ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 25, 2015

ரிஷியின் மகன் நாரதன் - அவன் கலகப்பிரியன், கலகமோ நன்மையில் முடியும்

நாராயணன் இராமனாகப் பிறக்கின்றான் என்று வான்மீகி கதை எழுதியதாக இவர்கள் சொல்கிறார்கள். இராமன் எப்பொழுது பிறந்தான்? இராமன் நவமியில் பிறந்தான் என்று காவியத்தைத் தொடர்கின்றான் வான்மீகி.

ஆனால், அதே சமயம் இன்று இராமாயணக் காவியம் எழுதியவர்களோ நாரதன் விண்ணிலிருந்து வந்து இறங்கி வேடனான வான்மீகி கடும் ஜெபமியற்றிக் கொண்டிருக்கும் பொழுது, இவன் காதிலே ஓதினான், “ராமா, ராமா, ராமா, ராமா” என்று.

அப்பொழுது நாராயணன் தன்மையை இன்னொரு பக்கம் வந்து இன்னொரு பிறவி எடுக்கப் போகிறான் என்று இவர்கள் காவியக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். இது கதை.

புராணம் என்பது மெய்தான். ஆனால், மெய்யுக்குள் உணர்வின் தன்மை உணர்த்துவதற்கு அந்த மெய்ஞானி வான்மீகி எழுதியிருந்தாலும், பிற்காலத்தில் அதைக் கதையாக எழுதிவிட்டார்கள்.

ஆக மனித வாழ்க்கைக்கு ஒத்த நிலைகளில், வான்மீகி எழுதிய தத்துவத்தை ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கைக்குத் தக்கவாறு, அரசனுக்கு ஏற்றவாறு காவியங்களைத் திருத்தி எழுதிக்கொண்டார்கள்.

நாராயணன் என்பது சூரியன். சூரியன் எவ்வாறு பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கின்றதோ, இதைப்போல ஒரு மனிதன் உடலுக்குள் பிரபஞ்சம்,

சூரியன் எப்படி ஒரு சூரியக் குடும்பமாகி ஒரு பிரபஞ்சமாகின்றதோ, இதைப்போல்தான் நம் உயிரின் தன்மை சூரியனாகி
இந்த விண்ணுலகத்தின் ஆற்றலை
தான் எடுத்துக்கொண்ட உணர்வு அனைத்துமே இந்த சரீரமாகி,
இந்தச் சரீரத்திற்குள் தான் எடுத்துக் கொண்ட
உணர்வின் அணுகொண்டு இயக்கம்,
அணுதிசுவுக்குள் இயக்கக்கூடிய அந்த அணுவின் ஒளியின் தன்மை.
அந்த ஒளியின் தன்மைகள் நட்சத்திரங்களாகி
அதனின் ஆற்றல்கொண்டு இந்த உடலே ஒரு பிரபஞ்சம்.

ஆதியிலே நாம் இப்பொழுது காணும் சூரியனோ, நட்சத்திரங்களோ, கோள்களோ இல்லாத நிலையில், ஆதிசக்தி ஆவியாக இருந்தது என்ற நிலையை, இயற்கையின் பேருண்மைகளை அந்த மெய்யைத் தனக்குள் அறிந்துணர்ந்தவன் நம் பூமியில் தோன்றிய முதல் மனிதன் அகஸ்தியன்.

அவன் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றி இன்று துருவ நட்சத்திரமாக என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய அந்த அணுதான் நாரதன்.
ரிஷியின் மகன் நாரதன்.
நாராயணின் அபிமான புத்திரன்.

ஆக நாராயணனின் அபிமான புத்திரன். இந்தப் பிரபஞ்சத்தை இயக்கப்படும்போது ஒரு உயிரான, உயிரின் தன்மை கொண்டு உடலை இயக்கக்கூடிய அந்த ரிஷியின் தன்மை அவன் ஒளியாக மாறினாலும், அந்த உணர்வின் தன்மை ஒவ்வொரு ஒளியும் இங்கு ஒரு பிரபஞ்சத்தை இயக்கக்கூடிய ஆற்றல் பெற்றது.

ஆக, ஒளிகொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் ஆற்றல் பெற்றது என்ற நிலையைக் காட்டினான்.

நமது உயிரும் நட்சத்திரம். ஆனால் நம் உடலுக்குள் இருப்பது சூரியன். சூரியனோ ஒரு பிரபஞ்சத்துக்கு சூரியன், பேரண்டத்திற்கு அது நட்சத்திரம். இதைப்போன்று இந்த பேருண்மையினுடைய நிலைகளை அன்று மெய்ஞானிகள் உணர்த்தினார்கள்.

மெய்யுணர்வைக் கண்ட அந்த நாரதன் அதாவது, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவந்த அந்த உணர்வின் தன்மை வான்மீகியின் ஈர்ப்பலைகளுக்குள் சிக்குகின்றது.

அதாவது ரிஷியின் மகன் நாரதன். நாரதனோ கலகப்பிரியன். அவனுடைய கலகமோ நன்மையில் முடியும்.

எந்தெந்தப் பேராசை கொண்டு தன் வாழ்க்கையில் எதையெல்லாம் செயல்படுத்த வேண்டுமென்று வான்மீகி எண்ணினானோ,
அவனுக்குள் அந்த மெய்யுணர்வின் அலைகள் வரப்படும்போது,
இவன் ஆசைகள் எல்லாம் கலகமாகின்றது.
செய்த தவறையெல்லாம் அவனுக்குள் சிந்திக்கச் செய்கின்றது.

அவ்வாறு தனக்குள் செய்த சிந்தனையின் தன்மையின் உண்மையைத்தான் அவன் உணர்ந்தறிந்தான். அதனால்தான் நாரதன் ஒரு கலகப்பிரியன் அவன் கலகமோ நன்மையில் முடியும் என்றார்கள்.

தன் உடலுக்குள் சேர்த்துக்கொண்ட உணர்வின் ஆற்றலை தான் எதைப் பதிவு செய்தானோ அதை அப்பொழுது இராமாயணமாக அந்த வான்மீகி எழுதுகின்றான்.

துருவ நட்சத்திரம் எந்த வழிகளிலே அது ஒளியாக மாறியதோ,
அந்த உண்மையின் ஆற்றல் பூராவுமே
வான்மீகியின் உடலுக்குள் நின்று அது வெளிப்படுத்தியதுதான்
இராமாயணக் காவியம்.