ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 21, 2015

ஆயிரம் கண்ணுடையாள் விளக்கம் - ஞானகுரு



தன்னைக் காட்டிலும் நண்பன் வலு உள்ளவனாக இருக்கின்றான். அவனிடம் சொல்லி “உன்னை என்ன செய்கின்றேன்..., பார்” என்ற உணர்வை ஊட்டினால் அவனை அழித்திடும் உணர்வு வருகின்றது.

அவன் துணை கொண்டு நமக்குள் இந்த உணர்வுகள் வந்து அவன் செயலாகவே அவனை அழித்திடும் நிலைகள் வருகின்றது. அவனில் அறியாது செய்த தவறினை நீக்கும் பண்பு இழந்துவிடுகின்றது. அவனுள் இயக்கிய உணர்வே அவனை மாற்றியமைக்கின்றது.

இதைபோன்றுதான் நம் வாழ்க்கையில் வேதனையான (வேதனை என்றாலே விஷம்) உணர்வை நுகரும்பொழுது, பலகோடிச் சரீரங்களை வளர்த்து
நாம் உண்மையின் உணர்வை அறியும் பருவம் வந்தாலும்
சந்தர்ப்பம் இருள் சூழும் நிலைக்கே மாற்றிவிடுகின்றது.

இதைத்தான் ஞானிகள் ஆயிரம் கண்ணுடையாள் என்று நமக்குள் இருக்கக்கூடிய பலகோடி உணர்வுகளைக் காட்டினார்கள்.
அதன் உணர்வு கொண்டு அது
தன் தன் இனத்தை அறிகின்றது, உணர்கின்றது, பார்க்கின்றது. உணர்கின்றது என்றால் அதை நுகர்ந்து அதன் உணர்வாகவே செயல்படுகின்றது.

இதுதான் ஆயிரம் கண்ணுடையாள் என்பது. ஞானிகள் நம்மை எவ்வளவு பக்குவமாக அறியச் செய்கின்றனர்.

ஆகவே, உங்களுக்குள் பல உணர்வின் நிலைகள் வரப்படும்பொழுது யாம் உபதேசம் செய்யும் பொழுது பின் பகுதியில் சப்தம் கேட்டால், உபதேசிப்பதை விட்டு விட்டு நீங்கள் அதைத்தான் பார்க்க நேருகின்றது.

இந்தக் கண்கள் அதன் உணர்வின் நிலைகளைப் பார்க்கும்பொழுது அதன் உணர்வின் அறிவாகவே மாற்றிவிடுகின்றது.

உபதேசிக்கும் நிலைகள் உங்களுக்குள் செல்வது தடைபடுகின்றது. பின், மீட்கும் உணர்வுகள் இதைக்கலந்தபின் அதுவும் கலந்து சிறிது சுவை கெடும் தன்மை வந்துவிடுகின்றது.

இதைப்போன்றுதான், நம் மனித வாழ்க்கையில்
பிறர் செய்யும் தீமைகளை
நமக்குள் நம்மை அறியாது,
அதை அறியாது விலகிச் சென்றாலும்
நமக்குள் அது சேர்ந்துவிடுகின்றது.

நமக்குள் எத்தனையோ கோடி குணங்களின் உணர்வுகள் வெறுப்படைவது - வெறுப்படையச் செய்வது இப்படி எத்தனையோ உணர்ச்சிகளை ஊட்டும் உணர்வுகள் நமக்குள் உண்டு.

இவ்வாறு நமக்குள் உருபெறச் செய்துகொண்டிருக்கும் உணர்வுகள் எத்தனையோ உண்டு. இதைப் போன்று, நாம் நுகரும் சந்தர்ப்பங்கள், ஏராளமான நிலைகள் உருவாகின்றது.

எதையும் நம் உயிர் விடுவதில்லை. இதை நம் இயக்கச்சக்தியாக மாற்றி நம் உடலாக மாற்றுகின்றது. உயிரோட வேலை அதுதான்.

நெருப்பை வைத்து, ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி ஒரு பொருளைப் போட்டால், எப்பொருளோ அதன் சுவையைத் தான் மாற்றுகின்றது.

அதைப்போல உயிரின் வேலை - நாம் எதை நுகர்கின்றோமோ அதன் வேலையைச் செய்தே தீரும்.

நம் உடலில், இத்தகைய நிலைகள் சந்தர்ப்பத்தால் நுகர நேர்ந்து இந்த நம் மனித வாழ்க்கையைச் சீர்படுத்த உதவினாலும், நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் அணுக்களாக விளைந்துவிடுகின்றது.

அதனின்று விடுபட, நம் குரு காட்டிய அருள் வழிப்படி
இந்தத் தியானத்தின் நிலைகொண்டு
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று
நம் நினைவின் எண்ணங்களை,
நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு,
இதே கண்கள் வழி உணர்வினைச் செலுத்தும்போது
தீமையை அகற்ற முடிகின்றது
அருள்ஒளியை நமக்குள் பெருக்கும் சந்தர்ப்பமாக இது அமைகின்றது.