வாழ்க்கையில் கடுமையான தீமைகள் வந்தால் அவைகளை எப்படி வெல்வது..? என்பதைக் காட்டுவதற்காக… குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
“மின்னலைப் பாருடா…!” என்றார். அதனால் அப்போது எனக்கும் அவருக்கும் சண்டை கூட வந்தது.
மின்னலைப் பார்த்து என் கண்கள் பறிபோய்விட்டால் என்ன செய்வது… நான் பிள்ளை குட்டிக்காரன்… எங்கே செல்வது…? என்று மின்னலைப் பார்க்க மறுத்தேன்.
நான் சொன்னதைச் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா… மின்னலைப் பார்…! என்று கட்டாயப்படுத்தி என்னை நிர்பந்தப்படுத்துகின்றார்.
27 நட்சத்திரங்களின் உணர்வுகள் மின்னல்களாக வந்தாலும்
1.அதை அடக்க வல்லமை பெற்ற தாவர இனங்கள் உண்டு…
2.ஆனால் அந்தத் தாவர இனங்களைப் பற்றி எனக்கு என்ன தெரியும்…?
3.அவர் கையிலே அதை வைத்திருக்கின்றார்… மின்னலைப் பாருடா…! என்று சொல்கின்றார்…
4.நான் பார்க்க மாட்டேன் என்று சொல்கின்றேன்… இரண்டு பேருக்கும் தர்க்கம் வருகிறது
நான் பார்க்கின்றேன் அல்லவா… நீ(யும்) பாருடா…! என்று மீண்டும் சொல்கின்றார். பின் நான் பார்க்கும் பொழுது கண்களை அது ஒன்றும் செய்யவில்லை குளு…குளு… என்று இருந்தது எரிச்சலோ இருளடையச் செய்யும் நிலையோ… எதுவும் இல்லை.
அந்த ஒளிக்கற்றைகள் என் உடலுக்குள் செல்கின்றது…!
அவர் கையில் வைத்திருந்த பச்சிலையைத் தான் பார்க்க முடிந்தது… மீண்டும் நான் மின்னலைப் பார்த்து எடுக்க வேண்டும் என்றால் அது மீண்டும் வேண்டும் அல்லவா…!
அப்போது தான் குருநாதர்
1.இந்த உணர்வை உனக்குள் பதிவு செய்கின்றேன்… நான் பதிவு செய்ததை மட்டும் எடு…
2.பச்சிலையைத் தேட வேண்டும் என்று நீ அதற்குச் சென்று விடாதே…! என்று சொல்கின்றார்.
ஏனென்றால் அப்படிச் சென்றால் உடலுக்குப் பிழைப்புக்குத் தேட ஆரம்பித்து விடுவாய். ஆகவே
1.நான் சொன்ன பதிவை உணர்வாக நினைவாக எடுத்து வளர்த்து அதை அருள் ஒளியாகப் பெருக்கி
2.மற்றவர்களுக்கு இருளைப் போக்கும் உபாயத்தைக் காட்டு…! என்று சொல்கிறார்
அகஸ்தியன் எத்தனையோ கோடி மின்னல்களை அவன் நுகர்ந்தவன்... தனக்குள் பேராற்றல்களைப் பெற்றவன்.
எப்படி…?
வியாழன் கோள் தன்னுடைய உபகோள்களை வைத்து 27 நட்சத்திரங்களுடைய சக்தியைக் கவர்ந்து ஒன்றாக்கி… உணர்வின் தன்மை தனக்குள் மற்றதுடன் இணைத்து “ஒளியாகும் தன்மையாக அது எப்படிப் பெறுகின்றதோ…” அதைப் போன்ற ஆற்றலை அகஸ்தியன் பெறுகின்றான்
இந்த உணர்வுகளை எல்லாம் அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுதே பெறப்பட்டு… பல தாவர இனங்களின் சக்திகளை மணத்தால் நுகர்ந்து விஷத்தை ஒடுக்கும் தன்மையாகப் பெறுகின்றான்.
1.ஒளியின் மின் கதிர்களைத் தனக்குள் தாங்கும் சக்தியும்
2.மின் கதிர்கள் செல்லும் இடங்களை அறிந்துணரும் சக்தியும் பெறுகின்றான்.
