ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 22, 2023

அசுர உணர்வுகள் வந்தாலும்… அகஸ்தியனைப் போன்று அதை அடக்கக்கூடிய “ஜீரணிக்கும் வல்லமை” பெற வேண்டும்

அகஸ்தியன் காட்டிற்குள் செல்கின்றான்… அங்கே வாதாபி என்று அரக்க சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் ரூபத்தை மாற்றக் கூடியவர்கள். (இன்றும் இது போன்ற ரூபத்தை மாற்றக்கூடிய புலையர்கள் காட்டுக்குள் இருக்கின்றார்கள்). வாதாபி சகோதரர்கள் அகஸ்தியனை விருந்தாளியாக வரவேற்கின்றார்கள்.

விருந்தாளியாக வருபவர்களுக்கு மாமிச உணவு கொடுப்பது தான் எங்களுடைய வழக்கம் என்று சொல்கிறார்கள்.

நான் மாமிசம் சாப்பிடுவது இல்லையப்பா…! என்று அகஸ்தியர் சொல்கின்றார்.

இல்லைங்க… எங்கள் ஊருக்கு யார் வந்தாலும் நாங்கள் இதைக் கொடுக்கத் தான் செய்வோம்… அது தான் எங்களுடைய வழக்கம் என்று சொல்கின்றார்கள்.

நடைமுறையில் பார்த்தோம் என்றால் எங்கள் வீட்டுக்குச் சாமி நீங்கள் வந்திருக்கிறீர்கள் சிறிதளவு காபி சாப்பிடுங்கள் என்பார்கள். ஆனால் சர்க்கரைச் சத்தாக இருக்கும்.

எனக்கு எதிரியாகும்... வேண்டாம்…! என்று சொன்னாலும்… பாசத்தால் நான் சாப்பிட்டேன் என்றால் என்ன ஆகும்…? சர்க்கரைச் சத்து அதிகமாகும்.

அல்லது முதலில் சாப்பிட்டு வந்திருப்பேன்… இங்கே மீண்டும் குடிக்க வற்புறுத்தும் பொழுது சாப்பிட்டால் அஜீரணம் ஆகிறது அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்…? தள்ளாட்டமாகும்.

“வேண்டாம்…” என்று சொன்னாலும் கூடக் கொஞ்சமாவது அதைச் சாப்பிட வேண்டும் என்று அன்பால் கட்டளை இடுவார்கள். சாப்பிடவில்லை என்றால் மனவருத்தம் ஆகிறது.

“வருத்தப்படுகிறார்களே…” என்று எண்ணி நான் அதை உட்கொண்டால் என் உடல் தான் நலிவடைகின்றது.

அதே போல் கல்யாணத்திற்கு மற்ற விசேஷத்திற்கோ பத்திரிக்கை கொடுக்கப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

ஒரு முறை தான் வருகின்றீர்கள் நீங்கள் கண்டிப்பாகக் காபி சாப்பிட வேண்டும் அல்லது கொஞ்சம் பலகாரத்தையாவது சாப்பிடுங்கள் என்று சொல்கின்றார்களா இல்லையா…!

நாம் அதைப் பற்றி சிந்திக்கிறோமா என்றால் இல்லை. போற்றுவதற்கு அந்த நிலையைச் செய்கிறோம்.

அதே மாதிரித் தான் அக்காலத்தில் வாதாபி என்ற அரக்க சகோதரர்கள் அகஸ்தியனைக் கட்டாயப்படுத்தி “மாமிசம் சாப்பிட வேண்டும்” என்று சொல்கின்றார்கள்.

எங்கள் விருந்தாளிக்கு நாங்கள் செய்து தான் ஆவோம். நீங்கள் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றார்கள்.

அகஸ்தியர் சரி என்று சொல்கிறார்… ஏனென்றால் அப்பொழுது அவர் புரிந்து கொள்கின்றார்.

