தபின்... மீண்டும்..
1.பன்றி எப்படித் தீமையை நீக்கி அந்த உணர்வின் தன்மை படிப்படியாக வலுப் பெற்றதோ
2.அதைப் போல தீமையை நீக்கும் ஆற்றலை நீ பெற வேண்டும்
3.மீண்டும் மனிதனாகி அதன் வழியில் வளர வேண்டும் என்று வரிசைப்படுத்தி இருப்பார்கள்.

இப்படி அந்தச் சொர்க்கவாசலை அடையும் வழியை... அந்தப் பரமபதம் என்ற ஒரு விளையாட்டின் மூலமாகக் கூடக் காட்டி
1.நமது வாழ்க்கையில் எப்படி எல்லாம் உயருகின்றோம்...?
2.எப்படித் தாழுகின்றோம்..? எப்படி நாம் மாறுகின்றோம்...? என்று காட்டுகின்றார்கள்.

பின் அந்தப் பெரிய பாம்பைக் கடந்து சென்றபின்தான் ஒவ்வொரு குணங்களுக்கும் நகர்ந்து சென்று அபாயம் இல்லாத நிலைகளை அடைகின்றோம். அப்படி அபாயம் இல்லாத நிலைகள் வரப்படும்போது “பூரண நிலைகள்” அடையும் தன்மை அங்கே வருகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் விஷத் தன்மைகளைக் கடந்த பின்  அங்கே சொர்க்க வாசல் என்று (பரமபதம்) நமக்குக் காட்டுகின்றார்கள். சொர்க்கவாசல் என்பது... இந்த “உயிரின் வழி (வாசல்)” கொண்டு தான் அதை அடைய முடியும்.

ஏனென்றால் இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் நுகர்வது உயிரிலே பட்டுத் தான் அந்தந்த உணர்வுகள் நமக்குள் தெரிகின்றது.

ஆனால் அதே சமயத்தில் கண்ணிலே பார்த்த உணர்வின் தன்மை நம் உடலிலே பதிவாக்குகின்றது. பதிவானபின்.. அந்த எண்ணம் கொண்டு மீண்டும் கண்ணிலே பார்த்துத்தான் அந்த எண்ணங்களை எல்லாம் நாம் நுகர நேர்கின்றது.

அதைப் போன்று தான்...
1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றேன்.
2.உங்கள் நினைவைக் கூர்மையாக்கி இதைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

அந்தப் பதிவின் தன்மையை மீண்டும் கண்ணுக்குக்  கொண்டு வந்து “உங்கள் சொர்க்க பாதையான உயிரில் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்...!”

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டுமென்று இந்த உணர்வினை உள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து அதனின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றால் தீமைகளை அகற்றிவிட்டு "என்றும் ஒளியின் சரீரமாகத் திகழ முடியும்..."

இது நம்முடைய சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.