எங்கிருந்தோ ஒலிபரப்பக் கூடிய அந்த உணர்வின் காந்த
அலையை, அந்த உணர்வு கொண்டு இங்கே சுவிட்சைப் போட்டவுடன் (TV, RADIO) காற்றிலிருந்து
இழுக்கக்கூடிய நிலையை சிருஷ்டிக்கின்றோம். இது யார் செய்தது? மனிதன். இதைப் போன்று,
இந்த காந்த இயக்கத்தின் சக்தியினுடைய தன்மையை
நாம் உணர்ந்தறிந்து செயல்படும்,
உருபெறும், உருவாக்கச் செய்யும் நிலையாகத்தான்
மனிதனின் ஆறாவது அறிவு இருக்கின்றது.
அந்த ஆறாவது அறிவின் தன்மையை நாம் பயன்படுத்தும்
முறை கொண்டு, இந்த உடலுக்குள் நின்று தசைகளாக இயக்கினாலும். இந்த உணர்வின் ஆற்றல்,
நாம் எண்ணக்கூடிய இந்த உணர்வுகளை
நாம் சுவாசித்தவுடன், நம் உயிரிலே பட்ட எண்ணங்களுக்குத் தக்கவாறு, நம் உடலை இயக்குகின்றோம்.
அந்த உணர்வின்
ஆற்றல் வலுவானது. அதைப் போன்று, இந்த உடலில் இருக்கும் பொழுதே, ஒளியின்
சரீரம் பெறும் நிலையை நாம் எடுக்க வேண்டும்.
நெருப்புடன் ஒரு கட்டையைப் போட்டவுடன், அந்தக்
கட்டையில் இருக்கக் கூடிய சத்தை மாற்றி, அதை ஒளியாக மாற்றுகின்றது.
நம் உயிர் ஒளியாக நின்று,
உடலுக்குள் அணுவின் திசுவை இயக்கி,
அந்த உணர்வின் சக்தியை அறியச் செய்து,
அந்த அறிவின் நிலையில். இயக்குகின்றது.
அப்படி உயிர் இயக்குவது போன்று, உணர்வுகளை உயிரைப்
போன்றே, ஒளியாக மாற்ற வேண்டும்.
நாம் கட்டைகளை எரித்து, அதன் சக்தியை மற்ற ஆக்கப்பணிகளுக்குப்
பயன்படுத்தி, இரும்பையோ, மற்றவைகளையோ உருக்குகின்றோம்.
அதைப்
போன்று, நம் உடலை உருவாக்கிய
இந்த உணர்வைக் கட்டையாக வைத்து, அந்த மெய் ஒளியின் அருள் ஒளியை நமக்குள்
கூட்டி, சிறுகச் சிறுக இந்த உணர்வின் சக்தியை, இந்த உயிராத்மாவில் மாற்ற வேண்டும்.
அப்படி மாற்றிச் சென்றபின்,
விண்ணிலே தோன்றக் கூடிய கடும் விஷமானாலும்
அதனின் சக்தியை ஒளியாகத் தனக்குள் கூட்டி,
ஒளியின் சிகரமாக விண்ணிலே தோன்றச் செய்வதுதான் “மனிதனின் கடைசி முதிர்வு நிலை”.
ஏனென்றால், இந்த மனித உடலுக்குள் நின்று, அந்த
உணர்வின் சக்தியை நாம் சிருஷ்டிக்கும் வன்மை மிக்கதாக நாம் செயலாக்க வேண்டும். அவ்வாறு
செயலாக்கப்படச் செய்யக்கூடிய இந்த நிலைகளுக்குத்தான், நாம் இருக்கும் இந்த தியானத்தின்
வழி.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும்
என்று நீங்கள் ஏங்கும் பொழுது, அந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் கூட்டி, அதைச் சிறுகச்
சிறுக உங்களுக்குள் ஞானமாகக் கூட்ட உங்களையறியாமல் செயல்படுத்தச் செய்யும் உணர்வுகளை
மாற்றி, வாழ்க்கையிலே மகிழச் செய்யும் இந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பெருக்கச்
செய்கின்றோம்.
சாமி சொல்வது அர்த்தமாகவில்லையே என்று
நீங்கள் இருக்க வேண்டாம்.
“சாமி
சொல்வதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்ற ஏக்கத்தில் இருந்தால் போதும். இந்த உணர்வின்
ஆற்றல் உங்களுக்குள் பதிவாகி விடுகின்றது.
பதிவான உணர்வை நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக்
கொள்ள, தியானமும், தீமைகள் வரும் பொழுதெல்லாம் ஆத்ம சுத்தியும் செய்து வந்தாலே போதுமானது.
அந்த மகரிஷிகள்
சென்றடைந்த எல்லையை நாம் அனைவரும் எளிதில் அடையலாம். எமது அருளாசிகள்.