ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 6, 2013

பாற்கடலைக் கடைந்தான் நாராயணன் - பூமி சுழலும் நிலை

1.  பாற்கடலைக் கடைந்தான் நாராயணன்
வியாசர், தமது உணர்வுக்குள் நுகர்ந்தறிந்த உண்மைகளை, உணர்வுகளாக வெளிப்படுத்தும் பொழுது, அவைகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, அலைகளாகப் படரச் செய்கின்றது என்பதை, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் தெளிவுபடுத்துகின்றார்.

அவ்வாறு வியாசர் அறிந்து வெளியிட்ட நிலைகளில் ஒன்று,
மேரு என்ற மலையை மத்தாக வைத்து,
வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து,
பாற்கடலைக் கடைந்தான் நாராயணன்என்பது.

மேருமலைஎன்பது, சிறு சிறு அணுக்கள் ஒன்று சேர்ந்து, மலை போல உருவான, நமது பூமியைக் குறிப்பது. சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பகாந்தம்அல்ட்ரா வயலட்என்ற நஞ்சினைக் கவர்கின்றது.

இதில் இயக்கச் சக்தியாக இருப்பது, விஷம். வெப்பம் என்பது பராசக்தி, காந்தம் என்பது லட்சுமி என்று பெயரை வைத்து, “உருவாக்கும் திறன் கொண்டது வெப்பம், தனக்குள் அணைத்து வளர்க்கும் சக்தி கொண்டது காந்தம் என்று வியாசர் உணர்த்தினார்.

வியாசரின் உணர்வுக்குள் தோன்றிய நிலைகள், அவர் உணர்வுக்குள் விளைந்த நிலைகள் போன்றவற்றிற்கு, அதற்கேற்ப, ஒவ்வொரு பெயரை வைத்து வெளியிட்ட உணர்வுகளை, சூரியனின் காந்த சக்தி கவர்ந்து எவ்வாறு அலைகளாக இருக்கின்றது, என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்துகின்றார்

மேலும், வெப்பகாந்தமானது, சூரியனிலிருந்து கடந்து வரப்படும்போது, சூரியனின் வெப்பத்தால், அதனுடன் கலந்துள்ள நஞ்சானது பிரிக்கப்பட்டு, சூரியனுக்குப் புறநிலைகளில், அவைகள் சுழன்று கொண்டிருக்கின்றது.

சூரியனின் காந்த சக்தி வெளிப்படும்போது,
அந்த அல்ட்ரா வயலட்டில் இருக்கும் காந்தம்,
அது அனைத்தும் பிரபஞ்சத்தில் மிதந்தாலும்,
அது வரும் பாதையில், மற்ற கோள்கள் உமிழ்த்தும்
உணர்வினைத் தனக்குள் எடுத்து,
அலைகளாகப் படர்ந்து கொண்டிருக்கும் அணுக்கள், பல ஒன்று சேர்ந்து, ஒரு மலைபோல உருவானது.

இந்த நிலையை உணர்த்துவதற்குத்தான், மேரு என்ற மலையை மத்தாக வைத்து, வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து, பாற்கடலைக் கடைந்தான் நாராயணன், என்பது.

ஆக, வாசுகி என்ற பாம்பைப் போன்ற இந்தக் காந்தப்புலன்கள், ஒன்றுக்கொன்று இணையாக இயங்கி, நமது பூமியைச் சுழலச் செய்கின்றது. உதாரணமாக,
காந்தக் கட்டைகளை, வெவ்வேறு இடைவெளிவிட்டு வைத்து,
நீரின் வேகத்தினை அதன்மீது செலுத்தி,
அதனைச் சுழலச் செய்கின்ற பொழுது,
அது தனது காந்தத்தின் துணைகொண்டு,
காற்றில் படர்ந்திருப்பதைக் கவர்ந்து,
கவர்ந்த நிலைகள் கொண்டு,
மற்ற மோட்டார்களை இயக்கச் செய்கின்றது.

