ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2015

ஞானகுருவின் பொன்மொழிகள் - Spiritual Quotes November 2014

30.11.2014
நமது உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு தெளிந்த நிலைகள் கொண்டு செயலாக்கும் ஆற்றல் பெற்றது நமது ஆறாவது அறிவு
29.11.2014
பரிணாம வளர்ச்சியில் வந்த நாம், பரிவு கொண்ட உணர்வுகள் நமக்குள் இருந்தாலும் மனிதனானபின் ஆறாவது அறிவின் துணை கொண்டு கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கிடும் நிலையைத்தான் பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன் என்று சொல்வது.
28.11.2014
வெப்பத்தைப் பராசக்தி என்றும், காந்தத்தை லட்சுமி வளரும் நிலை என்றும், விஷத்தின் இயக்கத்தைக் காந்தம் தனக்குள் கவர்ந்து இயக்கச் சக்தியாக மாறுவதை லட்சுமணா என்றும் பெயர் வைத்து உணர்த்தினார்கள் ஞானிகள்.
27.11.2014
எந்தெந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து அந்த மணம் அனைத்தும் ஞானமாகி, அது எவ்வாறு உணர்வின் செயலாக உடலை இயக்குகிறது என்பதைத்தான் மெய்ஞானிகள் அன்று விநாயகனை ஞானவான் என்று தெளிவுற உணர்த்தினர்.
26.11.2014
இயற்கையின் சக்தி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது அதன் செயலாக்கங்கள் எவ்வாறு?

அதை நாம் தெரிந்து கொள்வதற்காக, இந்த உண்மைகள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று மகரிஷிகள் தம் உடலிலே விளைய வைத்து வெளிப்படுத்திய உணர்வலைகளை சூரியனின் காந்தசக்தி கவர்ந்து இந்த பூமியிலே படரச் செய்து கொண்டிருக்கிறது.
25.11.2014
நாம் சுவாசிக்கும் உணர்வின் வலுதான் இந்த உடலை இயக்கி, அந்த உணர்வின் சக்தியாக நமக்குள் இயக்குகின்றது என்ற நிலைதான் நந்தீஸ்வரா.
24.11.2014
நாம் தெளிவுறத் தெரிந்து கொள்ள, தெளிந்துரைத்த அந்த மெய்ஞானிகளின் அருள் உணர்வுகளை நாம் சிந்தித்து அவர்கள் உணர்த்திய உர்வின் அலையை நமக்குள் பெருக்கி, நம்மையறியாது நம்மில் சேர்ந்த தீயவிளைவுகளை நீக்கலாம்.
23.11.2014
தனக்குள் மெய்ப்பொருளைக் கண்டுணர்ந்து நாம் மெய்ப்பொருளைக் காணும் நிலைக்கு, தனக்குள் வின் உலக ஆற்றல் எவ்வாறு விளைந்தது என்று உபதேசித்து அருளியவர்கள் மகரிஷிகள்.
22.11.2014
நாம் எண்ணும் எண்ணத்தை நமக்குள் ஜீவனாக்கச் செய்வது நம் உயிரின் வேலை. அதனால் தான் ஓம் என்று போட்டு கோவில்களில் உணர்த்தியிருப்பார்கள்.
21.11.2014
மனதைக் கல்லாக்கிவிட்டோம்,
கல்லைக் கடவுளாக்கிவிட்டோம்
இனியாகிலும் உயிரைக் கடவுளாக மதிப்போம்.
மகாஞானிகளின் உனர்வை நம மணமாக மாற்றுவோம்
20.11.2014
முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக நாம் இந்த மனித உடலைப் பெற்றிருக்கிறோம். மிருக நிலைகளிலிருந்து மனித உடல் பெற்ற நாம் அந்த மெய்ஞானிகள் பெருக்கிய உணர்வின் தன்மையை நம் உடலுக்குள் பெருக்க வேண்டும்.
19.11.2014
கலி என்பதும் பலராமன் என்பதும் பலருடைய எண்ணங்கள் எந்தெந்த சுவை கொண்டு எண்ணுகின்றோமோ அதனதன் சுவைக்கொப்ப அந்தந்த உணர்வின் எண்ணங்கள் வடிந்து அதனின் செயலை நாம் செய்கிறோம் என்பதை கலி என்ற நிலைகளில் வைத்தனர்.
18.11.2014
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு உடலையும் காத்துக் கொள்ளும் உணர்வின் தன்மை நாம் எடுத்துக் கொண்டு மனிதனுக்குள் எண்ண வளர்ச்சியின் தன்மை அடைந்ததைக் குறிப்படுவதற்குத்தான் “அர்ச்சுனன்” – சகலகலா வல்லவன், சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டவன், வல்லமை பெற்றவன் என்று ஞானியர்கள் உணர்த்தினார்கள்.
17.11.2014
கண்ணன் புல்லாங்குழல் வாசிக்கின்றான் என்று சொல்கிறோம்.

