ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 6, 2013

பிள்ளைகளை எண்ணி, வேதனைப்பட்டு இறக்கும் உயிரான்மாவின் நிலை

நாம் நமது வாழ்க்கைக் காலத்தில், இயற்கையின் இயக்க உண்மைகளை அறிந்து கொள்தல் வேண்டும். ஒரு செடியில் விளைந்த சத்தினை சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து, நமது பரமான பூமியில் பரமாத்மாவாக மாற்றியுள்ளது.

அதே செடியின் வித்தை எடுத்து நிலத்தில் ஊன்றினால், அந்த வித்து புவியின் ஈர்ப்பு துணை கொண்டு, பரமான பூமியில் பரமாத்மாவாக மாறியுள்ள தன் தாய் செடியின் சத்தைக் கவர்ந்து, நுகர்ந்து, அதே உணர்வு கொண்டு, அதே செடியாக வளர்ந்து, தன் இனத்தின் வித்தை உருவாக்குகின்றது.

இதே போன்று ஒரு மனிதர், தான் நோய்வாய்ப்படும் போது
தன் மகன் மேல் பற்று வைத்து, அந்த மகனும்
தன் தந்தையின் மீது பற்று வைத்தால்,
இவ்வேதனையின் உணர்வுகள் மகனிடத்தில் விளைந்து, அதிகமாகும்.
தந்தையின் உணர்வு மகனிடத்தில் விளைந்தபின், தந்தையின் உயிரான்மா தன் உடலைவிட்டு வெளியே சென்றபின், தனது மகனின் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

இதன் தொடர் கொண்டு மகனுடைய உடலில் புகுந்து கொண்ட தந்தையின் உயிரான்மா, மகனின் உடலில் வேதனையின் விஷத்தன்மையை அதிகமாக உருவாக்கி, மகனின் சிந்தனையை மாற்றி விடுகின்றது.

இந்நிலையில், தந்தை தான் உயிரோடு வாழும் காலத்தில்,
தன் மகன் சொத்துகளைக் காப்பாற்றுவானா,
ஏமாற்றும் உலகத்தில் வாழ்கிறானே,
என்ன செய்யப் போகிறானோ
என்ற குழப்பத்தின் உணர்வுகளைத் தன்னுள் வளர்த்துக் கொண்ட நிலையில் இருந்தவரென்றால், உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆன்மா, தன் மகனின் உடலில் வாழும் காலத்தில், இதே குழப்ப உணர்வுகளைத் தூண்டி, மகன் சொத்துக்களைக் காப்பாற்ற முடியாத நிலையினை உருவாக்குகின்றது.

இப்படி மகன் தன் சிந்தனையை இழந்து, தன் சொத்துக்களை எல்லாம் இழந்து, நோய்வாய்ப்பட்டு, தன் உடலைக் காக்கும் திறனையும் இழந்து, செயலாக்கங்கள் குன்றப்பட்ட நிலையில் வாழ்கின்றான். பின், இதே உணர்வை வளர்த்து உடலை விட்டு பிரிந்து செல்லும் உயிரான்மா, பரமாத்மாவில் கலந்து ஐக்கியமாகி விடுகின்றது.

நாம் வயதான நிலையில், நோயில் இருக்கும் பொழுது வேதனை தாங்காத நிலையில்,
என்னைக் கொண்டு போய்விடு,
பரமாத்மாவில் ஐக்கியமாகி விடுஎன்று சொல்வோம்.

பரம் என்பது நமது பூமி. இதனின் ஆத்மாவில் வந்து ஐக்கியமாகி விடுகின்றோம். பரமாத்மாவில் ஐக்கியமானபின் என்னவாகின்றது? நமது ஆன்மாவில் எதனின் உணர்வுகளைச் சேர்த்திருந்தோமோ,
அதே போன்ற இன்னொரு ஜீவ ஆன்மா (உடல்) இருந்தால்,
அதனின் ஈர்ப்பிற்குள் சென்று விடுகின்றது.

பின், அதனின் உணர்வைக் கவர்ந்து, கவர்ந்த உணர்வுக்கொப்ப உடல் பெறுகின்றது என்பதை, நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.