நீங்கள் தான் உங்களைக் காத்துக் கொள்ள முடியுமே தவிர “மற்றவர்கள் உங்களைக் காப்பாற்ற வேண்டும்...” என்ற நிலைக்குப் போகாதீர்கள்.
ஏனென்றால் நாம் எதை நல்லதாக எண்ணுகின்றோமோ உயிர் நம்மை அதன் வழியே இயக்குகின்றது… அந்த நல்ல உணர்வை உருவாக்குகின்றது.
இன்று மனித உடலில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் முழுமையாக இதிலேயே இருக்க முடியுமா…? இல்லை…! மிகக் குறுகிய காலமே இந்த உடலில் நாம் வாழுகின்றோம்.
அந்தக் குறுகிய காலத்திற்குள் என்றும் ஏகாந்த நிலை பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்க வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத் தான் உபதேச வாயிலாக அதைப் பதிவாக்குகின்றோம்.
பதிவானதை நீங்கள் மீண்டும் எண்ணும்போது துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குள் வளர்ந்து... தீமைகள் புகாது தடுத்து அது உங்களைக் காக்கக்கூடிய அரும்பெரும் சக்தியாக வரும்.
அதை நீங்கள் எப்படியும் பெற வேண்டும் என்று தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அந்த உயர்ந்த சக்தியைப் பாய்ச்சுகின்றேன்.
அதை எடுத்து உங்கள் எண்ணத்தால் தீமைகளை நீக்கி... உங்களைக் காத்து வாழ வேண்டும். சாமி (ஞானகுரு) செய்து தருவார்…! என்று அல்ல. சாமி சொன்ன வழியிலே “அந்த உயர்ந்த சக்திகளை எடுக்க முடியும்… நம்மால் தீமையை நீக்க முடியும்... நம்மால் பிறருடைய தீமைகளையும் போக்க முடியும்...!” என்ற இந்த நம்பிக்கைக்கு நீங்கள் வரவேண்டும்.
நாம் யாருமே கெட்டவர்கள் அல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வேதனைப்படும்படி ஆக்கிவிடுகிறது.
உதாரணமாக... ரோட்டிலே நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதபடி திடீரென்று ஒரு நாய் குறுக்கே விரட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். நாய் விரட்டும் போது நமக்குப் பதட்டமாகிறது.
அந்தப் பதட்டத்திலே நல்லதை எண்ண முடியாது போகின்றது நாய் விரட்டுகின்றது ஐய்யய்யோ... நாய் கடித்து விடுமே...! என்று பயப்படுகின்றோம் யாராக இருந்தாலும் அப்படித்தான் சொல்வோம்.
அந்த மாதிரி நேரங்களில் நாய் நம் பக்கத்தில் வந்தாலும் கூட ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்தப் பதட்டத்தைத் தணித்து அமைதிப்படுத்த வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்... இரத்த நாளங்களில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்முகமாக இதைச் சுவாசித்துச் சுத்தப்படுத்த வேண்டும்.
மற்றவர்களுக்குச் (அவர்களை நாய் விரட்டினால்) சொல்லும் போது துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீ பெறுவாய். உனக்குள் அந்த வலுவான நிலை கிடைக்கும்... இனிமேல் நாய் உன்னை விரட்டாது என்று சொல்லிவிட்டு... மகரிஷிகளின் அருள் சக்தியால் அந்த நாய் என்னைக் கடிக்காது இருக்கக்கூடிய சக்தியாக அது பெற வேண்டும் என்று எண்ணும்படி நாம் வழி காட்ட வேண்டும்.
அதே சமயத்தில் மேலே சொன்ன எதையும் சொல்ல முடியவில்லை என்றாலும் கூட உன் தாயை எண்ணி “அம்மா.....” என்று நீ சொல்லப்பா... நாய் கடிக்காது… உன்னை விரட்டாது.
“அம்மா...” என்ற சொல்லைச் சொல்லும் போது தாய் நம்மை காத்த்திட்ட உணர்வுகள் அங்கே குவியும். நம்மைக் கககும் சக்தியாக அது அப்போது வரும். அம்மா... என்று சொன்னாலே போதுமானது... பதட்டப்பட வேண்டியதில்லை…! என்று தெளிவாக்க வேண்டும்.
ஏனென்றால் நாயைக் கண்டு பயத்தையும் பதட்டமான உணர்வையும் எடுத்துக் கொண்ட பின் அது உடலுக்குள் எல்லா அணுக்களிலும் சேர்ந்து விடுகின்றது.
அப்படிச் சேர்ந்து விட்டால் அவன் எப்பொழுது பார்த்தாலும் பதட்டம் அடைபவனாகவே.... எந்த வேலையைச் செய்தாலும் பதட்டத்துடன் செய்வதும்... சரியாகச் செய்யாதபடி “குற்றவாளியாக” மாற்றிக் கொண்டே இருக்கும்.
காரணம்... அது அவருடைய குறை அல்ல...!
அதற்கு முன்னாடி அவன் கெட்டிக்காரனாக இருந்தாலும் கூட... இது போன்று சந்தித்த பின்... எதிர்பாராதபடி நாய் விரட்டிய நிலைகள் “கடிக்க வந்து விடுமே...” என்று எடுத்த உணர்வுகள் பதட்டம் பயமும் ஏற்பட்டபின் இந்த உணர்ச்சிகள் உடலில் சேர்ந்து மாற்றி விடுகின்றது.
காரணம்... எல்லா அணுக்களிலும் இந்தக் காந்தம் உண்டு. அப்படி ஆகாதபடி தடுப்பதற்குத் தான் “துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று அடிக்கடி சொல்கிறோம்.
தீமைகளை நீக்கக்கூடிய ஞானவனமாக இந்த உடலை தபோவனமாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா...!