ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 29, 2015

வாழவைக்க வேண்டும் என்றுதான் எண்ணவேண்டும், இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணக் கூடாது

சோதனையான காலங்களில் “இப்படி ஆகின்றதே” என்று வருந்தி குழந்தைகளையும் மற்றவர்களையும் எண்ணி படபடப்பாகி மயங்காமல்,
ஆசையின் உணர்வுகளை விடுத்து
அருள் ஒளியின் உணர்வுகளை எடுக்க வேண்டும்.

பின், குழந்தைகள் அருள்ஞான உணர்வுகள் பெறவேண்டும், இருளை அகற்றி மெய்ப்பொருள் காண வேண்டும், அவர்கள் வாழ்க்கை நலம் பெறவேண்டும் என்ற உணர்வை எடுத்தால் அவர்களை வாழவைக்கலாம். நமக்குள் அருள் உணர்வின் தன்மையைக் காக்கலாம்.

ஆகவே, மனிதருக்கு “வாழ வைக்க வேண்டும்” என்ற எண்ணம்தான் வரவேண்டுமே தவிர
“இப்படி ஆகிவிட்டதே” என்று எண்ணக் கூடாது.

ஏனென்றால், இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணப்படும் பொழுதுதான் விஷத்தின் தன்மையைக் கவர நேருகின்றது.

குருநாதர் காண்பித்த அருள் வழியில் நாம் அனைவரும் நம் உடல் நமக்குச் சொந்தமில்லை என்பதை உணர வேண்டும்.

உயிருடன் ஒன்றும் உணர்வை
அருளொளியின் உணர்வாக இணைத்துச் சொந்தமாக்குதல் வேண்டும்.

மகரிஷிகளின் அருள் உணர்வைப் பற்றுடன் பற்றுதல் வேண்டும். நமது வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றுதல் வேண்டும்.

மனித வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் குடும்பத்திற்காக உழைக்கின்றோம். நம்மையறியாது பல தீமைகள் கண் வழியாகவும், செவி வழியாகவும் நமக்குள் சேர்த்துக் கொள்கின்றோம்

துன்பத்தை ஊட்டும் அந்தத் தீமையான உணர்வுகள் உங்களை ஆட்டிப் படைக்காதிருக்கத்தான்
மெய்ஞானிகளின் அருள் ஒளியுடன் கலந்து,
உபதேசத்தின் நிலைகள் கொண்டு வாக்கின் வழியாக
உங்களுக்குள் ஞானத்தை அந்தச் சக்திகளைப் பதிவு செய்கின்றோம்.

அதைப் பெறச் செய்வதற்கு எந்த நிமிடத்திலும் ஓம் ஈஸ்வரா குருதேவா என்று உயிரை எண்ணி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்கள் உடல் முழுவதும் படரச் செய்யுங்கள்.

அப்பொழுது, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரொளி உங்கள் உடலுக்குள் ஊடுருவுகின்றது.
உங்களை ஆட்டிப்படைக்கும் தீமைகளை அடக்கி,
உங்கள் துன்பத்தைப் போக்கி மனதைத் தெளிவாக்குகின்றது.
எமது அருளாசிகள்.