1. பெரிய பாம்பு போடப்பட்டதன் உண்மை
“பரமபதம்” என்ற ஒரு விளையாட்டை
நமது ஞானிகள் உருவாக்கி, அதில் மனிதர் பெற வேண்டிய, உயர்ந்த நிலை எது? மனிதர்களின்
எண்ணத்தால் அவர்களுக்கு உண்டாகின்ற உயர்வுகளும், தாழ்வுகளும் தரும் பலன் என்ன? போன்றவைகளை
அதில் உணர்த்தியுள்ளார்கள்.
இவ்வாறு, நாம் விளையாடும்
விளையாட்டுக்களில் கூட, நாம் மெய்ஞானத்தைப் பெறும் வண்ணம், அன்று மகாஞானிகள் உண்மையின் தத்துவத்தை, நாம் அறிந்து
செயல்படும் விதமாக எளிமைப் படுத்தியிருந்தனர்.
தாயக்கட்டையை உருட்டி, விழுகின்ற எண்ணுக்கேற்பக் காயை நகர்த்தும்
பொழுது, அங்கே, ஏணியின் படம் இருந்தால் மேலே ஏறவும், பாம்புத் தலையின் படம் இருந்தால்,
காயைக் கீழே நகர்த்தவும் நாம் செய்கின்றோம். அதில் யானை, பூனை, நாய், பன்றி எனப் பலவிதமான
படங்கள் போடப்பட்டிற்கும்.
நாம் உயர்ந்த எண்ணங்களை
எண்ணுகிற பொழுது, ஏணியில் ஏறுவது போன்று உயர்ந்த நிலைகளை, நம் மனித வாழ்விலும், உயிரிலும்
பெறுகின்றோம்.
மாறாக, மனித வாழ்க்கையில் இன்னல்களினால் சோர்வுற்று, நமது உணர்வில்
நஞ்சைக் கலக்கின்ற பொழுது, பாம்பு கடித்துக் காய் கீழே போவது போன்று, நம் உயிராத்மா
கீழான பிறவிகளுக்குச் செல்கின்றது என்பதே, அவ்விளையாட்டின் மூலம் நமக்கு உணர்த்தப்பட்டது.
பரமபத விளையாட்டில் மேலும், மேலும் வெற்றி பெற்று, முன்னேறிச் சென்று
கொண்டிருக்கும் போது, வழியில் பெரிய பாம்பின் படம் போடப்பட்டிருக்கும். இவ்வளவு தூரம்
கஷ்டப்பட்டு வந்த பிறகு, அந்தப் பெரிய பாம்பிடம் தப்பித்தால்தான் உண்டு. இல்லையென்றால்,
ஆரம்பித்த இடத்திற்கே, கொண்டு போய்ச் சேர்ப்பித்துவிடும்.
இவ்வாறு விளையாட்டு அமைக்கப்பட்டதற்கு
காரணம், நமது உணர்வின் எண்ணத்தால் நாம் உயர்ந்து வந்து கொண்டிருக்கும் பொழுது, சிறிது ஆணவத்துடன் நாம் செயல்பட
ஆரம்பித்தோம் என்றால், அந்த ஆணவம், நம்மை எங்கு கொண்டு போய்ச் சேர்க்கும்? என்பதை
உணர்த்துவதற்கே,
பரமபத விளையாட்டில், பெரிய பாம்பின் படம் போடப்பட்டது.
உதாரணமாக, எம்மைக் காட்டுக்கு அழைத்துச் சென்ற குருதேவர், எமது
சுட்டுவிரலைக் காண்பித்தால் போதும் பெரிய மரத்தையே சாய்க்கும் வல்லமை எமக்கு கொடுத்திருக்கின்றார்,
அந்த ஆணவம் கொண்டு, பிறிதொரு மனிதரை வீழ்த்துவோம் என்ற எண்ணம் கொண்டு,
யாம் செயல்பட ஆரம்பித்தோமானால், அந்த ஆணவம் எம்மைக் கீழ்நிலைக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பித்து
விடும்.
ஆகவே, மனிதர் தாம் எவ்வளவு உயர்ந்த
நிலையைப் பெற்றிருந்தாலும், அவருடைய உணர்வில் சிறிதும் நஞ்சு கலக்காது
செயல்பட்டு வர வேண்டும் என்பதை உணர்த்துவதற்கே, பெரிய பாம்பின் படம் அந்தப் பரமபத விளையாட்டில், ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
அது போன்றே, விளையாட்டில் பெரிய பாம்பிடம் நாம் கடிப்பட்டால், கீழே
உள்ள பன்றியிடம் நம்மை கொண்டு போய்ச் சேர்ப்பிப்பதாக, அவ்விளையாட்டில் அமைக்கப்பட்டிருக்கும்.
