ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 20, 2013

குரு கொடுக்கும் வாக்கை, நாம் செயல்படுத்த வேண்டிய முறை

குருநாதர் காட்டிய அருள்வழி கொண்டு, யாம் இன்னும் அறிந்து கொண்டே இருக்கின்றோம். எம்மை எத்தனையோ நிலைகள் கொண்டு, பல பேர் சந்திக்க வருகின்றார்கள்.

அப்படி வருகின்றவர்களில், நோய் உள்ளவர்களுக்கு யாம் ஆசீர்வதித்து, உங்களுக்கு இப்பொழுது நோய் இல்லை, நீங்கள் போங்கள் என்று சொன்னால், நான் படும் அவஸ்தை எனக்கல்லவா தெரியும்என்கிறார்கள்.

இனி நோயெல்லாம் நீங்கிப் போகும்என்று
யாம் அவர்களிடம் சொன்னால்,
இல்லைங்க, என் தொல்லை என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறதுஎன்று சொல்கின்றார்கள்.

தபோவனத்தில் ஒரு சமயம், ஒரு அம்மா எம்மிடம் இதைப் போன்று கேட்டுக் கொண்டிருந்தது. பின், எம்மிடம்நான் இங்கே வந்தால் நன்றாக இருக்கின்றது. என் வீட்டிற்குப் போனால், பழையபடித் தொல்லையாக இருக்கின்றதுஎன்றார்கள்.

யாம் அவரிடம், நீங்கள் வீட்டுக்குப் போனாலும், இதே போன்றே ஆத்ம சுத்தி செய்து, “நோய் இல்லைஎன்று நல்லதாக எண்ணுங்கள் என்று சொல்லுகிறோம்.
ஆனால், என் வீட்டுக்குப் போனால், “என் தொல்லை என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது”, என்று இறுக்கிப் பிடித்துக் கொண்டு விடுகின்றார்கள்.

நோய் இல்லை, நீங்கள் போங்கள் என்ற நல்ல வாக்கினைக் கொடுத்து, தியானத்தைப் பின்பற்றுங்கள் என்று சொன்னால், அதைக் கேட்பார் யாரும் இல்லை.
சாமிக்கென்ன தெரியும்?
நான் படும் அவஸ்தை எனக்கல்லவா தெரியும் என்கிறார்கள்.

ஆனால், இவர்களைத் திட்டுபவர்களை மட்டும் மனதில் எண்ணி, இரு உன்னைப் பார்க்கிறேன், உன் குடும்பத்தைத் தொலைத்துக் கட்டுகிறேன் என்று அதை இறுக்கிப் பிடித்துக் கொள்வார்கள்.
ஆக, அவர்களை இவர்கள் தொலைத்துக் கட்டுவதற்கு முன்னால்,
இவர்கள் எண்ணிய உணர்வுகள் உடலுக்குள் புகுந்து,
இவர்கள் உடலையே தொலைத்துக் கட்டுகிறது என்பதை,
மறந்து விடுகின்றார்கள்.

சில வீடுகளில் பாருங்கள். கொஞ்சம் சுருக் என்று சொன்னால், இவனை விட்டுவிடுவதா?, இவன் எப்படிப் பேசுகிறான் பார் என்று வாயில் வந்ததையெல்லாம் பேசுவார்கள். நீ இப்படிப் போய்விடுவாய், அந்த மாதிரிப் போய்விடுவாய் என்று பேசுவார்கள்.

அப்படிப் பேசுபவர்களிடத்தில் பார்த்தோம் என்றால், உடல் வலி, கை கால் குடைச்சல், கண் எரிச்சல், தலை வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, கால் வலி, எல்லா வலியும் இருக்கும். ஆக, இது பேசிவர்களுக்கு.