வாதாபி ஆடாக மாறுகின்றான்… மற்றவன் அறுத்துச் சமைக்கின்றான் அகஸ்தியனுக்குக் கொடுக்கின்றான்.

சாப்பிட்டு முடிந்தபின் ஏ…வ்வ்வ்…! என்று அகஸ்தியன் ஏப்பம் விடுகின்றான்… ஏனென்றால் அவர் புரிந்து கொள்கின்றார் கணங்களுக்கு அதிபதியாகித் தீமைகளை அடக்கும் வல்லமை பெற்றவன் தான் அந்த அகஸ்தியன்.

அதனால் ஏ…வ்… என்று ஏப்பமிட்டபின் “வாடா வாதாபி…!” என்று தன் சகோதரனை அழைக்கின்றான்.

அவன் அப்பொழுதே ஜீரணம் ஆகிவிட்டானப்பா…! என்று அகஸ்தியர் சொல்கின்றார்.

ஆஹா அப்படியா…! உன்னை நான் இப்போது கொன்று சாப்பிடப் போகின்றேன் பார்… என்று அடுத்தவன் சொல்கின்றான். அகஸ்தியன் தன் பார்வையிலேயே அவனைச் சுட்டு பொசுக்கி விடுகின்றான்.

இராமாயணத்தில் படித்துப் பாருங்கள்… இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் புராணங்களில் இதை எப்படி மாற்றுகின்றார்கள் என்றால் “அகஸ்தியன் கணபதியை வணங்கிச் சென்றதால்தான்…” அரக்கனைக் கொன்றான். ஆகையினால் அந்தக் கணபதியை “வாதாபி கணபதி” என்று சொல்கின்றனர்.

அரக்க உணர்வு கொண்டு மற்றவர்களை வேதனைப்படுத்திய அந்த அரக்கனைக் கொன்றவன் அவன்…! ஆகையினால் “அந்தக் கணபதிக்கு” நீங்கள் அபிஷேகம் அர்ச்சனை செய்தால் உங்கள் பாவம் தோஷம் எல்லாம் போகும் என்று காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைதான்.

யாரும் தப்பாக நினைக்காதீர்கள்…!

அகஸ்தியன் தீமைகளை வெல்லும் வலிமை பெற்றான்… அரக்க உணர்வுகளை அடக்கினான். திருமணமான பின்… தான் கண்ட ஆகண்ட அண்ட்த்தின் உண்மைகளை எல்லாம் மனைவிக்குப் பாய்ச்சினான் அகஸ்தியன்.

இருவருமே ஒருவரை ஒருவர் உயர்த்திடும் நிலையாக… மனைவி உயர வேண்டும் என்று கனவனும் கணவன் உயர வேண்டும் என்று மனைவியும் அருள் உணர்வென்ற கருவை உருவாக்கச் செய்தனர்.

வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து இரு மனமும் ஒன்றாகி… இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிப் பேரருள் உணர்வை உருவாக்கி… உயிரைப் போன்றே உணர்வுகளை எல்லாம் ஒளியாக்கும் தனமை பெற்றனர்.

அவருடைய உணர்வுகள் துருவ நட்சத்திரத்தில் இருந்து வந்து கொண்டேயிருக்கின்றது.

அந்த உணர்வை வலுவாக்கிக் கொண்டால் நம்மை அறியாமல் வரும் தீமைகளைச் சுட்டு பொசுக்குமா இல்லையா… இந்த வழியை யாரும் காட்டவே இல்லையே…!

ஆனால் இப்பொழுது நான் (ஞானகுரு) இந்த விளக்கத்தைச் சொன்னால் “சாமி ஏதோ புதிதாகச் சொல்கின்றார்… கதை விடுகிறார்…” என்று தான் நினைக்கின்றார்கள்.

இயற்கையின் உண்மை நிலைகளை குரு எனக்குக் காட்டினார் அதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல முடிகிறது.