ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 7, 2013

நம் கண்கள் அதி சக்தி வாய்ந்த ஆன்டெனா (ANTENNA)

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு, எங்கிருந்தோ ஒளிப்பரப்புவதை வேறொரு இடத்தில், தொலைக்காட்சி பெட்டி (T.V.) அதைப் படமாகக் காட்டுகின்றது.

ஓரிடத்திலிருந்து அனுப்பப்படும் அலைகள்,
ஆன்டனாதுணை கொண்டு,
தொலைக்காட்சிப் பெட்டியில், அதற்கான
அலைவரிசை இணைப்பைக் கொடுக்கும் பொழுது,
அந்த ஆன்டனா, காற்றிலே இருப்பதைக் கவர்ந்து,
இங்கே படமாகக் காட்டுகின்றது.

இதைப் போன்றுதான், நமது உடலில், நம் கண்கள்ஆன்டனாவாகச் செயல்படுகின்றது.

நமக்குள் பல கோடி எண்ணங்களைப் பதித்து வைத்திருந்தாலும், நாம் எதை நினைக்கின்றோமா, அந்த உணர்வின் துணை கொண்டு, அது வீரியமடைந்து, அதன் நினைவின் அலையாக, நமக்குள் கண்ணுக்குள் தெரியாது, புலப்படாது, மறைந்திருக்கின்றது.

ஆக, கண் கருவிழிக்குத் தெரியவில்லையென்றாலும்,
கண்ணின் கருவிழியுடன் இணைந்துள்ள,
காந்தப் புலனின் நினைவின் எண்ண அலைகளை, அது கவர்ந்து,
அது மறைந்திருக்கும் உணர்வைக் கவர்ந்து,
நமது ஆன்மாவாக மாற்றி,
நம் உயிருடன் இணைந்து, சுவாசிக்கச் செய்து,
அந்த உணர்வின் நினைவலைகளை உணர்த்துகின்றது.

ஆகவே, எவ்வாறு அது இழுத்துக் கவர்வதை, நம் கண்ணால் பார்க்க முடிவதில்லையோ, இதைப் போன்றுதான், கண்ணின் கருவிழி பார்க்கவில்லை என்றால், கண்ணுடன் இணைந்த காந்தப் புலனறிவு, அதை, நாம் எண்ணியது எந்த உணர்வோ, அதனின் உணர்வைக் கவர்கின்றது.

அப்படிக் கவர்ந்து, ஆன்மாவாகிச் சுவாசிக்கும் பொழுது, உயிருடன் இணைந்து, அந்த உணர்வின் தன்மை, நமக்கு உட்புலனாகக் காட்டுகின்றது.

நாம் பிறர் செய்யும் தவறைக் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது, அந்த உணர்வைக் கவர்ந்து, நமது ஆன்மாவாக மாற்றுகின்றது. ஆக, இவ்வாறு ஆன்மாவாக மாற்றியதைத்தான், நரசிம்மன், மடிமீது அமர்த்தி, வாசல்படியில் அமர்ந்து, இரண்யனைக் கொன்றான் என்பது.

நம்முடைய கண்ணின் கூர்மையை, விண்ணை நோக்கிச் செலுத்தி, அதனின் உணர்வை வியாசகர் காட்டிய, அருள் நெறியில் நாம் எண்ண வேண்டும்.

அப்படி எண்ணினோம் என்றால், ஆண்டெனா, எவ்வாறு தொலைக்காட்சி பெட்டிக்குத் தேவையான அலைகளைக் கவர்ந்து இழுத்துக் கொடுக்கின்றதோ, இதைப்போன்று, நமக்குள் பதிவு செய்கின்ற உணர்வுக்குள்
நம் கண்கள் ஆன்டெனா"வாக இருந்து,
நாம் எண்ணிய உணர்வின் வலுக்கொண்டு,
அதனைக் கவர்ந்து, நமக்குள் கொடுக்கின்றது.

நமக்குள், நாம் எதை எண்ணுகின்றோமோ, அதைப் பதிவு செய்து கொண்டபின்தான், மீண்டும் அதைத் திருப்பி எண்ணும்போது, அதன் செயலாக வருகின்றது.

நாம் கூர்ந்து கவனித்துப் பதிவு செய்தால்தான்,
அந்தக் கண், நமக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்து,
அந்த நினைவின் ஆற்றலை, அது நமக்குள் காட்டும்.
அதன் வழித்துணை கொண்டுதான்,
நாம் செயல்படுத்த முடியும்,
என்று குருநாதர் காட்டிய சாரத்தை,
நீங்களும் அறிந்து கொள்வது நலமே என்று யாம் உபதேசிப்பது.

நீங்கள் நன்மை செய்த நிலைக்குள், மறைந்திருந்து உங்களுக்குள் தீமைகளை விளைவிக்கும், அதிலிருந்து நீங்கள் விடுபட்டு, உங்களை மனிதனாக உருவாக்கிய நற்குணங்களைக் காத்திட, இன்றும் மகரிஷிகள் கண்டுணர்ந்த அருள் வழியில், ஆறாவது அறிவின் துணைகொண்டு, பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்.

மாற்றியமைக்கும் சக்தி கொண்ட ஆறாவது அறிவின் துணை கொண்டு, ‘அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்என்று கண் காட்டிய, வியாசகர் காட்டிய, அருள் வழியின் துணை கொண்டு, கண்ணின் நினைவுகளை உயிருடன் ஒன்றி, மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணி, நம் உடலுக்குள் அதைச் செலுத்தும்பொழுது, தீமைகளை அகற்றிவிட்டு, தீமையை அகற்றிடும் சக்தியாக விளைகின்றது.

இரண்டு தாவரத்தின் சாரத்தை (சத்தை) ஒருங்கிணைத்து, நாம் ஒரு ஒட்டுச் செடியின் தன்மையாக, அது இணக்கப்படும்போது, அதனின் வீரிய சக்திகள் இணைகின்றது.

இதைப்போன்று. நமக்குள் அருள்ஞானியின் வித்துகளை நல்ல குணத்துடன் இணைக்கும் வகையில், இது உபதேசிக்கும்போது, கேட்டுணர்ந்து, நுகர்ந்த உணர்வுகள், உங்கள் நல்ல குணத்தைக் காத்திடும் நிலையாக, அருள் ஞானியின் வித்தைப் பதிவு செய்வதற்கே, இந்த உபதேசம்.

இதனின் நினைவுகொண்டு, இதைப் பெறவேண்டும் என்று எண்ணும்போது, கண்ணின் நினைவிற்கே வரும்.  

அந்த நினைவின் துணைகொண்டு, உயிருடன் தொடர் கொண்டு, அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால், அந்த உணர்வின் தன்மை, உங்கள் உடலுக்குள் படர்ந்து, தீமையை அகற்றிடும் அருள் சக்தியாக, அந்த நல்ல உணர்வுடன் கலக்கின்றது. இதற்குப் பெயர்தான், நரசிம்ம அவதாரம் என்பது.