ஆலயத்தில் குறைகளை எல்லாம் சொல்லிவிட்டால் “எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்…!” என்ற எண்ணத்தில் தான் பெரும்பகுதியானோர் ஆலயத்திற்குச் செல்கின்றோம்.
அதற்காக வேண்டி அர்ச்சனையும் அபிஷேகமும் செய்கிறோம். அப்படிச் செய்துவிட்டால் “அந்தத் தெய்வம் நமக்கு எல்லாம் செய்யும்…!” என்று சொல்கின்றனர். பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் சந்தன அபிஷேகம் எல்லாம் செய்கின்றோம்.
சாமிக்கு இதை எல்லாம் செய்கின்றோம்…
1.ஆனால் அபிஷேகம் நடக்கும் பொழுது என்ன எண்ணுகிறோம்…? வீட்டில் என்ன நடக்கிறது…?
2.என் வீட்டுக்காரர் நோயுடன் வேதனைப்படுகின்றாரே…! என்று தான் எண்ணுகிறோம்
3.அங்கே தெய்வத்திற்கு பால் அபிஷேகம் செய்கிறோம்… இங்கே தன் உயிரில் வேதனையான உணர்வுகள் அபிஷேகம் நடக்கிறது.
என் வீட்டுக்காரருக்கு “உடல் நலம் சரியில்லையே…!” என்று வேதனையை எண்ணி எடுக்கும் நிலை தான் வருகின்றது. கோயிலுக்குச் சென்று மனைவி இப்படி வேதனையுடன் எண்ணினால் “இந்த எண்ணம்…”
1.வீட்டுக்காரர் ஓரளவுக்கு எழுந்து நடமாடக்கூடிய நிலையில் இருப்பவரை
2.வீட்டிற்குள் பாத்ரூமுக்கு அப்போது நடந்து சென்று கொண்டிருக்கின்றார் என்று வைத்துக் கொண்டால்
3.அந்த நேரத்தில் வீட்டுக்காரருக்கு உடனே நடுக்கமாகிக் கீழே விழுந்து விடுவார்.
அதே போல் ஒரு திடமான குழந்தையாக இருக்கட்டும். நாம் அமெரிக்காவிற்குப் படிக்க அனுப்பி இருக்கின்றோம். ஒரு மாதம் அல்லது பத்து நாட்கள் குழந்தையிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை என்றால் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ…? ஏது ஆயிற்றோ…? என்று உடனே வேதனைப்பட ஆரம்பிக்கின்றோம்.
ஏனென்றால் குழந்தையின் உணர்வு நம் உடலில் இருக்கின்றது இங்கே தாய் இப்படி வேதனையாக எண்ணும் போது அங்கே பிள்ளை படித்துக் கொண்டிருந்தால் .”இந்த எண்ணம்”
1.அங்கே குறுக்காட்டி… குழந்தைக்குப் படித்தது நினைவுக்கு வராது… தலையைப் பிய்த்துக் கொள்ளும்
2.சரி… கொஞ்சம் நடந்து கொடுத்து வரலாம்… என்று வெளியே செல்லும்
3.அப்போது சிந்தனை குறைந்து… மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து கையிலோ காலிலோ அடிபட்டுக் காயம் ஆகி விடுகின்றது.
4.படித்துக் கொண்டிருக்கும் பொழுது இப்படி ஆகிவிட்டதே… தாயிடம் எப்படிச் சொல்வது…? என்று குழந்தையும் வேதனைப்படும்.
பத்து நாட்கள் கழித்து ஓரளவுக்குச் சரியான பிற்பாடு… இந்த மாதிரி அன்று கீழே விழுந்ததால் தான் தபால் எழுத முடியவில்லை என்று தபால் வரும்.
தாய் இதைப் படித்ததும் “நான் நினைத்தேன்… நினைத்த மாதிரியே தான் நடந்திருக்கிறது…!” என்று சொல்லும். ஆனால்
1.தாய் தன் குழந்தையை வேதனையாக எண்ணிய “அந்த எண்ணம் தான்” இயக்கி
2.”கீழே விழக் காரணமாக இருந்தது” என்று தெரிவதில்லை.
காரணம்… இது எல்லாம் நம்மை அறியாமல் இயக்கக் கூடிய சக்திகள்.
ஆலயத்திலே உயர்ந்த அபிஷேகங்கள் நடந்தாலும் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது “கணவருக்கு இப்படி இருக்கின்றது… குழந்தைக்கு இப்படி இருக்கின்றது…” என்று எண்ணும் பொழுது உயிரிலே வேதனை தான் அபிஷேகம் ஆகின்றது.
ஆக அப்போது அங்கே தெய்வத்தின் மீது பாலை ஊற்றினாலும் தேனை ஊற்றினாலும் சந்தனத்தை ஊற்றினாலும் அதை எல்லாம் எண்ணுவதில்லை.
இப்போது இங்கே உபதேசித்துக் கொண்டிருக்கின்றோம்… உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த நேரத்தில் உங்கள் குழந்தை எண்ணி அவன் படிக்கச் சென்றானே… அங்கே என்ன ஆனதோ…? சாப்பாட்டுக்கு என்ன செய்வானோ…? என்று இங்கே இதைக் கவனிக்காது அங்கே நினைவைச் செலுத்தினால் “இந்த எண்ணம்” அவனை குறுக்காட்டி அவனுடைய சிந்தனையைக் குறைத்துக் கீழே விழும்படி செய்யும்.
