ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 8, 2013

சாதாரண மக்களையும் பிறவியில்லா நிலை அடையச் செய்யும் - ஆலயப்பண்புகள்

1. அன்றைய அரசர்கள், நம்மை  மெய்யை  அறியவிடாதபடி தடைப்படுத்திவிட்டார்கள்
அன்றைய அரசர்கள் எப்படித் தவறு செய்தார்கள். அரசர் காலங்களில், மக்களை சூனியமாக்கி வைத்திருந்தார்கள்.
வேறொன்றும் வேண்டியதில்லை.
யாகம் செய், பாவம் போய்விடும்,
அர்ச்சனை செய், கஷ்டம் போய்விடும் என்று வழிப்படுத்தி,
உண்மையின் இயக்கத்தின் நிலையை நாம் அறியவே முடியாதபடி தடைப்படுத்திவிட்டார்கள். இதன் தொடர்கொண்டு, உண்மையை நாம் மறந்தே விட்டோம். பொய்யை நம்பிவிட்டோம்.

கோயிலுக்கு நாம் பக்தியுடன் சென்று, நான் எண்ணியது நடக்கவில்லை,
என்னை இப்படிச் சோதிக்கின்றாயே,
கஷ்டம் தாங்க முடியவில்லை
என்னை உன் இடத்திற்கே கூட்டிக்கொண்டு போ
என்றெல்லாம் கோயிலில் போய் வேண்டுவார்கள்.

இதே பக்தி கொண்டு வணங்கும் பொழுது, இதே பக்தி கொண்டு உடலை விட்டு பிரிந்து சென்ற பிறிதொரு ஆன்மா இவர்கள், உடலில் புகுந்து கொண்டு, ஆட ஆரம்பித்துவிடும்,
ஆக, ஆவியின் தன்மைதான் நமக்குள் வருகின்றது.
இப்படித்தான், நாம் இயங்கிக்கொண்டிருக்கின்றோம்.
2. சாதாரண மக்களை பிறவியில்லா நிலை அடையச் செய்யும் “ஆலயப்பண்புகள்”
ஆனால், மெய்ஞானிகள் காண்பித்த உண்மை நிலை என்ன?
மனிதர்களிடம் இருக்கக்கூடிய குணத்தின் சக்தியை,
சிலையாக உருவாக்கினார்கள்.
சிலையின் தலையில் வைரக் கிரீடம் வைத்து,
தங்க ஆபரணங்களைப் போட்டு,
மலர் மாலைகளைப் போட்டு,
பதார்த்தங்களை வைத்து,
இருட்டறையில் வைத்து திரையைப்போட்டு, மூடி,
நாம் இங்கிருந்து போனதும் திரையை நீக்கி
தீபாராதனை காண்பிப்பார்கள்.

இதன் பொருள் என்னவென்றால், திரையை நீக்கி, தீபாராதனை காண்பிக்கப்படும் பொழுது இருளில் இருக்கும் பொருள் தெரிகின்றது.
ஆகவே, இதைப் போன்று நாங்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்என்று இந்த உணர்வை நம்முள் அபிசேகிக்க வேண்டும்.

இந்த உணர்வை நம்முள் எடுக்கும் பொழுது, இந்த உணர்வின் ஒலிகள், உணர்ச்சிகள் உடல் முழுவதும் படர்கின்றது. விஷ்ணுவின் கையில் என்ன இருக்கின்றது சங்கும், சக்கரமும்.
நம்முள் இதனின் உணர்வின் ஒலி ஆனபின், இந்த உணர்வின் அதிர்வுகள், நமது உடல் முழுவதும் சக்கரம் போன்று சுழல்கின்றது. நமது உயிர் எப்படி இயக்குகின்றது? என்பதை அங்கே தெளிவாகக் காண்பிக்கிறார்கள்.

நாங்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்,
இந்த ஆலயம் வருவோரெல்லாம், பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்.
ங்கள் குடும்பத்திலுள்ளோர், பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்.
நாங்கள் தொழில் செய்யும் இடங்களிலுள்ளோர் அனைவரும், பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று நாம் நுகரவேண்டும்.

அப்படி நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தையும், நமது உயிர் ஓம் நமச்சிவாயஎன்று உணர்வின் அணுவாக மாற்றி, நமது உடலாக மாற்றிக் கொண்டேயிருக்கும். ஆகவே,
நாம் எதை நமது உடலாக்க வேண்டும்?
எதைப் பிரணவமாக்க வேண்டும்? என்று
ஆலயத்தின் பண்புகள்
இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆக, பக்தி என்பது எது? கீதையில், நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்றுரைக்கப்படுகின்றது. அதாவது, யாம் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது, இதனின் உணர்வின் அணுவாக எமக்குள் மாறுகின்றது.