அதற்குக் காரணம், பன்றியானது கெட்டதைப் பிளந்து, நல்ல உணர்வைத்
தனக்குள் நுகர்ந்து, மீண்டும் மனிதப் பிறவியை பெறும் தன்மை பெற்றது. அதனால்தான், இந்தப்
பரமபத விளையாட்டில், நாம் நம் வாழ்வில் தீமைகளை நீக்கி, நல் உணர்வுகளைப் பெறவேண்டும்
என்ற உண்மை, சொல்லப்பட்டது.
2. “மனிதன் விண் செல்ல முடியும்” என்று உணர்த்துவதற்கே பரமபத விளையாட்டு
எனவே நம் வாழ்வில், அருள் ஞானிகளின் உணர்வுடன் தொடர்பு
கொண்டு, வாழ்ந்து வந்தால், அது கெட்டதை விலக்கி, தம்மைக் காத்திடும் உணர்வாக விளைந்து,
நாம் விண் செல்ல முடியும்
என்பதை உணர்த்தவே, வைகுண்ட ஏகாதசியன்று பரமபதம் விளையாட்டு விளையாடுவதை, நமக்குப் பழக்கப்படுத்தி
வைத்தனர் ஞானிகள்.
நாமோ, வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுவதும் கண் விழித்துத் தாயம்
விளையாடினால், காலையில் ஆண்டவன் நம்மைச் சொர்க்கலோகத்திற்கு கொண்டு போவான், என்று நம்புகிறோம்.
ஆனால், எந்த ஆண்டவன் நம்மைச் சொர்க்கத்திற்கு கொண்டு போகிறான்? ஒவ்வொரு மாதமும், ஏதாவது
ஒரு விழாவினை வைத்து, உயர்ந்த நற்குணங்களை நாம் பெறவேண்டும், என்று காண்பிக்கப்பட்டது.
காலையில், வாசலில் நீர் தெளித்துக் கோலம் இடுவதற்கும்,
அங்கே பூக்களை வைப்பதற்கும் காரணம்,
வாசலைச் சுத்தப்படுத்துவது
போன்று, நமது மனதைச் சுத்தப்படுத்தி,
கோலங்களை எவ்வளவு அழகாகத்
தீட்டுகின்றோமோ
அது போன்று, நம் மனதை நல்
எண்ணங்களால் அழகுபடுத்தி,
பூவை வைப்பது போன்று
நம் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்க
வேண்டும்
என்ற அடிப்படையில்தான், இவைகளெல்லாம் அன்று ஞானிகளால் வழக்கப்படுத்தி
வைக்கப்பட்டது..
மனித வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக இருந்தாலும், அவற்றில் நன்மை
பெறும் சக்தியாக, நமது எண்ணங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், பண்பையும், ஒழுக்கத்தையும்
நமக்கு ஞானிகள் போதித்தனர்.
இவ்வாறு, அன்று ஞானிகள் நம் உயிராத்மா நிலைத்த ஒளிசரீரம் பெறச்
செய்யும் மெய்ஞானத்தைப் போதித்து, அதனுடன் இணைந்த பண்பையும், ஒழுக்கத்தையும் கற்றுக்
கொடுத்து, அவற்றைச் சாஸ்திரங்களாக, வாழ்க்கை நெறிகளாக உருவாக்கி, நம் வாழ்க்கையில்
கடைபிடிக்குமாறு பழக்கப்படுத்தி வைத்தனர்.
அன்று வாழ்ந்த மெய்ஞானிகள், மக்களுக்கு எது கிடைக்க வேண்டும் என்று
விரும்பினாரோ, அதைப் பெறுவதற்கு நீங்கள் பாடுபட வேண்டும். அந்த மெய்ஞானிகளின் வழியில்,
எமக்கு, நமது குருதேவர் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அவர்கள் கொடுத்த அருள்ஞான உபதேசங்களையும்,
மெய்ஞான ஆற்றல்களையும், உங்களுக்கு யாம் வழங்கி வருகிறோம்.
எனவே, இவ்வாழ்வில் பெறுதற்கரிய
மெய்ஞானத் தத்துவங்களை நீங்கள் அறிந்து, கடைப்பிடித்து, மகரிஷிகளின் அருளாற்றலை உங்களிடத்தில்
சேர்த்து, சப்தரிஷி
மண்டலத்தில் இணையும் ஆற்றலாக, உங்கள் ஆற்றல் வலுப் பெறவேண்டும் என, எமது ஆசிகளை உங்களுக்கு
வழங்குகிறோம்.