இன்று எப்படி…
1.எலெக்ட்ரானிக் என்று நுண்ணிய அலைகள் கொண்டு ஆணையிட்டு இயந்திரங்களைத் தன்னிச்சையாக இயக்குகின்றார்களோ
2.செல்ஃபோன் கம்ப்யூட்டர் இவைகள் எல்லாம் வெகு தூரத்தில் இருக்கும் அலை வரிசைகளைக் கவர்ந்து இயங்குவது போன்று
3.அகண்ட நிலைகள் வருவதை எல்லாம் கவரக்கூடிய திறன் அகஸ்தியனுக்கு வருகின்றது
4.மின் கதிர்கள் எங்கெல்லாம் செல்கின்றதோ… எதை எதை நுகர்கின்றதோ
5.அந்த உணர்வின் அதிர்வுகளை எல்லாம் அகஸ்தியன் காண்கின்றான்.
அகஸ்தியன் பெற்றதையெல்லாம் “நீ உனக்குள் எப்படி உருவாக்கிக் கொள்ள முடியும்…” என்ற நிலையை உணர்த்தி அதை எனக்குள் வித்தாகப் பதிவு செய்தார் குருநாதர்.
உங்களுக்குள்ளும் அதை இப்போது வித்தாகப் பதிவு செய்கின்றேன் அந்த உண்மை நிலைகளை நீங்களும் பெற முடியும்.
இதை எல்லாம் எதற்காகப் பதிவாக்குகிறேன்…? இந்த உடலுக்குப் பின் என்ன வேண்டும்…? என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குத் தான்.… அது உங்கள் அபிப்ராயம் தான்…!
குருநாதர் அனைத்தையும் எனக்குக் காட்டினார். டிவி அலைகளும் மற்ற கம்ப்யூட்டர் உணர்வலைகளும் என்னவெல்லாம் செய்யும்…? (மேலே முதலில் சொன்னபடி) என்று காட்டினார்.
டி.வி. பெட்டியில் எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ வீட்டில் இருந்த இடத்திலிருந்து படத்தைக் காண முடிகின்றது இன்ன இடத்தில் இருந்து வருகின்றது என்று தெரிந்து… அதைத் திருப்பி வைத்தால் உடனே அதை நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது… “எங்கிருந்தாலும் அதைக் காண முடிகின்றது…”
அதே போன்று தான்
1.நீங்கள் எங்கே… எந்த இடத்தில் இருந்தாலும்… அந்த இருந்த இடத்திலிருந்து
2.அகண்ட அண்டத்திற்கும் எண்ணத்தைப் பரப்பிய உணர்வின் ஒளிக் கற்றைகளை
3.குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்குள் நான் பாய்ச்சுவதை நீங்கள் எண்ணி அதை எடுக்க முடியும்.
நம்பிக்கை இருந்தால் நிச்சயம் எடுக்கலாம்…!
ஆனால் நம்மால் முடியுமா…? குருநாதர் சக்தி கொடுத்தார்… சாமி எல்லாவற்றையும் பார்த்தார்… நான் எப்படிப் பார்ப்பது…! என்று எண்ணத்திற்கு நீங்கள் செல்லக்கூடாது.
குருநாதர் பைத்தியக்காரராகத் தான் தெரிந்தார்… அகண்ட அண்டத்தில் உள்ள எல்லாவற்றையும் சொன்னார். நான் அதைப் பதிவு செய்தேன்… பார்த்தேன்… அறிந்தேன்...!
அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்…! ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து… ஈசன் வீற்றிருக்கும் ஆலயத்தைச் சுத்தம் செய்… நீ அந்தச் சேவையைச் செய் என்றார் குருநாதர்.
அதைத்தான் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறேன். ஆனால்
1.நான் சேவை செய்ய வரும் பொழுது நீங்கள் கதவை இறுக்கி மூடிக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்.
2.நீங்கள் கதவை (மனக் கதவு) மூடி கொள்கின்றீர்கள்.. நான் என்ன செய்வது…!
சற்று சிந்தித்துப் பாருங்கள்.