கீதையைச் சொல்வது யார்? கண்ணன். அதாவது, நாம் ஒரு மனிதரைப் பார்க்கின்றோம், அவர் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம். இதனின் உணர்வின் தன்மை நம்முள் இணைந்து, நம்மை உயர்த்துகின்றது. நமது சொல் அவரை உயர்த்தப் பயன்படுகின்றது.

இப்படி இங்கே கண்ணின் இயக்கங்களுக்கு, இவ்வளவு பெரிய தத்துவத்தைக் கொடுக்கின்றார்கள். கோயிலைச் சாதாரணமாக நினைக்கின்றோம். ஆனால் நம்முடைய ஒழுக்கப் பண்பாடுகளை வளர்ப்பதற்கு எவ்வளவு தெளிவாகச் செய்துள்ளார்கள் ஞானிகள்.

சாதாரண மனிதர்களும் பிறவியில்லா நிலை பெறவேண்டும், அகஸ்தியர்  கண்டுணர்ந்த உண்மையின் உணர்வைப் பெறவேண்டும் என்ற நிலைக்காக வேண்டி, ஞானிகள் காவியங்களையும், ஆலயங்களையும் படைத்தார்கள்.

இயற்கையின் இயக்க உண்மைகளை அறிந்தவர்கள் நீங்கள் இனி, அர்ச்சனை, அபிஷேகம், யாகம் செய்து, பாவத்தைப் போக்க வேண்டும் என்று நினைத்துப் போய் விடாதீர்கள்.
3. ஞானகுரு காட்டும் உண்மையான யாகம்
உண்மையான யாகம் எது?
உண்மையான யாகம் என்பது,
நமது உயிர் ஒரு நெருப்பு,
நாம் எந்த உணர்வின் தன்மையினை
நமது உயிரான நெருப்பில் போடுகின்றோமோ,
இதனின் உணர்வலைகளை நமது உயிர்,
உடல் முழுவதும் பரப்பும்.
உணர்வின் சொல்லாக வரப்படும் பொழுது,
பிறருடைய நிலைகளை இயக்கும்.

நீங்கள் ஒருவர் மீது, மயக்கப் பொடியைப் போட்டால் மயங்கி விடுகிறார். நல்ல நறுமணத்தைக் கொடுத்தால், மகிழ்ச்சி ஆகின்றார். நல்ல உணர்வின் தன்மையை, சொல்லாகச் சொல்லப்படும் பொழுது, கேட்போர் உணர்வுகளை இனிமை படச்செய்கின்றது.
நமக்குள் நட்பு என்ற நிலை வளர்கின்றது.
பகைமை என்ற நிலைகளை மாற்றுகின்றது.
அருளுணர்வை நமக்குள் கூட்டுகின்றது.
ஆகவே, கோயில்களை நாம் மதித்திட வேண்டும்.

நமது உடல் தான் கோயில் ஒவ்வொரு உயிரும் கடவுள். உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து, உங்கள் உடலை ஆலயமாக மதித்து, நீங்கள் அருள்சக்தி பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும், உங்களுடைய ஆன்மா பரிசுத்தமாக வேண்டும் என்று, எமது குருநாதர் காண்பித்த அருள்வழியில் யாம் உபதேசிக்கின்றோம்.
இதனால், உங்களிடத்தில் அருளுணர்வும் பெருகுகின்றது. அருள் ஒளி பெருகுகின்றது. உங்களுடைய ஈசனான உயிர் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாகின்றது.

இப்படி இதனின் உணர்வுகளை உங்களிடத்தில் எழுப்பி உங்களுடைய ஆன்மாவைச் சுத்தப்படுத்தி, எமது ஆன்மாவையும் யாம் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.

சூரியன் பல உணர்வுகளை எடுத்து, ஒளியாக மாற்றுகின்றது. இதுபோன்று, உயிரானது தோன்றி தன்னுள் உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டபின், துருவ நட்சத்திரமாக இருக்கின்றது. மனிதரிடம் உள்ள ஆறாவது அறிவு ஏழாவது நிலை ஆகும் போது, சப்தரிஷி மண்டலம் ஆகின்றது. அதனால்தான்
சூரியனிடமிருந்து வரக்கூடிய கலர்கள் ஆறு,
ஏழாவது ஒளி,
மனிதருடைய அறிவு ஆறு,
தன் உணர்வின் தன்மை அறிந்து எடுப்பது ஏழு.
இதைத்தான், ஈரேழு லோகத்தையும் வென்றவன், விண் செல்கின்றான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.