ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 3, 2013

சிவன் இராத்திரி

 உதாரணமாக, ஓர் உயிரணு தன் உணர்வின் சத்தை, அதாவது ஒரு கடலைச் செடியின் சத்தை, அந்த உணர்வின் சத்தாக உயிர் தனக்குள் எடுத்து உடலானலும், அந்த நிலையை நாம் புரிந்து கொள்வதற்கு, சிவன் ராத்திரி என்று கொண்டாடுகின்றோம். ஆக, மாதத்தில் ஒரு சிவன் ராத்திரி வருகின்றது.

ஒரு உயிரணு, தாவர இனத்தை நுகர்ந்து உடலாகும் பொழுது, அந்த உடலுக்குள்  இந்த உயிரின் ஒளி மறைந்து, அது  உடலின் இயக்கத் துடிப்பாக மாறுகின்றது.
 
அதனால்தான், அந்த நாள் சிவன் ராத்திரி. ஆகவே, நாம் உடல் பெற்ற நாளை அறிந்து கொள்வதற்காகத் தான், சிவன் ராத்திரி என்று பெயர் வைத்துள்ளனர்.

நாம் ஒவ்வொரு சமயமும், நம்முள் தீமையின் நிலைகள் உட்புகாதவாறு, விழித்திருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்காக, மகா சிவன்ராத்திரி அன்று விழித்திருக்க வேண்டும் என்று ஞானிகள் உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.

சிவன்ராத்திரி அன்று, இரவு விழித்திருக்கும் வேளையில்,
விடிய விடிய, எத்தனை பேரை நினைவுக்கு கொண்டு வரமுடியுமோ,
அவர்களை எல்லாம் நினைவுக்கு கொண்டு வந்து,
அவர்கள் அனைவரும்
மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
என்று, எண்ணி ஏங்க வேண்டும்.

அதன்பின், அதிகாலையில் துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் என்று இந்த எண்ணத்தை, நம்முள் அதிகமாகச் செலுத்த வேண்டும். இதுதான், சிவன்ராத்திரி அன்றைக்கு விழித்திரு  என்பதன் நோக்கங்கள்.
மனிதன் தன்னைப் பண்படுத்திடவும்,
பண்படுத்தப்பட்ட உணர்வுகளை,  அவன் தனக்குள் சேர்த்திடவும்,
தீமைகளின் உணர்வுகளை அடக்கிடவும்,
மகரிஷிகளின் அருளுணர்வுகளை,  தனக்குள் சேர்த்திடல் வேண்டும்.
காலையில், துருவ நட்சத்திரத்திலிருந்து புவிக்கு வரும், அருளாற்றல்களை உங்களைப் பெறச் செய்வதற்கு, அருள் ஞானிகள் உங்களை நல்வழிப்படுத்துகின்றனர்.

எந்த மதமானாலும், காலையில்  4½ மணியிலிருந்து 6 மணிக்குள், ஆலயமணிகளின் ஒலிகளை எழுப்பி,  உங்களை ஆலயங்களுக்கு அழைக்கின்றனர். 

ஆனால், ஆலயங்களுக்குச் சென்றபின், தன் தன் ஆசைகளைத் தான் கூட்டுகின்றனர். ஆண்டவன், எங்கேயோ இருக்கின்றான். அவனை வேண்டினோம் என்றால், அவன் நமக்குக் கொடுப்பான், என்ற இந்த உணர்வைத்தான் வளர்த்திருக்கின்றோம்.

நீங்கள் எந்த ஆலயத்திற்குச் சென்று,
ஆண்டவனை வணங்கினாலும், 
உங்களிடத்திலுள்ள தீமைகளை அகற்றி,
அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உங்களிடத்தில் சேர்க்காது, எந்தவொரு வேண்டுதலும் பயனளிக்காது.

ஆகவே, துருவ தியான நேரத்தில், நல்லுணர்வின் தன்மையைக் கருவாக்கிக் கொள்ளவேண்டும். ஆலயங்களுக்குச் சென்றால், மகரிஷிகளின் அருள் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படரவேண்டும் இந்த ஆலயத்திற்கு வரும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.