அவ்வாறு இயங்கச் செய்வது போன்று, இந்தக் காந்த அணுக்கள் கலந்த உணர்வின் சத்து, மலை போலக் குவிந்து ஒரு பூமியாக ஆனாலும், இந்தக் காந்தப்புலன்கள் உராயப்படும் பொழுதுதான், இந்தப் பூமியே சுழற்சியின் தன்மையை அடைகின்றது என்று வியாசர் கண்டுணர்ந்தார்.

மேருமலை என்ற நம் பூமியானது, விஷம் மற்றும் காந்தத்தின் தன்மையால், சுழற்சியினைப் பெறுகின்றது.

பாற்கடல் எனும் இப்பிரபஞ்சத்தில், இப்பூமி சுழலும் வேகத்தில், தனது உணர்வின் சக்திகளைக் கவர்ந்து, பாறைகளையும், மற்றவைகளையும் உருவாக்கி, அந்த உணர்வின் சத்து ஆவியாகும்போது, தாவர இனங்களாக உருப்பெற்று, உயிரணுக்கள் எந்தெந்தத் தாவர இனங்களின் சத்தை நுகர்கின்றதோ, அதனின் உணர்வுக்கொப்ப உடல் பெறுகின்றன.
2. நீலகண்டன்
மேருமலை என்ற பூமியானது, வாசுகி என்ற பாம்பால் சுழற்றப்படும்போது, பாற்கடல் எனும் பிரபஞ்சத்திலிருந்து, தனது சத்தை ஈர்த்துக் கொள்கின்றது. அவ்வாறு விழுங்கிய நிலைகள் சூட்சம சக்தியாக, நமது பூமியின் வடதுருவத்தில் உறைகின்றன.

நம் பூமி உறைபடும் நிலைதான் சிவம். இந்தச் சிவத்துக்குள், மிகவும் உறையும் தன்மை கொண்ட, இந்தப் பனிப்பாறைகள் இருக்கும் இடத்தை நீலகண்டா”, என்று பெயரை வைக்கின்றார்கள்.

பூமி, விண்வெளியில் இருக்கும் தனது சக்தியைத் தனக்குள் கவர்ந்து கொள்ளும் இந்த உண்மையை உணர்த்துவதற்குத்தான், சிவன் விஷத்தைத் தனது கழுத்தில் நிறுத்திக் கொண்டான், என்று காவியப் படைப்பில் கூறினார்.
துருவப் பகுதியில் உறைந்த பனியானது,
பூமி சுழலும் வேகத்தில் உண்டாகும் வெப்பத்தினால் கரைக்கப்பட்டு,
கடலில் கரைக்கச் செய்யப்படுகின்றது.
அதனின் ஆவியின் தன்மை கொண்டு,
பூமியில் பல உணர்வுகளை அது எவ்வாறு உருவாக்குகின்றது?
என்பதையும் வியாசர் அங்கே உணர்த்துகின்றார்.

இதையே பிற்காலத்தவர்கள் காவியமாகத் தீட்டி, இயற்கையின் செயலைப் படமாக வரைந்து, சிவனைக் காட்டி, சிவன் உலக நன்மையைக் கருதி, ஆலகால விஷத்தை உண்டு, தன் கழுத்திலே நிறுத்திக் கொண்டான் என்று எடுத்துரைக்கின்றனர்.

உயிரணுக்கள், அவ்வாறு நம் பூமி கடைந்த, அந்தச் சத்தினை விழுங்கிய நிலைகள் கொண்டு, அது அது, அதனதன் உணர்வுக்கொப்ப உடலமைப்பைப் பெற்றன என்ற நிலையும், மற்றும் அவர் கண்டுணர்ந்த பிற உண்மை நிலைகளையும், அவருடைய காலத்தில் வாழ்ந்த நிலைகளுக்கேற்ப வெளிப்படுத்தினார், வியாசக பகவான்.