1.இயற்கை உணர்வுடனே கலந்திட்ட நல் நிலை பெற்றோரின் எண்ணச் சக்திக்கு
2.இவ்வெண்ணத்துடன் கலந்திட்ட இயற்கை சக்தியும் உறுதுணையாக நிற்கும்
இயற்கையின் தன்மையில் ஒரே நிலை இருப்பதில்லை.
காற்றும் மழையும் குளிரும் உஷ்ணமும் கால நிலைக்கேற்ப மாறிக் கொண்டு வருகின்றன. இயற்கை அனைவருக்கும் பொதுவான சக்தி தான்.
அச்சக்தியின் அருளைச் சாதக நிலைப்படுத்தி எண்ணத்தில் உயர்வு கொண்டோரின் நிலையின் ஜெபத்திற்கு அவர் எண்ண ஜெபத்தின் நிலைக்கு இயற்கையும் ஒத்துழைக்கும்.
எண்ணத்தில் ஏற்றுவித்த இந்நல் சக்தியின் நிலை கொண்டு இயற்கையின் சீற்றத்தையும் நாம் கட்டுப்படுத்திடலாம்.
நம் எண்ணமே அத்தெய்வ சக்தியை ஈர்த்து ஜெப நிலையில் உள்ள பொழுது… இவ் இயற்கையில் கலந்திட்ட பல நிலை கொண்ட அமில சக்தியை நம் எண்ணத்தின் சக்தியைக் கொண்டு திசை திருப்பிடவும்… ஜெபப்படுத்தி அவ் இயற்கையின் சக்தியையே நம் எண்ண நிலைக்கொப்ப நிலைப்படுத்திடலாம்.
ஆனால் எண்ணத்தில் கறையுண்டோருக்கு இயற்கையும் ஒத்துழைப்பதில்லை.
இன்றைய மனித ஆத்மாக்கள் தன் நிலை உணர்ந்திடாமல்… தான் பிறவி எடுத்து வாழ்ந்த நிலையையும் மடியும் நிலையையும் எண்ணத்தில் கொண்டு
1.இவ் இடை கொண்ட வாழ் நாட்களில் இருந்தென்ன பயன்…? என்றும்
2.இவ்வுடலுடன் நாம் இருந்து அடையும் நன்மை என்ன…? என்றும்
3.இயற்கை எய்திடும் (இறப்பு) நாம் இவ்வாழ்க்கையில் சிக்கி மனக் கலக்கப்பட்டு வாழ்ந்து என்ன பயன்…? என்றும்
4.எண்ணும் எண்ணத்தில்தான் பல ஆத்மாக்கள் உள்ளன.
எண்ணத்திலேயே தன் நிலையை வினாவாக்கி வாழ்பவருக்கு… இவ்வுடலுடன் மட்டுமல்ல… இவ்வுடலை விட்டுச் சென்றிட்ட ஆத்ம நிலையிலும் “இவ்வினா நிலைதான்…” சுற்றிக் கொண்டே இருக்கும்.
இயற்கையின் சக்தியில் இயற்கையே அளித்திட்ட இயற்கையுடன் ஒன்றிய நம் உயிராத்மாவை இவ்வுடலுடன் வாழ்ந்திடும் நாட்களிலும் சரி… ஆத்மா பிரிந்து ஆவியுடன் சுற்றிக்கொண்டுள்ள நிலையிலும் சரி… இவ் இயற்கையுடன் ஒன்றியே தான் உயிரணு உதித்த நாள் முதற் கொண்டு நாம் எடுத்திட்ட சுவாச நிலையும் அமில சக்தியும் நம் எண்ண சக்தியுடன் என்றென்றும் அழியாமல் சுற்றிக் கொண்டுள்ளன.
இப்பிறவிக்கு நம் எண்ணம் கொண்டுதான் வருகின்றோம். ஈன்றவரின் நிலையினால் மட்டுமல்ல…!
நாம் பிறவி எடுத்த நற்பயனையே நற்சக்தியாக்கி… இவ்வுலகுடன் ஒன்றியே நம் உயிராத்மாவும் தொடர்பு கொண்டு… நம் பிறவிப் பயனைப் பெற்று…
1.நாம் பிறந்திட்ட உண்மைச் சக்தியினை இவ்வுலகில் நிலை நிறுத்தி வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.
2.அகஸ்தியனைப் போன்றும் போகனைப் போன்றும் கொங்கணவரைப் போன்றும் ஒவ்வொரு நிலையிலும் நல் உணர்வு கொண்டு
3.நம்முடன் நம்மை வழி நடத்திச் செயல் கொண்டு செயலாக்கிடும் பல ரிஷிகளின் நிலை பெற்று வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.
இயற்கையின் சக்தி அனைத்திற்கும் பொது சக்தி. அச்சக்தியின் நல் உணர்வை ஈர்த்து நம் ஆத்மாவை நிலைப்படுத்தி வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.