ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 14, 2015

மந்திரம் செய்பவர்களிடம் நாம் சிக்கிவிடக்கூடாது - ஞானகுரு


இன்றைக்கும் மந்திரம் செய்கிறவர்கள் நான்கு பேரைப் பார்த்துவிட்டால் போதும். அவர்கள் அதைச் செய்தார்கள், இதைச் செய்தார்கள் என்று என்று பத்திரிக்கை விளம்பரம் செய்தார்கள் என்றால் போதும்.

“குட்டிச்சாத்தான் என்று சொல்லிக் கொடுக்கப்படும்” என்று பத்திரிக்கையில் பார்த்துவிட்டு அதன்வழியில் இந்த உலகத்தில் வாழ்ந்தால் போதும் என்று போய் சிக்கிக் கொள்கிறார்கள்.

அங்கே சிக்கியவுடன் என்ன செய்கிறார்கள்? அதை எடுத்து எப்படியும் நான்கு பேருக்கு மத்தியில் பெருமையாக வளரவேண்டும் என்று நினைப்பார்கள்,
கடைசியில் இதிலே சிக்குண்டு
அவர்கள் செய்த தொழிலையும் விட்டுவிட்டு
சாமியாராக ஓடிவந்து விடுவார்கள்.

சாமியாராக வந்தவுடனே இதைத்தான் சொல்லுவார்கள். என்னிடம் காளி இருக்கிறது. என்னிடம் குட்டிச்சாத்தான் இருக்கிறது. அதை வைத்து உங்களுக்கு எல்லாம் செய்கிறேன் என்று சொல்வார்கள்.

ஏனென்றால், முதலிலே இவன் அதிலே சிக்கிய பின் இவன் சாப்பாட்டுக்கு வேண்டும். அதற்காக இவன் அப்படிச் சொல்வான். அவனிடம் பலர் சிக்கிக் கொண்டேயிருப்பார்கள்.

ஆக, இப்படித்தான் நம் வாழ்க்கையில் என்ன நடக்கின்றது? இதிலே கிடைக்காதா? அதிலே கிடைக்காதா? என்று உண்மையை நாம் காண முடியாது போய்விடும்.

சில ஆலயங்களிலே நாம் எங்கே போனாலும் சரி,
இந்த தெய்வத்தை நான் வசியம் பண்ணி வைத்திருக்கிறேன்.
இந்த தெய்வம் பிறருக்கு நான் சொல்வதையெல்லாம் கேட்கும்.
கோயில் உள்ள இடங்களில் எல்லாம் இப்படியும் சில மந்திரக்காரர்கள் உட்கார்ந்து சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

காளி என் கனவிலே வந்தது. எனக்கு இப்படிச் சொன்னது. “எல்லோருக்கும் இதைச்செய்ய வேண்டும்” என்று என்னிடம் சொன்னது அப்படி என்று சொல்லிக் கொண்டு இப்படியும் சில பேர் தன் வாழ்க்கைக்காக அங்கே ஆலயங்களில் இப்படிச் செய்து கொண்டிருப்பார்கள்.

ஆக, ஆலயத்தில் நல்ல ஒழுக்கங்களைக் கற்பித்தாலும் அந்த ஆலய நெறிகளை நாம் பெற முடியாதபடி ஏனென்றால் அந்த தெய்வமே இவரிடம் சிக்கியிருக்கிறது என்று மந்திரகாரர்கள் கையிலே சிக்கிவிடுகின்றார்கள்.

காரணம் - எந்த தெய்வத்தை நாம் வணங்கி வந்தோமோ அதன்மேல் இச்சைப்பட்ட உணர்வும், அந்த மந்திரத்திலே சிக்கிய நாம் இறந்தபின் அதே தெய்வத்தை வணங்குவோர் நிலைகள் சிக்குண்டால், அந்த தெயவத்தின் மேல் பக்தி கொண்டோர் உடலுக்குள் சென்று, நாம் அந்த தெய்வமாக அங்கே அருளாடுகின்றோம்.

ஆனால், அதே தெய்வத்தின் மந்திரத்தைக் கொண்டு மந்திரத்தை அதிகமாகச் செய்து அந்த மந்திரத்தைச் சொல்லும் அந்த தெய்வ குணங்கள் கொண்டவர்கள் இந்த மந்திரக்காரர்கள் கையிலே சிக்கிக் கொள்கின்றனர்.

காளியை வணங்குபவர்கள் என்றால், அந்தக் காளியாகவே காளியின் உணர்வு கொண்டே இங்கே வேலை செய்யும் என்ற நிலையை அங்கே நமது குருநாதர் காட்டுகின்றார்.

இப்படித்தான் இன்றைய உலக இயல்பின் நிலைகள் இருக்கின்றது.

ஆனால், ஒரு உணர்வின் ஆற்றல்கள் எவ்வாறு பெருகுகின்றது? அதிலிருந்து நீ எப்படி மீளவேண்டும் என்று அன்று வியாசகர் தெளிந்த நிலைகள் கொண்டு நல்வழி காட்டினார்.

அதற்கு மாறாக இந்த உடலே நமக்குச் சதம் என்று, இதிலே புகழும் பொருளும் என்ற நிலைகளில் அன்று ஆண்ட அரசர்களும், அவர்களைப் பின்பற்றி அரசின் நிலைகளில் இன்று பின் வந்தோரும் அதைக் கடைப்பிடித்து,
ஞானிகள் காட்டிய உண்மை நிலைகளை
மக்களுக்குக் கிடைக்கவிடாதபடி மறைத்தே விட்டனர்.

அன்று உணர்த்திய அருள்ஞானியின் உணர்வுகள் நமக்கு முன் இன்றும் ஒளிச்சுடராகச் சுழன்று கொண்டுள்ளது. அதை நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உபதேசிக்கின்றோம்.

ஆகவே, தீமையை நீக்கி ஒளியின் சுடராக ஆன அந்த குரு அருளை நீங்கள் ஏங்கிப்பெறும் அந்த உணர்வுகளை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்கின்றோம்.

அப்பொழுது, உங்களை அறியாது உங்களுக்குள் சூழ்ந்த அந்த இருளைப் பிளந்து, மகிழ்ச்சி பெறும் உணர்வு நீங்கள் பெற்று, மெய்ஞானிகளின் அருள்  சக்தியால் தெளிந்த நிலைகள் கொண்டு நீங்கள் பேரானந்த நிலை அடைய முடியும்.

உபதேசம் கேட்ட நீங்கள் அப்படிப் பேரானந்தப்படும்போது அதிலிருந்து வெளிப்படும் உணர்வை நான் நுகரும்போது குரு அருளை நான் பெறுகின்றேன். குருவை உங்களிடம் நான் காணுகின்றேன்.