இதையெல்லாம் பேசாமல், வேடிக்கையாக பொழுது போகாமல் பார்த்துக் கொண்டிருந்தவுடனே, இப்படிப் பேசுகின்றார்களே பாவி, என்று சண்டை போடுபவர்களைப் பார்த்து, பொல்லாதவர்களை எண்ணுவது. அதே சமயத்தில், நல்லவர்களைப் பார்த்து, இப்படி இருக்கின்றதே, இங்கே இரக்கமும், அங்கே ஆத்திரமும், இரண்டும் எடுத்துவிடுகின்றோம். இது வந்தவுடன் அம்மம்மா.. வயிறு எல்லாம் எரியுதே, என்பார்கள். அவர்களுக்கு இந்த நோய் வரும்.

நாம் நல்லவர்கள்தான், ஆனால் இந்த மாதிரி, என்ன செய்கிறார்கள் என்று பார்க்கும் பொழுது, என் குடலை முட்டுதே, எப்படியோ ஆகின்றதே? நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே, என்னை ஆண்டவன் இப்படிச் சோதிக்கின்றானே? நான் வணங்கும் தெய்வமும், இப்படிச் செய்கின்றதே, என்று இதைத்தான் எடுத்து, நமக்குள் கூட்டிக் கொள்கின்றோமே தவிர,
தெய்வம் எங்கு இருக்கின்றது?
எந்த ரூபத்தில் இருக்கின்றது? என்பதனை
மகா ஞானிகள் காட்டியதை, உணரும் பக்குவம் இல்லை.

இதனை, வியாசக பகவான் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். நாம் எதை எதையெல்லாம் எண்ணுகின்றோமோ, அந்த எண்ணத்தை உயிர் ஜீவனாக்கச் செய்கின்றது. என்று எண்ணிய உணர்வின் சத்து ம் என உடலாக சிவனாக ஆக்குகின்றது. இதுவே, ஓம் நமச் சிவாய,

நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ, அந்த உணர்வின் சத்து இறையாகி, அந்த உணர்வின் சத்து இறையாகி, இறைவனாகுகின்றது.
அந்த இறையின் சக்தி, நமது உடலுக்குள் இணையப்படும் பொழுது,
இறையாகி, இறைவன் ஆகி,                                                      
நமக்குள் செயலாக்கும் பொழுது, தெய்வமாகின்றது.

நாம் எந்தெந்த குணங்களை எண்ணுகின்றோமோ, அந்தக் குணங்களே தெய்வமாக நின்று, நம்மைச் செயல்படுத்துகின்றது.

கோப குணம் என்பது காளி”. கோப உணர்வுகள் நாம் எண்ணியதைக் காத்திடும் நிலையும், நமக்குள் ஆத்திரத்தையும், அவனைத் தொலைத்துக் கட்டிவிடுகிறேன் பார் என்ற உணர்வையும் எடுக்கின்றது.

நாம் தொலைத்துக் கட்டுகிறேன் என்று எண்ணும் பொழுது, அந்தத் தொலைத்துக் கட்டும் உணர்வுகள், நமது நல்ல குணத்தை நமக்குள்ளே தொலைத்துக் கட்டி, அந்தக் காளியின் ரூபமாக நமக்குள் கொதிப்படைந்து, இரத்தக் கொதிப்பாக மாற்றி, என்னால் முடியவில்லையே, தலை சுற்றுகிறதே என்ற நிலை வருகிறது.

கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ, அதுவாகின்றாய் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டப்படுகின்றது.  ஆகவே, நாம் எதுவாக ஆக வேண்டும்?  சற்று,  சிந்தித்துப் பாருங்கள்.

நம் குரு காட்டிய அருள் வழியில் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி, அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி, நம் உயிரான ஈசனை மதித்து, எல்லோருடைய உயிரையும் ஈசனாக மதித்து, அருள் வழியில் வாழ்வோம்.
என்றும் உயிரோடு ஒன்றி,
அவனுடன் இணைந்து,
அவனாக மாறி,
பிறவியில்லா நிலை என்ற நிலையை எல்லோரும் அடைவோம்.  எமது அருளாசிகள்.