அதாவது நாம் ஒரு செயலைக் கண்ணால் பார்க்கும் பொழுது அந்த உணர்வினை எடுத்து சுவாசிக்கும் பொழுது, அந்த உணர்வின் நிலைகளே நாதங்களாக எழும்பி நம்மை இயக்கும். இதைத்தான் கண்ணன் புல்லாங்குழல் வாசிக்கின்றான் என்றார்கள் ஞானிகள்.
16.11.2014
நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் நல்லது கெட்டதை உணர்த்தி, அந்த உணர்வின் நிலைகள் நமக்குள் உணர்ச்சியைத் தூண்டும் நிலையயும், அறிந்து கொள்ளும் நிலையையும் உருவாக்கியது கண்தான் என்ற உண்மையை உணர்த்துவதற்காக கண்ணைக் கண்ணனாக உருவகப்படுத்தினார்கள் ஞானிகள்.
15.11.2014
உருவான சக்தியான வெப்பம், இயக்கும் சக்தியான நஞ்சு, இணைக்கும் சக்தியான காந்தம், மணம் நான்கும் ஒரு அணுவிற்குள் இயக்கச் சக்தியாக மாறும்போது ஐந்தாவது நிலையான உணர்வு என்ற இயக்க நிலை அடைகின்றது. இதுவே காயத்திரி எனப்படுகிறது.
14.11.2014
பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்ற உயிராத்மா வேறு எந்த உடலின் ஈர்ப்புக்குள்ளும் செல்லாதபடி மகரிஷிகள் அருள் உணர்வை நமக்குள் கூட்டி, தீய உணர்வுகள் சேராவண்ணம் ஆத்ம சுத்தி செய்து, என்றும் நிலையான ஒளி சரீரம் பெறவே கூட்டு தியானம்.
13.11.2014
பிரபஞ்சத்திற்கு சூரியன் குரு.
உடலுக்கு உயிர் குரு.

சூரியன் எவ்வாறு பிரபஞ்சத்தை இயக்குகின்றதோ, அதப் போன்று நமது உயிர் நம் உடலுக்குள் ஒரு பெரும் பிரபஞ்சத்தையே உருவாக்குகின்றது. 
12.11.2014
இப்பூமி என்பது பரம். இப்பூமியின் பரத்துக்குள் படர்ந்து விளைந்து வெளிப்படும் சக்தி பரமாத்மா. 

இந்தப் பரமாத்மா எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அந்த அளவிற்குத்தான் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
11.11.2014
நாம் அனைவரும் ஒரே மகிழ்ச்சி கொண்டு ஒவ்வொரு உள்ளங்களில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்கி, மெய்ப் பொருள் காணும் அந்த உணர்வுகள் அங்கே வளர வேண்டும் என்று எல்லோரும் எண்ணினால் சூரியனின் காந்த சக்தியால் அது கவரப்பட்டு அது பரவுகின்றது.
10.11.2014
இந்த மனித வாழ்க்கையில் முழுமை அடைந்த ஞானிகளின் அருளாற்றல் மிக்க சக்தியையும் எண்ணங்களையும் நாம் அடிக்கடி நம் உடலிலே பதிவு செய்யப்படும் பொழுது,
வாழ்க்கையில் நஞ்சினை நீக்கி
வேதனை என்ற உணர்வை ஒளியாக மாற்றிய
ஞானிகள் வெளிப்படுத்திய சக்திகளை நாம் பெறமுடியும்.
09.11.2014
மனித வாழ்க்கையில் வேதனை என்ற நஞ்சான உணர்வை வென்று  நல் உணர்வின் சத்தைத் தனக்குள் இணைத்து, அந்த உணர்வை உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் சப்தரிஷிகள். 

ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை கொண்டவர்கள். அதுதான் சப்தரிஷிகள் என்பது.
08.11.2014
வெப்பம், காந்தம், மணமான சத்து இவை மூன்றும் இணைந்து ஓர் அணுவின் நிலையை அடைவதால், இணைத்தல், காத்தல், அறிதல், உணர்தல் என்ற இயக்கச் சக்தியின் ஓர் அணுவாக ஆற்றல் பெருகின்றது. 
07.11.2014
மனிதனாக இருக்கும் நாம் நல் உணர்வுகளை நமக்குள் கூட்டி
விஷத்தின் தன்மையைச் செயல் இழக்கச் செய்து
நல் உணர்வுகளை ஒளிச்சுடராக மாற்றி
என்றும் அழியா ஒலி ஒளி சரீரம் பெறுவோம்.
06.11.2014
என்றும் விழித்த உணர்வு கொண்டு
ஒளியின் சுடராக நிலைபெற்ற நந்நாள்தான் வைகுண்ட ஏகாதசி
05.11.2014
மனிதனாக இருக்கும் நாம்,
உண்ணும் உணவிற்குள் உள்ள விஷத்தை மலமாக மாற்றி
நல் உணர்வின் சக்தியை உடலாக மாற்றுவது போன்று 

அந்த உணர்வின் தன்மை விஷத்தை வென்று
உணர்வின் ஒளி சுடராக மாற்றும் நிலை பெற்றதுதான் கல்கி.
04.11.2014
மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசியுங்கள்
உங்களைக் காக்க உங்கள் எண்ணம் உதவட்டும்
03.11.2014
உங்களை நீங்கள் நம்புங்கள்
நீங்கள் எடுக்கும் உணர்வுதான் தெய்வம்
பேரண்டத்தின் பெரும் உணர்வுகள் உங்களுக்குள் உண்டு
02.11.2014
நாம் எக்குணத்தை எடுக்கின்றோமோ அதுவே நம் உடலுக்குள் அக்குணத்தின் உணர்வின் இயக்கமாகப் பெருகி செயல்படுகின்றது. 

உணர்வின் இயக்கம் வாகனமாக நின்று நம்முள் பதிந்த உணர்வுகளுக்கொப்ப நம்மைச் செயல்பட வைக்கின்றது.