ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 26, 2023

மண்டலக் கணக்கு - 48 நாள்கள்

மனிதர்கள் இந்த உடல் இச்சைக்குத் தான் செல்கின்றனரே தவிர “உயிரின் இச்சைக்கு” யாரும் செல்வதில்லை. ஆனால் அவனுடன் தான் நாம் ஒன்றி வாழுகின்றோம்.

எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வுக்கொப்ப உடலாகிறது. உடலாகும் போது “வேதனை.. வேதனை…” என்று எடுத்தால் வேதனைப்படும் நிலை தான் வருகிறது..

வேதனை அதிகமாகி விட்டாலோ அந்த வேதனைக்கொத்த உடலாக… அடுத்து உயிர் நம்மை மாற்றிவிடும். ஆகவே இது போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்.

இந்த உண்மைகளை எல்லாம் இப்போது அறியக்கூடிய தகுதி பெற்றிருக்கிறோம் என்றால் அது யாரால்…?

நம்முடைய மூதாதையர்கள் முதலில் மனிதனாக உருவானார்கள். அவர்கள் வழியில் நம் தாய் தந்தை உடல் பெற்றார்கள். அவர்கள் வழியில் நாம் மனித சரீரத்தை இப்போது பெற்றுள்ளோம்.

ஏனென்றால் “மனிதன் ஒருவன் தான் இறந்த பிற்பாடு அவர்களை (முன்னோர்களை) விண் செலுத்த முடியும்…”

ஒருவருக்கொருவர் நாம் மனதில் நினைக்கின்றோம்… “எனக்குத் துரோகம் செய்தான் பாவி… எங்கிருந்தாலும் அவன் உருப்படுவானா…? என்று…!”

நாம் இப்படி எண்ணினால் அவன் அமெரிக்காவில் இருந்தாலும் கூட இந்த உணர்வு அங்கே சென்று அவனை இயக்குகின்றது… அவன் செய்யும் காரியத்தைக் கெடுக்கிறது.

அதே போன்றுதான் நம்முடைய மூதாதையரின் உணர்வுகள் நமக்குள் இருக்கின்றது. அதை வைத்து அவர்களை நாம் விண் செலுத்த முடியும்.

அருள் சக்திகளை இப்போது குரு வழியிலே நமக்குள் பெருக்குகின்றோம். அதற்குண்டான சக்தி கிடைக்கின்றது… காற்றிலே அந்த உணர்வுகள் உண்டு.

நம் முன்னோரின் ஆன்மாக்கள் இன்னொரு மனித உடலுக்குள் சென்று இருந்தாலும் கூட நாம் விண் செலுத்த முடியும். முன்னாடி செய்ய மறந்து விட்டோம். இப்பொழுதாவது நாம் செய்யப் பழக வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று சொல்லி 48 நாட்களுக்குள் அனுப்பி விட்டால் அங்கே சென்று முழுமை அடைகின்றார்கள்… ரிஷியாகின்றார்கள்.

உதாரணமாக ஒருவருக்கொருவர் பிரியமாக இருக்கின்றார்கள் அதிலே ஓருவர் திடீரென்று இறந்து விட்டால் பற்றுடன் எண்ணும் போது அந்த உடலுக்குள் தான் போகும். அந்த உடலில் ஆவியாக இருக்கும்.

ஆனாலும் இறந்த ஆன்மா திடீரென்று உடலுக்குள் புகுந்த உடனே முதலில் தெரியாது. அதனால்தான் ஒரு மண்டலம் என்ற கணக்கை வைத்து ஞானிகள் நமக்குக் காட்டினார்கள்.

எது எது எந்தப் பொருளாக இருந்தாலும் “ஒரு மண்டலத்திற்குள் கருத்தன்மை அடைவது” மாறும் தன்மை வருகிறது. இதைத் தெரியப்படுத்துவதற்குத் தான் மண்டலக் கணக்கை ஞானிகள் கொடுத்தார்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்றார்கள் என்றால் அந்த ஒரு மண்டலத்திற்குள் (48 நாட்களுக்குள்) சப்தரிஷி மண்டல உணர்வை எடுத்து வளர்த்து இலேசாக அங்கே விண் செலுத்தி விடலாம்.

அங்கே சென்ற பின் உடல் பெறும் விஷத்தன்மைகள் எல்லாம் கரைந்து விடுகிறது. துருவ நட்சத்திரம் சமைத்துக் கொடுக்கும் உணர்வுகளை எடுத்து ஒளி உடலாகப் பெறுகிறது.

மனிதன் ஒருவன் தான் இதைச் செய்ய முடியும்…!

இதற்கு முன்னாடி நமக்குப் பழக்கம் இல்லை. இப்போது தெரிந்து கொண்டோம். அடிக்கடி இதைப் போன்று செய்து பழகினால் இன்றைய விஷ உலகில் அடிக்கடி வரும் தீமைகளை நீக்க முடியும்.

மூதாதையர்களை விண் செலுத்திய வலுக் கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் அதிகமாகப் பெருக்கிக் கொள்ள முடியும். இந்த உடலை விட்டு எப்பொழுது நாம் பிரிந்தாலும் நம்மையும் அது அங்கே இழுத்துச் சென்றுவிடும்.

மாறாக… “ஐய்யய்யோ இந்தக் காசை எல்லாம் என் பிள்ளை கண்டபடி செலவழிக்கின்றானே… நாளை அவன் என்ன செய்வான்…? என்று பிள்ளை மீது நினைவு அதிகமானா அந்த உடலுக்குள் தான் வர வேண்டும்

காசு சம்பாரித்துக் கொடுத்தேனே… நாளை என் பிள்ளை என்னை எங்கே ஏமாற்றப் போகின்றானோ…? என்று எண்ணினால் அவன் உடலில் புகுந்து விடுவோம். அங்கே பேயாகப் போய் அவனையும் வேதனைப்படுத்தத்தான் செய்யும்

ஆகவே எந்த நிமிடம்… எந்த நிலை… ஆனாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் ஒரு பழக்கத்திற்கு வந்துவிட்டால் நம் உயிரின் இயக்கம் எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்… அங்கே கவர்ந்து சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

அந்த உணர்வுக்குத் தக்க இருளை நீக்குகின்றது உணர்வின் அறிவு எப்பொழுதுமே சந்தோஷமாகப் பேரானந்த நிலையாகப் பெற முடியும். அது தான் விஜய தசமி. உயிர் தோன்றி பத்தாவது நிலையாக முழுமை அடையும் சந்தர்ப்பம்… பிறவி இல்லா நிலை…!

ஒவ்வொரு மாதத்திலும் ஞானிகள் தெளிவான காரணங்களைக் காட்டி நம்மை நல்வழியில் வாழச் செய்ய வழிவகுத்துக் கொடுத்தார்கள். மக்களுடைய எண்ணங்கள் தடுமாறும் இந்தக் காலகட்டத்தில் குரு வழியில் இதை நாம் செயல்படுத்துவோம்.