ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 24, 2023

சுவாசிப்பது உமிழ் நீராக மாறி உடலுக்குள் சென்று என்ன செய்கிறது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்

குருநாதர் என்னை மலைப் பகுதிகளுக்கு எல்லாம் அழைத்துச் சென்று 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படக்கூடிய மின்னல்கள் ஒளிக்கற்றைகளாகப் பூமிக்குள் பரவுவதை “எது எது எப்படிக் கவருகிறது…?” என்று காட்டினார்.

அதிலே ஜோதிப்புல் என்றும் காட்டினார்… ஒளிக்கற்றைகளை தன் விழுதுகளில் கவர்ந்து கொண்ட பின் மோதும் போது வெளிச்சத்தை எப்படிக் கொடுக்கின்றது…? இயற்கையினுடைய நிலைகள் எப்படி சந்தர்ப்பங்கள் வருகிறது என்று அனுபவத்திலே காட்டினார்.

குருநாதருடன் அலைந்து தான் இதையெல்லாம் தெரிந்து கொண்டேன். காட்டிற்குள் சாப்பாடு வெறும் பேரீச்சம்பழம் தான். இல்லை என்றால் ஒரு பச்சிலையைக் காண்பிப்பார். அதைச் சாப்பிட வேண்டும். தண்ணீரைக் குடித்துக் கொள்ள வேண்டும். இதுதான் உணவு.

அதே சமயத்தில் அரிசியையும் மோரில் ஊற வைத்த கத்திரிக்காய் மிளகாய் மாங்காய் ஒரு டப்பா இதையும் எடுத்துச் செல்லும்படி சொல்வார். டப்பாவில் தண்ணீரை ஊற்றி அதிலே எல்லாவற்றையும் போட்டு வேக வைத்துக் கஞ்சியாகக் குடிக்கும்படி சொல்வார்.

சோறு கிடையாது…! வெறும் தண்ணீராகக் கஞ்சியாகக் குடிக்கும்படி சொல்வார். ஏனென்றால் அரிசி சாதம் சாப்பிட்டுப் பழகியதனால் அந்த உணர்வின் சத்து உடலிலிருக்கும் அணுக்களுக்கு அத்தகைய உணவு கிடைக்கவில்லை என்றால் அது மாறிவிடும்.

ஆகையினால் உன்னை இப்படிச் சாப்பிடும்படி சொன்னேன் என்று அதிலேயும் விளக்கம் கொடுப்பார்.

காரணம்... பச்சிலையைச் சாப்பிடுகின்றாய்…! இதே உணர்வு உடலில் விளைந்தால் அதற்குண்டான வித்தியாசங்களாக வந்துவிடும். அதை மாற்ற வேண்டும் என்பதற்காக இதையும் சொல்லி அதையும் சொல்லி ஒவ்வொரு வகையிலும் அதைச் சீராக்கிக் கொண்டு வருவார்.

சக்தி இருக்கிறது என்று காட்டுக்குள் எடுத்தாலும் உணவுப் பழக்கத்தால் எப்படி மாற்றங்கள் ஏற்படுகின்றது…? என்று காட்டுவார்.

அப்போது அவர் என்ன முறைப்படி கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கப்படும் பொழுது அது தேவாமிர்தமாக இருக்கும். வெயில் காலங்களில் நீர் மோரைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்…? ஒரு மாங்காயை உப்பைத் தொட்டுத் தின்றால் எப்படி இருக்கும்…?

இப்பொழுது வாயில் உமிழ் நீர் சுரக்கின்றது அல்லவா… இது எங்கிருந்து வருகின்றது…? ஒன்றுமே உங்களுக்குக் கொடுக்கவில்லை… ஆனால் மாங்காயைப் பற்றிச் சொன்ன உணர்வுகள் செவிகளில் படுகிறது… உங்களுக்கு அதைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகின்றது.

நுகர்ந்த உடனே அந்தப் புளிப்பு கலந்த உமிழ் நீராகச் சுரக்கின்றது. இது சாப்பாட்டுடன் கலக்கின்றது

இதே போன்றுதான் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் கண்ணுற்றுப் பார்த்து நுகரும் உணர்வுகள்… எதைக் கேட்டறிந்தாலும் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்துவிடுகிறது.

ஆனால் அது தீமை என்ற நிலையில் இருந்தால் விஷத்தன்மையாக மாறிவிடுகின்றது ஆக வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டு அடுத்துப் பிறருடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் கேட்டால் இந்த விஷங்கள் உமிழ் நீராக மாறி உடலுக்குள் சேர்ந்து ஆகாரத்துடன் கலந்து வயிற்றிலே “கட…புடா… கட…புடா…! என்று ஆகிறது.

இது ஏன்… எதனால்…? என்று நாம் அறிவதில்லை வயிறு நிறையச் சாப்பிட்டபின் சஞ்சலமாகச் சலிப்பாகப் பேசுவதைக் கொஞ்ச நேரம் கேட்டுப் பாருங்கள்.

அது எல்லாம் உமிழ் நீராக மாறி அடுத்து நெஞ்சு எரிகிறது கப கப என்று எரிகிறது என்பார்கள். பேசிய உணர்வு கவரப்பட்டு இப்படி உமிழ் நீராக மாறி நல்ல ஆகாரத்தையும் கூட நுகர்ந்த உணர்வுகள் மாற்றி விடுகின்றது.

இதை எல்லாம் குருநாதர் அனுபவத்தில் கொடுத்தார். நான் இதைப் புத்தகத்திலோ மற்ற நிலைகளிலோ பார்த்துப் படித்துச் சொல்லவில்லை. நம் உடலுக்குள் என்னவெல்லாம் நடக்கிறது…? என்று காட்டிற்குள் வைத்து இதை எல்லாம் அறியும்படி செய்வார்.

“இந்தப் பக்கம் வா…” என்று அங்கே வேறு ஒரு செடியைக் காண்பிப்பார்… அதனின் மணத்தை நுகரு…! என்பார் நுகர்ந்தவுடன் அந்த உணர்வுகள் சேரும்… உமிழ் நீர்கள் எனக்குள் மாறும்.

நீ சாப்பிட்ட தண்ணீரின் சத்து இப்போது எப்படி வருகிறது பார்…! என்று காட்டுவார். நீ நுகரும் இந்த மணத்திற்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்று நுகரச் சொல்லி… அறியச் செய்து… உணரும்படி செய்வார்.

இதையெல்லாம் முழுமையாக உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்குத் தான் சொல்கிறேன். காரணம் உங்கள் சந்தர்ப்பம் அந்தந்த நேரமோ அப்போது இந்த உண்மைகளை நீங்கள் அறிந்து… ஞானத்தின் வழியிலே சீராகச் செல்வதற்கு இது உதவ வேண்டும் என்பதற்காகத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

ஆகவே இந்த அருள் உணர்வைப் பெருக்கிக் கொள்ளுங்கள். மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடிப் பொழுதும் உங்களுக்குள் வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.