ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 18, 2015

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலையும் அருள் சக்தியையும் உங்களுக்குள் வலு பெறச் செய்கின்றோம் - ஞானகுரு

ஆதியில், பல நஞ்சினை அடக்கி
உணர்வினைப் பேரருளாக மாற்றி
பேரொளி என்ற உணர்வினைப் பெற்றவன் அகஸ்தியன்.
பேரருளைப் பெற்று பேரொளியின் உணர்வை அவன் வளர்க்கும் பொழுதுதான் துருவனாகின்றான்.

வானை நோக்கி புவியின் துருவப் பகுதியில் உற்று நோக்கி அதனின்று வரும் அரும் பெரும் சக்தியையும் அதன் பின் வரும் நஞ்சினையும் கலந்து தான் நுகர்ந்தாலும், நஞ்சினை ஒளியாக மாற்றிடும் பெரும் சக்தியாக அவனுள் பெருகுகின்றது.

இது அவனுடைய சந்தர்ப்பம்.

அவன் அவ்வழியில் பெறும் பொழுதுதான் அவனுடைய காலப் பருவம் வரும் பொழுது அவனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர்.

திருமணம் ஆகும்போது தன் மனைவிக்கு தான் பெற்ற பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டுமென்று சொல்லால் ஓதுகின்றான். மனைவியும் செவி வழி கேட்கின்றாள். அதன் வழி நுகர்கின்றாள்.

கணவன் கண்ட பேரருள் என்ற உணர்வினை
அகஸ்தியனின் மனைவி - தனக்குள் கவர்ந்துகொண்ட சக்தி
எந்தக் கணவனிடமிருந்து பெற்றாளோ அந்த உயர்வின் நிலைகள்
தன் கணவன் அகண்ட அண்டத்தையும் பெறும் ஆற்றல் பெற்று அவ்வழியில் தானும் தன் நிலைகளில் உயர்ந்திட வேண்டுமென்று ஏங்குகின்றாள்.

அதன்வழி அவள் வளர்த்தைக் கணவன் பெறவேண்டும் என்றும், கணவன் வளர்த்ததை மனைவி பெறவேண்டும் என்றும், இரு மனமும் ஒரு மனமாகி உணர்வினை இருவரும் ஒன்றிணைத்து,
இருவருமே துருவத்தை உற்று நோக்கி ஏங்கி
அதன் உணர்வைக் கவர்கின்றார்கள்.

ஆண் பெண் என்ற நிலைகளில் தாவர இனங்கள் தன் தன் இனத்தை உருவாக்குகின்றது. உலகில் ஒவ்வொரு உயிரும் ஆண் பெண் என்ற நிலைகளில் இணையும்போதுதான் உருவாக்கும் திறன் பெறுகின்றது.

நமது உயிரும் ஆண் பெண் என்ற நிலைகளில் இயங்குகின்றது. உயிருக்குள் இருக்கும் வெப்பம் விஷ்ணு, காந்தம் லட்சுமி.
இரு உணர்வும் இணைந்து
நுகரும் உணர்வை இயக்கி உருவாக்குகின்றது.
அதைத்தான் ஈசன் என்று நம் ஞானிகள் பெயர் வைத்தனர்.

இப்படி நுகர்ந்த உணர்வை உயிர் ஜீவ அணுவாக மாற்றிக்கொண்டேயுள்ளது. இதன் வழியில் பல கோடி சரீரங்களைப் பெற்றாலும் இந்த மெய்யை அறிந்துணர்ந்து தனக்குள் உருவாக்கிப் பெற்றவன் அகஸ்தியன்.

சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று இணைந்து உருபெறும் சக்தி பெற்றாலும், மனிதன் ஆறாவது அறிவின் துணைகொண்டு அதைப் பெறவேண்டும் என்று ஏங்கி தனக்குள் உருப்பெறச் செய்கின்றான்.

அவனே வாழ்க்கையில் வரும் நஞ்சினை ஒளியாக உருபெறச் செய்யும் முதல் மனிதன் ஆகின்றான்.

ஆக, கணவனும் மனைவியும் இணைந்து அருள் ஒளி என்று நிலைபெற்று, பேரொளியாக உருபெற்று பேரண்டத்தில், அகண்ட அண்டத்தில் அழியாத நிலையாக என்றும் பதினாறு என்று வாழும் நிலை பெறுகின்றனர்.
ஒவ்வொருவரும் உடலுக்காக நாள் முழுவதற்கும் வேலை செய்கிறோம்.

ஆனால், நம் ஆத்மாவுக்காக
நாம் அழியா ஒளிச் சரீரம் பெறுவதற்காக
ஒரு ஐந்து நிமிடத்திலிருந்து பத்து நிமிடமாவது
துருவ நட்சத்திரத்தின் பேரருளி பேரொளியைச் சுவாசியுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தியான அந்த ஞான வித்துக்களை பல உபதேச வாயிலாக உங்களுக்குள் பதிவு செய்திருக்கின்றோம். உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சிரமம் ஏற்படுகின்றதோ, அந்த நேரத்தில் யாம் பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

அதை நினைவுக்குக் கொண்டு வந்தபின், ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி உங்கள் உடலில் வரக்கூடிய கஷ்டங்களையும், மற்றவைகளையும், பிணிகளையும் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ அப்பொழுதெல்லாம் “ஆத்மசுத்தி” என்ற ஆயுதத்தை உபயோகப்படுத்துங்கள்.

அதை எடுக்கும்போது, அந்த துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும்  துருவ நட்சத்திரத்தின் ஆற்றலும் உங்களுக்குள் வலுப்பெறுகின்றது. ஆகையினால், இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.