அப்போது நான் தியானத்திற்கு வந்தேன்… என் பையனுக்கு இந்த மாதிரி ஆகிவிட்டது என்று எண்ணுவார்கள் ஏனென்றால் நம்முடைய நினைவு… இந்தப் பழக்க வழக்கம் வளர்ந்தது… இப்படித்தான் வருகின்றது.
ஆனால் அதையெல்லாம் விடுத்து விட்டு…
1.யாம் உபதேசிக்கும் போது இதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்கினால் இது உயர்ந்த சத்தாக உங்களுக்குள் சேர்கின்றது.
2.நுகர்ந்தபின் இது உங்கள் உயிரிலே நல்ல உணர்வாக… சிந்தித்துச் செயல்படும் சக்தியாக… உயர்ந்த அபிஷேகமாக அமைகிறது.
3.இந்த உணர்ச்சிகள் உங்கள் இரத்தத்தில் கலக்கின்றது… அறியும் ஞானத்தையே ஊட்டுகின்றது
4.இரத்தத்திந் வழி உடல் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த சக்திகள் கூடுகின்றது.
சிறிது காலம் இப்படிப் பழக்கப்படுத்தி விட்டால் உயர்ந்த நிலை பெற முடியும்.
மனைவி கணவனை எண்ணி வேதனைப்படும் பொழுது அந்த எண்ணம் அவரைக் கெடுதலாக இயக்குகின்றது. அவருக்குக் கஷ்டம் அதிகமான பின் இங்கேயும் சேர்த்து இயக்க ஆரம்பிக்கிறது.
காரணம்… நம்முடைய வழக்கத்தில் ஆலயத்திற்குச் சென்று
1.கஷ்டத்தை எல்லாம் சொன்னால் “அவன் பார்த்துக் கொள்வான்…” என்று இப்படித்தான் வழியைக் காட்டி விட்டார்கள்
2.எவன் பார்ப்பான்…?
3.எதை நுகர்கின்றோமோ அதைத்தான் நம் உயிர் பார்க்கும்… அந்த உணர்வைத் தான் ஊட்டும்.. அதையே இயக்கிக் காட்டும்.
அங்கே பால் அபிஷேகம் செய்யும் போது பாலைப் போன்ற மனம் பெற வேண்டும்… அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று அதை எண்ணி எடுக்கச் சொன்னால்… “கஷ்டத்தைச் சொன்னால் அவன் பார்ப்பான்…” என்று ஞானிகள் கொடுத்த வழி முறைகளை மாற்றித் தீமைகளைத் தான் நமக்குள் சேர்த்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆலயத்திற்கு சென்று கஷ்டத்தை எல்லாம் வேதனையுடன் சொல்லி முறையிட்டு வந்தபின் “நடந்து சென்றேன்… கீழே விழுந்து விட்டேன்…!” என்று ஆன பின்
1.“அட தெய்வமே…” இப்பொழுது தானே உனக்கு நான் பாலாபிஷேகம் செய்தேன்
2.எத்தனை தான் நீ என்னைச் சோதிப்பாய்…? என்று சாமியைத் திட்டும் நிலையில் தான் இருக்கின்றோம்.
எத்தகைய குறைபாடாக இருந்தாலும் தெய்வத்தைத் தான் நினைக்கின்றோம்…! ஆனால் வேதனையுடன் எண்ணுகின்றோம்… கோவிலுக்குள் போனாலும் வேதனையுடன் தான் போகிறோம்.
ஞானிகள் காட்டிய நிலைகளோ… அங்கே காட்டிய தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்… தெரிந்து தெளிவான நிலைகள் நாங்கள் பெற வேண்டும். என் கணவருக்கு பாலைப் போன்ற மனம் பெற வேண்டும்; பன்னீரைப் போன்ற தெளிந்த எண்ணங்கள் வர வேண்டும்; சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெற வேண்டும்; அவர் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று இந்த நல்ல மணங்களை எண்ணி எடுத்து அதை உயிருக்கு அபிஷேகம் செய்து… அனைவருக்கும் அது கிடைக்கும்படி… அந்த உயர்ந்த உணர்ச்சிகளை ஊட்டும்படி தான் அங்கே ஆலயத்தில் காட்டினார்கள்.
ஏனென்றால் உடலில் வலி வந்து விட்டால் எப்பா… எம்மா…! என்று சொல்லி வேதனைப்படுகின்றோம். இதை அடுத்தவர்கள் சுவாசித்தால் என்ன நடக்கின்றது…? அவருக்கும் அந்த வேதனை வருகிறது.
அதை எல்லாம் மாற்றி அமைக்கத் தான் நோயுற்றவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் உடலிலே தெய்வீக குணங்கள் வளர வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த உயர்ந்த உணர்வுகளைக் கிடைக்கச் செய்வதற்கு அபிஷேகங்களையும் ஆராதனைகளையும் ஆலயத்தில் காட்டினார்கள்.
காரணம் நாம் நுகர்வது தான் நம் உயிரிலே அபிஷேகம் ஆகின்றது
1.சூட்சமத்தில் நடப்பதை ஞானிகள் நமக்கு இப்படித் தெரியப்படுத்துகின்றார்கள்… நாம் தெரிந்து கொண்டோமா…?
2.இனியாவது தெரிந்து… ஞானிகள் காட்டிய வழியில் நாம் நடந்து பழக வேண்டும்…!