எண்ணத்தில் உயர் ஞானத்தையும் நற்செயலையும் ஆத்மீக நெறி கொண்ட அன்பு வாழ்க்கையையும் வழி நடத்திட்டால் அந்த நிலையில் பெறும் சக்தியின் திறன் தானப்பா நாம் அடைந்திடும் பேரானந்த வாழ்க்கை.
ஆரம்ப வழித்தொடர்…
1.வாழ்க்கையுடனும் பிற எண்ணங்களின் மோதலினாலும் தொடரை வழிப்படுவதற்கு சிரம நிலை கொண்டிடலாம்
2.அச்சிரம நிலையிலிருந்து வழி நடந்து வந்திட்டால் இப்பேரின்ப நிலையை அடைந்திடலாம்.
இன்றைய விஞ்ஞானத்தினால் செயற்கைக்கோளை இப்பூமியிலிருந்து மற்ற மண்டலங்களின் நிலையறிய ஏவுகின்றனர்.
இப்பூமியின் காற்று மண்டலத்தையும் இப்பூமிக்கு மேல் சில தூர விகிதத்திற்கு அந்த ஏவுகணையைச் (இராக்கெட்) செலுத்திட இவ்வமிலங்களின் (அணுகாந்த மின் அலை) உதவியினால் செலுத்தி அதற்கு மேல் உள்ள நிலைகளுக்கு எந்த அமில சக்தியின் நிலையில்லாமலே இயக்கிடும் நிலைக்கு அவ் ஏவுகணை செல்கின்றது.
குறிப்பிட்ட தூர விகிதத்திற்குத்தான் மற்ற அமில சக்தியின் நிலையினால் இயங்குகிறது அந்த ஏவுகணை. பிறகு செல்லும் நிலைக்கெல்லாம் எரிபொருள் செலவு நிலை இல்லாமலே செல்லும் நிலையைத்தான் செய்வித்து அனுப்புகின்றனர்.
அதைப் போலவே நம் எண்ண சக்தியின் வழித் தொடரினை நற்சக்திக்கு வழிப்படுத்திட்டால் ஆத்மீக நெறிக்கு நம்மை வழி நடத்திட நம் உயிராத்மாவின் சக்தியினால் முடிந்திடும்.
1.இவ்வுடல் என்னும் அமிலங்கள் நிறைந்த இப்பிம்பத்தின் காந்த சக்தியின் நிலையை நாம் உணர்ந்திட்டால்
2.இப்பிம்பத்தையே பறக்கும் நிலைக்கும் பதப்படுத்திடலாம்.
3.நம் உடலிலுள்ள அமில சக்தியின் சக்தியே பெரும் சக்தி…!
4.இச்சக்திதனை நாம் உணர்ந்திடாமல் நம்மையே நாம் விரயப்படுத்தித்தான் வாழ்கின்றோம்.
செயற்கையினால் இன்று காணும் அனைத்து நிலைகளையுமே… அனைத்து நிலையென்பது ஒலி… ஒளி… இவற்றின் ஈர்ப்பு சக்தி கொண்ட நிலையை எல்லாம் இவ்வுடல் என்னும் அமில சக்தியின் தொடபினாலேயே கண்டிடலாம்.
“இவ்வெண்ண சக்தியின் வழித்தொடர் பெற்றோரின்…” சொல் செயல் பார்வை இவற்றின் சக்தி நிலையினால் அவர்கள் சொல்லும் சொல்வாக்கு பலிதம் கொள்ளும்.
ஒருவரைக் காணும் பொழுது அவரின் மேல் எவ்வெண்ணத்தின் நினைவுடன் அவரின் சுவாசக் காற்று பட்டுக் காண்கின்றனரோ அவ்வெண்ண நிலைப்படியே அவர்களைக் காண்பவரின் நிலையும் நடக்கும்.
1.ஆத்மீக நெறியறிந்து சக்தி நிலை பெற்றோரின் சொல்வாக்கும்
2.அவர்கள் எண்ணத்தில் பாய்ச்சிடும் விழியின் ஒளி நிலையும் பலிதம் கொள்ளும்.
ஒவ்வோர் ஆத்மாவிற்கும் இப்பேரின்ப சக்தியுண்டு. மகான்களின் நிலையிலெல்லாம் இந்நிலையுண்டு.
1.மகான்கள் சென்ற இடமெல்லாம் சிறப்பு
2.அவர் புண்ணிய பாதம் பட்ட இடமெல்லாம் செழிப்பு
3.அவரின் பார்வை பட்டாலே புண்ணியம்
4.அவரின் ஆசியினால் பேரின்பம் கிட்டும் என்ற வழித் தொடரிலுள்ள நாம் அத்தொடரினையே
5.அம்மகானின் புண்ணிய நிலையை நம் ஆத்மாவுடனும் கலந்து நாமும் அம்மாகனைப் போன்ற மகான்கள் ஆகலாம்.
இந்த உண்மை உணர்ந்து… உயர்ந்த நிலையிலுள்ளோரைத் தாழ்ந்தே வணங்கி… “தாழ்ந்த நிலையிலேயே இருந்திடாமல்…” அவரின் அடிச்சுவட்டைப் பற்றியே உயர்ந்து… அவரின் நிலையுடனே உயர்நிலை பெறும் மகான்களாய் நல் ஆத்மாவாய் நாமும் கலந்திடல் வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் வாழ்ந்திடல் வேண்டும்.
1.அடிமை கொண்டு வணங்கி வாழ்ந்திடுவதல்ல வாழ்க்கை.
2.அன்பு கொண்டே வணங்கிடல் வேண்டும்.
3.அன்புடனே அன்பாய்க் கலந்து வாழ்ந்திடல் வேண்டும்.
ஆனால் நம் வழி முறையும் செயல் முறையும் அடிமை கொண்ட நிலையில்தான் மகான்களின் நிலையையும் பணிந்து பற்றி வாழ்கின்றனர்.
மகானுடனே மகானாய்க் கலக்கும் மனப்பக்குவ நிலையை வளர்த்து இவ்வுலகின் சக்திச் செல்வமான சக்தி ஆத்மாக்கள் அனைவருமே
1.சக்தி ஜோதியாய்த் திகழ்ந்திடும் உண்மையினை உணர்ந்து
2.உன்னத வழி பெற்றே மகாமகான்கள் ஆகிடுங்கள்.