ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 8, 2023

“சுவாசிக்கும் உணர்வுகள் எதுவோ… அதற்குத் தக்க வலிமை நமக்குக் கிடைக்கின்றது…!”

ஆபீசில் உட்கார்ந்து பணி செய்பவர்கள்… வேலைக்குச் செல்லாமல் இருப்பவர்கள்… சிறிது நேரம் மண்வெட்டியை எடுத்து வெட்டினால் உடனே சோர்வடைந்து விடுகின்றார்கள்… களைப்பு வந்து விடுகின்றது.

ஆனால் விவசாய வேலை செய்பவர்கள் அவர்கள் உணவுக்காக வேண்டிக் கஷ்டப்பட்டுக் கடுமையான வேலைகளைச் செய்கின்றார்கள்.
1.எப்படியும் சம்பாரிக்க வேண்டும் என்று ஏங்கிச் சுவாசிக்கும் உணர்வுகள்
2.அவர்கள் உடலில் உள்ள எல்லா நரம்புகளுக்கும் வலிமை ஊட்டும் உணர்வாக வருகின்றது.
3.அது உமிழ் நீராக மாறி அவருடைய உணவுக்குள் வீரிய உணர்வு உருவாக்கப்பட்டு
4.இரத்தங்களில் கலக்கப்படும் போது நல்ல அணுக்களுக்கு வீரிய சத்து கிடைக்கின்றது.

அவர்கள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் விடாது கடின உழைப்புகளைச் செய்கின்றனர்... அவர்களுக்கு மூச்சு வாங்குவதில்லை.

ஆனால் சாதாரண மனிதராக இருக்கக்கூடிய நமக்கோ ரெண்டு நிமிடம் அல்லது ஐந்து நிமிடம் தொடர்ந்து வேலை செய்தால் மூச்சு வாங்குகின்றது… உடல் பலவீனம் அடைகின்றது.

ஆனால் கடுமையாக வேலை செய்பவரும் இந்தக் காற்று மண்டலத்தில் வரும் உணர்வுகளைச் சுவாசித்துத் தான் வாழ்கின்றனர் வளர்கின்றனர்.

அவருடைய எண்ணமோ… இந்த வேலையை நாம் செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் வலிமையாகச் செயல்படுத்தப்படும் பொழுது… அந்த எண்ணத்தின் வலிமை அவர்கள் சுவாசித்து அவருடைய ஆகாரத்திற்குள் வலிமை கிடைக்கின்றது.

சில வசதி உள்ளவர்கள் சந்தர்ப்பத்தினால் வசதி குறைந்த பின் அந்த வயிற்றுப் பிழைப்புக்காக எப்படியும் சம்பாதிக்க வேண்டும் என்று “மண்ணைத் தூக்கிச் சுமக்கலாம்…” என்று அத்தகைய வேலைக்குச் செல்வார்கள்.

1.வசதி இருந்து வசதி குறைந்த பின் இந்த வேலையைச் செய்யும் பொழுது வலுவான எண்ணங்கள் வருவதில்லை
2.வலுவிழந்த உணர்வுகளைச் சுவாசிக்கும்போது நான்கு நாளைக்கு அவர்கள் இப்படி வேலை செய்தார்கள் என்றால் அவர்களுக்கு கடுமையான நோய் வந்துவிடுகிறது.

வசதி இருந்து செல்வம் குறைந்த நிலையில் இந்த மாதிரி ஆகின்றது. ஆனால் எப்படியும் வேலை செய்து வாழ வேண்டும் என்று எண்ணுவோருக்கு இந்த நோய் வருவதில்லை.

ஆகவே “நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவோ… அதற்குத் தக்க அந்த வலிமை கிடைக்கின்றது…!”

கடினமாக வேலை செய்பவரிடம் சென்று யாராவது கவலையாகச் சொன்னால் “
1.ஹும்…! உங்கள் விதி எப்படியோ அப்படித் தான் நடக்கும் என்று அதை அவர்கள் கவலையை நுகர்வதில்லை.
2.கஷ்டத்தையும் வேதனையும் எடுத்துக் கொள்வதில்லை… அதாவது மற்றவர்கள் கஷ்டங்களை அவர் எடுத்துக் கொள்வதில்லை

இப்படி இயற்கையின் சந்தர்ப்பங்கள் அவரவர்
நுகர்ந்த உணர்வை வைத்துத் தான் செயலாக்கங்கள் நடக்கின்றது.

அதே சமயத்தில் தொழிலின் நிமித்தம் வசதியைப் பெருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நாம் பிறரை ஏவித்தான் வேலை வாங்க வேண்டி இருக்கின்றது.

வேலை ஏவி அவர்கள் அதைச் செயல்படுத்தும் போது பொருளைக் கொடுக்கிறோம் என்று எண்ணினாலும்… தான் நினைத்த அளவுக்கு அவர்கள் வேலை செய்யவில்லை என்றால் “பணம் கொடுத்தோம்… சரியாக வேலை செய்யவில்லையே…” என்று மனதில் வேதனை வருகின்றது.

தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றனர். அந்த வேதனையை அதிகமாக எடுத்து.. அதே வேதனையோடு வேலையைச் சொல்லப்படும் பொழுது அவரிடம் வேலை செய்பவர்களையும் சோர்வடையச் செய்து விடுகிறது. அப்போது இன்னும் கொஞ்சம் வேதனை அதிகமாகின்றது.

செல்வத்தைச் சேமிக்க வேண்டும் செழிப்பாக இருக்க வேண்டும் என்று செயல் பட்டாலும்… பின்னணியில் பணம் இருக்கின்றது மற்றவர்கள் வேலையைச் செய்கின்றார்கள் என்றாலும்…
1.எண்ணியபடி நடக்கவில்லை என்கிற பொழுது வேதனை உணர்வுகள் இரத்தத்தில் கலந்து உடல் பலவீனம் அடைகின்றது
2.வெறுப்பு அதிகரிக்கும் போது சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டுக் கோபம் வருகிறது.
3.கோபம் அதிகமாகிக் கார உணர்ச்சிகள் ஆனால் இரத்தக் கொதிப்பாகிவிடுகிறது
4.வேதனை வித்தாக உருவானால் பின் எப்படிப் பேசுவது என்ற சலிப்படையும் போது உடலில் சளித்தொல்லை வருகின்றது.

இது எல்லாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் தான்… யாரும் தவறு செய்யவில்லை.

அவரவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் உடலில் அது முதிர்வடையப்படும் பொழுது “விதி…” என்ற நிலையாக மாறி விடுகின்றது.

இந்த விதியை மதி கொண்டு மாற்ற முடியும்…!

அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வைச் சுவாசமாக அடிக்கடி எடுத்தால் நம் எண்ணங்கள் வலிமையாகும்.

1.துருவ நட்சத்திரத்தின் எண்ணம் வலுவாக வலுவாக… நரம்புகளில் அதற்குத் தக்க ஆசிட் உருவாகும்…
2.உடல் உறுப்புகளைச் சீராக இயக்க முடியும்.

எத்தகைய கஷ்டம் வந்தாலும் அதிலிருந்து விடுபடும் மன பலம் கிடைக்கும்.