Friday, March 8, 2013

நம் உயிரில், எக்காரணம் கொண்டும் நஞ்சை அணுகவிடக் கூடாது

1. நமக்கு எது மதிப்பு?
இம்மனிதச் சரீரத்தில் உயிர் இருக்கும் வரைதான்,
இந்தச் சரீரத்திற்கே மதிப்பு.
இவ்வுடலை விட்டு உயிர் பிரிந்த பிறகு,
இந்தச் சரீரத்திற்கு மதிப்பில்லாமல் போய் விடுகின்றது.

ஆகவே, இந்த உயிர் நம் சரீரத்தில் இருக்கும் பொழுதே, அவ்வுயிரைக் கடவுள் என மதித்து, அதனுடன் ஒன்றிய உணர்வுடன் நாம் செயல்படுவோமேயானால், அவ்வுயிர் பெற வேண்டிய உயர்நிலைகளை அடைகின்றது. அதைச் செய்வதற்கு நமக்குத் துணிவு வேண்டும்.

இந்தச் சரீரத்தில் எந்த உணர்வை விளைய வைத்தோமோ, அது சாவதில்லை. அது சாகாக்கலை. என்ற தன்மையில் இயங்கி, நம் உயிர் மறு சரீரம் பெறும் தன்மையை, நிர்ணயம் செய்கின்றது.

துருவ மகரிஷி இன்றும் விண்ணிலே ஒளியின் சுடராக நிலைத்திருந்து, விண்ணிலிருந்து வரக்கூடிய நஞ்சினைக் கவர்ந்து, தமது ஆகாரமாக எடுத்துக் கொள்கின்றார்.

அந்த நஞ்சு, அம்மகரிஷியின் உணர்வின் ஒளியாக மாறுகின்றது. அந்த நஞ்சு, இவருடைய உணர்வை வேகவைப்பதில்லை. ஆகவே இது வேகாக்கலை.

இந்த நூற்றாண்டில் பாடப்பட்ட, இராமலிங்க அடிகளாரின் பாடலை, நாம் ராகம் போட்டு மட்டுமே பாடுகின்றோம். ஆனால், அதன் உட்பொருளை அறிந்துகொள்ள, முன் வருவது இல்லை. இன்று, நாம் சாகாக்கலையில் தான் இருக்கின்றோமே தவிர, வேகாநிலைக்கு நாம் போகவேயில்லை.
“இரு உன்னை நான் அழித்து விடுகின்றேன்.” என்கிறபொழுது, அது நம் உயிரில், சாகாக்கலையாக இயக்கம் பெறுகின்றது. இறந்தபின், இதுவே பிற சரீரத்தினுள் புகுந்து, அங்கேயும் இந்தச் சாகாக்கலையை உண்டாக்கிவிடுகின்றது. மேலும் மந்திரங்கள், தந்திரங்கள் என்று, இதில் எதை நம்மிடத்தில் பதிவு செய்தாலும், அவைகளும் சாகாக்கலையாகவே இயக்கம் பெறுகின்றது.

சாகாக்கலை என்கிற பொழுது,
எந்த நஞ்சை நாம் வளர்த்துக் கொண்டோமோ,
அந்த நஞ்சின் தன்மை கொண்டு
நாம் மறு பிறவியைப் பெறுகின்றோம்.

உதாரணமாக, நாம் நம் உயிரில்  சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்துக்கேற்ப, மறு பிறவியாகப் பாம்பின் சரீரத்தைப் பெறுகின்றோம் என்றால், அந்த பாம்பின் சரீரத்தில் வாழ்ந்திடும் போது, தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வை எடுத்து, சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்துக்கேற்ப பாம்பின் சரீரத்திலிருந்து பிரியும் உயிர், மறுபிறவியைப் பெறுகின்றது.

ஆகவே, அங்கே பாம்பினுடைய உணர்வுகள் சாகாக் கலையாகச் செயல்படுகின்றது, என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அன்று ஞானிகள், இம்மனிதச் சரீரத்தில் ஜீவித்த காலத்திலேயே, உணர்வுகள் அனைத்தையும் ஒளிச் சரீரமாக்கி, வேகாநிலையைப் பெற்றவர்கள்.
2. நம் உயிரில், எக்காரணம் கொண்டும் நஞ்சை அணுகவிடக் கூடாது
நம் உயிர் தீயிலே வேகுவதில்லை. ஆனால், புழுவிலிருந்து மனிதச் சரீரம் பெறும் வரையிலும், தம்மைக் காத்திடும் நிலையாகப் பல கோடி உணர்வுகளை தம்மிடத்தில் சேர்த்து, இன்று மனிதச் சரீரம் பெற்றிருக்கின்றோம்.

அப்படிப் பெற்றிருந்தாலும், குடும்பத்தில் வெறுப்பான நிலைகள் உருவாகி விட்டால்,  நெருப்பிலே குதித்துத் தன் உயிரை மாய்த்து கொள்ளலாம் என்று சிலர் எண்ணுவார்கள்.

தீ, இவ்வுடலை அழிக்கலாம்.
ஆனால், இவ்வுயிரை அழிக்க முடியாது.

நெருப்பு என்பது நஞ்சு. இதனால், உயிரில் நஞ்சின் தன்மை அதிகமாகின்றது. தீயில் உடலினை எரித்துக் கொண்ட இந்த உணர்வின் தன்மை, உயிருடன் ஒன்றி, அது நெருப்பின் தன்மையை அடைகின்றது. 

மீண்டும், இந்த உயிராத்மா எந்த உடலுக்குள் சென்றாலும், அந்த உடலையும் எரியச் செய்து, அவரிடத்தில் வாழும் ஜீவனைப் பிரிக்கின்றது. இது போன்று, உணர்வுகள் சாக வைக்கப்பட்டு, நஞ்சின் தன்மை சாகாக் கலையாக இயங்குகின்றது. இவ்வாறு சாகாக்கலையை அறிந்த நாம், வேகாநிலையைப் பெற பாடுபடவேண்டும்.

உயிரின்  உணர்வில், எக்காரணம் கொண்டும் நஞ்சு அணுகாது, காத்துக் கொண்டவர்கள் ஞானிகள்.

அந்நிலையைத் தன்னிடத்தில் பெற்ற, மகாஞானிகள் கண்டுணர்ந்த தன்மையைத்தான் உங்களிடத்தில் பெறச் செய்து, அதையே உங்களுக்கு உரமாக ஆக்கி, அம்மகரிஷிகளின் அருளுணர்வுகளை உங்களிடத்தில் படரச் செய்வதற்குத்தான் ”குரு பூஜை விழா”.

“போகாப் புனல்” என்பது பிறிதொரு எந்தப் பிறவிக்கும் போகாதிருப்பது. மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவரின் அருளுணர்வுகள் நமக்குள் குருவாகி, இந்த மனித வாழ்க்கையில் இருளைப் போக்கி, மெய்யுணர்வை அறியும் நிலையாக நாம் செயல்படுவோம்.

இந்தச் சரீரத்திலேயே ஒளியின் சரீரமாக ஆகி, என்றும் “பெருவீடு, பெருநிலை’ என்ற நிலையை அடைய முடியும். இதை வேகாக்கலை என்கிறோம். ஆகவே, அத்தகைய நிலையை நீங்கள் அனைவரும் அடைய, எமது அருளாசிகள்.